தேடும் கண்களே… தேம்பும் நெஞ்சமே… | Tamil Short Story

அந்தப் பேனா முனை வெள்ளைத் தாளின் மீது ஒரு அசைவுமின்றி ஒரே இடத்தில் குத்தி நின்றுகொண்டிருந்தது. சிந்தனைகள் தடைபட்டு நின்றதால் நீண்ட நேரம் எழுத முடியாமல் அப்படியே அமர்ந்தபடி தன் மேசைக்கு நேராக மேலே சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் மாலையிட்ட படத்தை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், கவின். அவன் அப்பா இறந்தபோதுக்கூட அவனுக்குள் இத்தனை சோகம் மூளவில்லை. அப்பா என்றால் என்ன என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத மூன்று வயதில் அவர் இறந்தார் என்பதால் அப்படி அழவில்லை என இன்றுவரை தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறான். என்றாவது அப்பாவை மீண்டும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால் அவரை இறுக்கி அணைத்து ஆரத்தழுவி கதறி அழவேண்டும் என அவனுக்குத் தீராத ஆசை.

படத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் அப்பாவைப் பார்த்துவிட்டு அப்படியே மீண்டும் அந்த வெள்ளைத் தாளைப் பார்க்கிறான். அதில், 'ப்ரியா என்ன இப்படி ஏமாத்திட்டு போயிருக்கக் கூடாது. நானும் அவள அவ்வளோ நம்பியிருக்கக்கூடாது', என எழுதியிருக்கிறது. ஒரு முழுநீள நாவலை ஒரே இருப்பில் எழுதி முடித்தவனுக்கு, தன் முன்னாள் காதலி குறித்து எழுத அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. ஒன்றாக ஊர் சுற்றியது, தனிமையில் முத்தமிட்டுக்கொண்டது, கலவியுற்றது, சேர்ந்து குளியலறையில் நீராடியது, உலகத்தை மறந்து ஆயிரக்காணக்கான பாடல்களைக் கேட்டது என பல நினைவுகள் அவனுள்ளே இருந்தாலும், அவள் ஏமாற்றியது மட்டுமே தற்போது அவன் நினைவுகளை நிரப்பியிருக்கிறது. 

Representational Image - Source: Freepik

அடுத்த வார்த்தை எழுத முடியாமல் மீண்டும் தன் அப்பாவைப் பார்த்து, "அப்பா, என்னால முடியல... உங்களப் பாக்கணும் போல இருக்கு... ப்ரியாவப் பத்தி ஞாபகமும் திரும்பத் திரும்ப வந்துக்கிட்டே இருக்கு... இந்த வலிய என்னால தாங்கிக்க முடியல... நானும் அங்க வந்துடுறேன்..." எனக் கூறி கண்கள் கலங்கிய படி அப்படியே மேசை மீது குனிந்து அழுதான். அப்போது, பின்னந்தலையில் ஏதோ பட்டு பின் மேசையில் விழுந்ததுபோல் உணர, சட்டென்று எழுந்தான். அது ஒரு காய்ந்த செவ்வந்திப்பூ. அதை அதிர்ந்து பார்த்துவிட்டு அப்படியே மீண்டும் மேலே பார்க்க, அப்பாவின் படத்திலிருந்த பூமாலை லேசாக ஆடிக்கொண்டிருந்தது. அந்த மாலையில் இருந்த செவ்வந்திப்பூக்களில் ஒன்று மட்டும் உதிர்ந்த தடம் இருக்க, அதிர்ச்சியானான்.

திடீரெனத் தன்னுடன் யாரோ அந்த அறையில் இருப்பதைப் போன்ற உணர்வு. பதற்றத்துடன் எழுந்து அறையைச் சுற்றும் முற்றும் பார்க்கிறான். பார்த்துவிட்டு  அப்பாவின் படத்தை மீண்டும் பார்க்கிறான். அந்தப் படத்தின் ஃப்ரேமில் இருந்த கண்ணாடியில் அப்பாவின் முகத்தின் மீது தன் பிம்பத்தைப் பார்த்து ஒரு நொடி கலக்கமாகிறான். அந்தப் பதற்றமான முகத்தில் அப்பாவின் சிரிப்பு சேர, தான் சிரிப்பதுபோலவே அவனுக்குத் தோன்றியது.

குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தவனுக்கு இரண்டாவது அதிர்ச்சி. சற்றும் எதிர்பாராத நேரத்தில் குளியலறையிலிருந்து 'ஆகாசவாணி நீயே என் ராணி...' என அவனக்கு மிகவும் பழக்கமான பாடல் ஒலித்தது. சில வினாடிகள் அதிர்ந்து மீண்டும் சாந்தமாகி பெருமூச்சுவிட்டான். 

அது அவனுக்குப் புதிதல்ல. அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் எல்லா வீடுகளில் இருக்கும் குளியலறைகளையும் தரைத்தளத்திலிருந்து மொட்டைமாடி வரை இணைக்கும் விதமாக பெரிய துளை ஒன்று இருக்கும். குளியலறை, கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை வெளியே தள்ள அப்படியொரு அமைப்பு. அந்தத் துளை வழியாக எப்போதுமே கீழ் வீட்டிலும், மேல்வீட்டிலும் என்ன நடந்தாலும் கேட்கும். அவன் கீழ் வீட்டுக்கு புதிதாக ஒரு பேச்சிலர் குடி வந்திருக்கிறார். அவர் எலக்ட்ரீஷியன் என அம்மா கூறியிருந்தார். 

அதனால்தானோ என்னவோ எப்போதும் ஒரு அமானுஷ்ய எதிரொலி கலந்து இளையராஜா, ரஹ்மான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களும் கீழ்வீட்டில்ருந்து கேட்கும். ப்ரியா அவனை விட்டுச் சென்ற பிறகு அவளுடன் இணைந்து கேட்ட பல பாடல்கள், இப்போது மீண்டும் மீண்டும் அந்தத் துளை வழியாகக் கேட்கும்போதெல்லாம் வழக்கம்போல பழைய நினைவுகளுக்குள் சென்றுவிடுவான். குறிப்பாக, அன்றுகேட்ட 'ஆகாசவாணி' பாடல் அவனை இன்னும் சோகத்தில் ஆழ்த்தியது. 

ப்ரியாவை முதல் முதலாக தன் நண்பனின் திருமண வீட்டில் சந்தித்தபோது இருவரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். அந்த உரையாடலிலேயே அவள் மீது காதலில் விழுந்துவிட்டான். அவளுக்கும் தன்னைப் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் மிகக் கவனமாகப் பேசினான். அவனுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார் எனக் கேட்டபோதுகூட அவனைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என நினைத்து இளையராஜாவைத் தவிர வேறு யாருடைய பாடலையும் விரும்பிக் கேட்பதில்லை என்றான். ஆனால் அவளோ அதற்கு எந்த விதச் சலிப்பும் இல்லாமல், "எனக்குப் புடிச்ச மியூசிக் டைரக்டர் தேவாதான்" என்றாள். தன் முகத்தில் தானே மனதுக்குள் உமிழ்ந்துகொண்டு அவளை மேலும் ரசிக்கத்தொடங்கினான்.

"நீயும் தேவா பாட்டெல்லாம் ரசிச்சு கேட்டுப் பாரு... உனக்கும் பிடிக்கும்..." எனக் கூறி அவனை முதல் முதலாக அவள் கேட்கவைத்தப் பாடல்தான் 'ஆகாசவாணி'. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்களைக் கேட்கத் தொடங்கி, ஒருவரோடு ஒருவர் அந்த இசையாலேயே காதல்வயப்பட்டார்கள். ஆனால், அதை எப்படிச் சொல்லிக்கொள்வது என இருவருக்குள்ளும் கூச்சம் எஞ்சியிருந்தது. 

ஒரு நாள், "எனக்குப் புடிச்ச தேவா பாட்டே கேட்டுட்டு இருக்கோம்... உனக்குப் புடிச்ச இளையராஜா பாட்டு ஏதாவது கேக்கலாமா" என அவள் கேட்டதும், இதுதான் சந்தர்ப்பம் என, 'ஓ ப்ரியா ப்ரியா... என் ப்ரியா ப்ரியா' பாடலை அவளுக்குப் போட்டுக்காட்டி மறைமுகமாக தன் காதலை வெளிப்படுத்தினான்.

அதைப் புரிந்துகொண்ட அவள் வெட்கப்பட, பதிலுக்கு அவனும் வெட்கப்பட அந்த வெட்கமே இருவரையும் காதலை வெளிப்படுத்த உதவியது. அதன் பிறகு நிறைய காதல், இசை, முத்தம், கலவி, இன்பம் எனத் தொடர்ந்த கதை பிரிவில் முடிந்தது. அந்த அனைத்து நினைவுகளும் 'ஆகாசவாணி' கேட்ட அந்த ஒரு கணத்தில் அவனுக்குள் நிரம்பின. சில நொடிகள் கண்களை மூடி அந்த நினைவுகளை ரசித்து, அப்படியே கண்கலங்கி நின்றவனுக்கு மீண்டும் அறையில் யாரோ இருப்பதாக தோன்றியது. 

கண்களைச் சட்டெனத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை. "அம்மா... அம்மா..." என அழைத்தபடியே பதற்றத்துடன் தன் அறையை விட்டு வெளியே வந்தான். வீடு முழுக்கத் தேடிப் பார்த்தும் அம்மா எங்குமில்லை. அம்மாவைத் தேடிக்கொண்டே வீட்டைவிட்டு வெளியே வரும்போது, அம்மா அவனுக்கு எதிரே வந்தார். 

"எங்கம்மா போன... ஒரு நிமிசம் பயந்துட்டேன்". கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்ற அம்மாவைப் பின்தொடர்ந்தான்.

"கிறுக்கா... எதுக்கு டா பயந்த".

"இல்ல... திடீர்ன்னு ஆளக் காணோமேன்னு".

"நம்ம வீட்டு ஃப்ரிட்ஜு ஒரு வாரமா ரிப்பேரா இருக்கு... உன்கிட்ட எவ்வளவோ சொல்லிப்பாத்துட்டேன்... நீயும் கேக்குறதா இல்ல... அதான் அந்தக் கீழ்வீட்டுப் பையன் இருக்கான்ல... எலக்ட்ரீஷன்... அவன்கிட்ட கேட்டேன்... அவனுக்கு இதெல்லாம் பாக்க தெரியாதாம் இதுக்கு ஏதோ தனி டெக்னீஷன் இருக்காங்களாம்... அவனுக்குத் தெரிஞ்ச ஒருத்தன அனுப்பி விடுறேன்னு சொன்னான்".

அம்மா இதைக் கூறியவுடன், "ஃப்ரிட்ஜுல என்ன பிரச்சன...", எனக் கேட்டுக்கொண்டே தன் அறைக் கதவுக்கு அருகே இருந்த ஃப்ரிட்ஜின் பக்கத்தில் சென்று அதைத் திறந்து பார்த்தான்.

"பாவிப்பயலே... ஒரு வாரமா சொல்லிக்கிட்டு இருக்கேன் உன் காதுல விழவே இல்லையா...", எனக் கோவமாகச் சொல்ல

"எதாவது வேலையா இருந்திருப்பேன்மா... கவனிச்சிருக்கமாட்டேன்" என மழுப்ப, அந்த ஃப்ரிஜ்ஜின் மீது வைக்கப்பட்டிருந்த சில திருமண அழைப்பிதழ்கள் அவன் கண்ணில்பட்டன. அதில் ஒரு அழைப்பிதழில் 'மணமகள்: ப்ரியா' என எழுதியிருந்தது. 

அதை அவன் கையில் எடுக்கும்போது சமையலறையிலிருந்து அம்மா, "நீ இப்போலாம் எங்க யார் என்ன பேசினாலும் கவனிக்கிற... உன்னோட சொந்த உலகத்துலதான் இருக்க", எனக் கூறியபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்து அழைப்பிதழும் கையுமாக அவனைப் பார்த்துவிட்டு, "பழசையே நெனச்சுக்கிட்டு இருக்காதடா... அது முடிஞ்ச கத... சீக்கரம் ஒரு நல்ல வேலையா தேடு, ஏதாவது ஆபிஸ் வேலன்னு போனா மனசோட கவனம் மாறும்ல. எவ்வளோ நாள்தான் எழுதிக்கிட்டே இருக்கப்போற... எழுதுறதுக்காக யோசிக்கிறேங்கிற பேர்லதான் முக்காவாசி நேரம் பழைய நெனப்புலயே இருக்க", எனக் கூறிக்கொண்டே அவன் கையிலிருந்த அழைப்பிதழை பக்குவமாக பிடுங்கினார்.

அப்போது அம்மாவைப் பார்த்து, எதுவும் நடக்காததுபோல், "அதவிடு... ஃப்ரிட்ஜுல என்ன பிரச்சன..." என பேச்சை மாற்றினான்.

"தெரியல டா... நல்லாதான் ஓடிக்கிட்டு இருக்கு... திடீர்னு தானா டீ-ஃப்ராஸ்ட் ஆகி தண்ணி லீக் ஆக ஆரம்பிச்சிருது..."

"இவ்வள்ளோ பழைய ஃப்ரிட்ஜுல பிரச்சன இல்லனாதான் அதிசயம்"

"இவ்வளோ வக்கணையா பேசுறல்ல, அப்போ புது ஃப்ரிட்ஜு வாங்கிப்போடலாம்ல"

"ஆங் ஆங்... வாங்கலாம்... நாளைக்கு அந்த அண்ணே எத்தன மணிக்கு ஆள் அனுப்புறேன்னு சொன்னாரு"

"மதியம் லஞ்சு டைமுக்கு அப்பறம்ன்னு சொன்னாரு"

"சரி... சரி...", எனக் கூறியவன் தன் அறைக்குள் சென்றான்.

அவனைப் பார்த்து ஏதோ யோசித்த அம்மா, "எதுக்கும் அவன் காலையில வேலைக்குக் கெளம்பும்போது நீ போய் ஒருதடவ ஞாபகப்படுத்து", என்றார்.

"அதுக்கு எதுக்கு மா நான்... நீயே சொல்லிறவேண்டியதான"

"ஆமா டா... இப்படியே மத்தவங்கக்கிட்ட இருந்து விலகியே இரு... அப்பார்ட்மெண்டுல இருக்குற எல்லாரும் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... துரு துருன்னு சுத்துன பையன் ஏன் திடீர்ன்னு இவ்வளோ அமைதியாய்ட்டான்... ஒருத்தரையும் பாத்து பேசமாட்டேங்கிறான்னு என் கிட்ட கேக்குறாங்க"

"அதெல்லாம் இல்ல மா... நான் முன்னாடி மாதிரிதான் இருக்கேன்..."

கலங்கிய கண்களுடனும் குரலுடனும் "சும்மா பொய் சொல்லதடா... போன எட்டு மாசத்துல யாருக்கிடயாவது சரியா மூஞ்சிக் குடுத்து பேசியிருக்கியா... கீழ் வீட்டுப் பையன் மாதிரி புதுசா குடிவந்தவங்களுக்கு நீ சாதாரணமாவே சிடுமூஞ்சின்னுதான் தோணும்... அப்படிதான் இருக்க", என்றார் அம்மா.

"திரும்பத் திரும்ப அதையே சொல்லத மா... நான் முன்னாடிமாதிரிதான் இப்பவும் இருக்கேன்... அதுவும் கீழ்வீட்டு அண்ணாக்கு என்ன நல்லா தெரியும்... அப்பார்ட்டுமெண்ட் லாபி, அசோசியேஷன் மீட்டிங், லிஃப்ட்டுன்னு அப்பப்போ பாத்தா பேசிக்குவோம்", என்றான்.

"யாரு... நீயும் அவனும் பேசிக்கிட்டிங்க? இத நான் நம்பணும்?"

சற்று சுதாரித்தவாறு "சரி... பேசிக்கமாட்டோம்... பாத்தா கைக்காட்டிபோம் சிரிச்சுப்போம்... அதுக்கு என்ன இப்போ... சிடுமூஞ்சின்னு நெனைக்காம இருக்க அது போதும்", எனக் கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

அன்று இரவு அம்மா கூறியவற்றைப் பற்றி மீண்டும் யோசித்துப்பார்த்தான். வேலைக்கு போனால் ஒருவேளை தனக்கு ஒரு மாற்றம் இருக்குமோ என எண்ணி தன்னுடையே சான்றிதழ்கள் சேகரிக்கப்பட்ட கோப்பு எங்கே எனத் தேடி சிறிது நேரத்தில் அலமாரியிலிருந்து அதைக் கண்டுபிடித்தான். தரை மெத்தையில் அமர்ந்தபடி சான்றிதழ்கள் எல்லாவற்றையும் சரிபார்த்தான்.

அதைச் சரிபார்த்துக்கொண்டிருக்கும்போதே தூக்கக் கலக்கம் வர அப்படியே மெத்தைக்குப் பக்கத்தில் தரையில் அந்தக் கோப்பை வைத்துவிட்டு மின்விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும்போதே படுத்தான். அப்போது மூடியிருந்த தன் அலமாரிக் கதவு துருப்பிடித்த 'கீச்' என்ற ஒலியுடன் தானாகத் திறந்தது. அரைத் தூக்கத்தில் இருந்த கவின் அந்தச் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். திறந்திருந்த அலமாரிக் கதவைப் பார்த்து, சான்றிதழ்களை எடுத்தபோது கதவைச் சரியாக அடைக்க மறந்திருப்போம் என நினைத்து திறந்த கதவை அடைத்து தாளிட்டான்.

அப்போது அவனுக்குப் பின்னாலிருந்து 'வானெங்கும் நீ மின்ன மின்ன' என குளியலறையிலிருந்து பாடல் கேட்டது. திரும்பி குளியலறையைப் பார்த்தால் தன் மின்விளக்குகளின் ஒளி லேசாக அதனுள் பரவி கொஞ்சம் கொஞ்சமாக மங்கி குளியலறையின் உள் பகுதி கும்மிருட்டாக இருந்தது. 

அந்த இருட்டுக்குள் ஒரு சின்ன ஜன்னல் வழியே துர்நாற்றத் துளையிலிருந்து மெல்லிய ஒளிக் கதிர் வீசிக்கொண்டிருந்தது. அந்தக் காட்சியே அமானுஷ்யமாக இருக்க சட்டென்று குளியலறைக் கதவை அடைத்துவிட்டு, "சாயங்காலம் வர தேவா ஃபேன், இப்போ ஹாரிஸ் ஃபேன் ஆயிட்டாருபோல", என நக்கலடித்துவிட்டு தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். மீண்டும் தூங்கலாம் என முடிவெடுத்தவன், மின்விளக்கை அணைக்கச் சென்று பின் ஏதோ யோசித்துவிட்டு, மின்விளக்கை எரியவிட்டபடியே படுத்தான். இப்போது அடைக்கப்பட்ட கதவின் வழியாக அந்தப் பாடல் மெல்லிய ஒலியாகக் அவனுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அதைத் தாங்க முடியாமல் மீண்டும் 'ப்ரியா' நினைவுகள் வந்து அப்படியே கண்ணீர்விட்டு அழுது பிறகு அதைக் கேட்க முடியாமல் தலையணையை வளைத்து இரு காதுகளையும் அடைத்தபடியே உறங்கினான்.

அதிகாலை 4 மணி அளவில், ஆழ்நிலைத் தூக்கத்தில் இருக்கும்போது அவன் அறைக் கதவை யாரோ பலமாக ஐந்து ஆறு முறை தட்டும் சத்தம் கேட்பதுபோல் தோன்ற விடுக்கென எழுந்தான். எழுந்து கதவைப் பார்க்க, அது அமைதியாகத்தான் இருந்தது. மணியைப் பார்த்துவிட்டு மீண்டும் படுக்கலாம் என யோசிக்கும்போது கதவை மீண்டும் நான்கைந்து முறை யாரோ பலமாகத் தட்டி இவனுக்குள் அச்சம் வர, தட்டி முடித்த அடுத்த நொடியே "டேய் கவின் கதவத் தொறடா", என அம்மா பதற்றமான குரலில் அழைத்தார்.

அம்மாவின் பதற்றத்தைப் புரிந்துகொண்டு அவசரமாக எழுந்து கதவைத் திறந்தான். டேய் இங்கப் பாருடா என ஃப்ரிட்ஜைக் காட்ட அதிலிருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. "மறுபடியும் டீஃப்ராஸ்ட் ஆயிருச்சு... எப்பவும் காலைல இல்லனா மதியம்தான் ஆகும்... இப்போ ராத்திரி ஆகிருக்கு..."

"அதுக்கு ஏன் மா கதவ இவ்வள்ளோ பதட்டமா தட்டுன?"

"டே கிறுக்கா... ஃப்ரிட்ஜுல இருந்து தண்ணி வடிஞ்சா முதல்ல உன் ரூமுக்குதான் டா வரும்... நீ வேற மேட்ரஸ்ஸ தரையில போட்டுத் தூங்குவ... பக்கத்துல லேப்டாப், மொபைல்னு எல்லாமே தரையிலதான் இருக்கும்... அதான்..." எனக் கூறிக்கொண்டே தரையில் பரவிக்கிடந்த தண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தார். 

இதைக் கூறியவுடன் பதறியடித்து மீண்டும் தன் அறைக்குள் சென்று சான்றிதழ் கோப்பு இருந்த இடத்தைப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. அவன் கோப்பை வைத்த இடத்தில் அது இல்லை.

அப்போது, "டேய்... என்னடா இது...", என அம்மா கேட்க, அவளை அதே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான்.

அங்கே தரையைத் துடைத்துக்கொண்டிருந்த அம்மா, அவன் அறை வாசலின் அருகே அமர்ந்து தரையைக் காட்டினார்.

"என்னாச்சு...", எனப் பதற்றத்துடன் கேட்டான்.

"உன் ரூம் வாசல் வர தண்ணிய ஏற்கனவே தொடச்சு வச்சிருக்க...", எனக் காட்டினார்.

அதைப் பார்த்த கவினுக்கு மேலும் அதிர்ச்சி. அவன் அறை வாசல் வரை பரவியிருந்த தண்ணீர் அவன் அறைக்குள் மட்டும் இல்ல. அவன் அறையின் தரையில் ஏற்கனவே தண்ணீர் துடைக்கப்பட்ட தடம் மட்டும் லேசான ஈரப்பதத்துடன் இருந்தது. உடனே விறுவிறுவென தன் அலமாரிக் கதவைத் திறந்து பார்த்தால், அதில் அவன் கோப்பு முந்தைய இரவு எடுக்கப்பட்ட இடத்தில் பத்திரமாக இருந்தது. உடலெங்கும் புல்லரித்து உறைந்துபோனான். அப்படியே உறைநிலையில் வந்து வீட்டு வரவேற்பறையின் நாற்காலியில் அமர்ந்து அதுவரை நடந்த அனைத்தையும் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தான்.

அப்பா படத்திலிருந்து பூ விழுந்தது, பல நாட்களாக அவன் அறையில் அவனோடு வேறு யாரோ இருப்பதாகத் தோன்றுவது, அலமாரிக் கதவு தானாகத் திறந்தது, தரை துடைக்கப்பட்டு இருந்தது, கோப்பு பத்திரப்படுத்தப்பட்டது என எல்லாமே அவனுக்குக் கலக்கத்தைத் தந்தன. அப்படியே மணி ஐந்து, ஆறு ஏழு எனக் கடக்க, அப்படியே இருந்த அவனைப் பார்த்த அம்மாவுக்கு ஒரே குழப்பம்.

"என்னாச்சு கவின்... மறுபடியும் ப்ரியாவப் பத்தி தாட்ஸா?", என கேட்டார்.

"இல்லமா... இது வேறப் பிரச்னை..."

"என்னனு சொல்லுடா... என்கிட்டதான் எதுவும் மறைக்கமாட்டியே"

அம்மா இதைச் சொன்னவுடன், சில நொடிகள் ஆழ்ந்து யோசித்து, பெருமூச்சு எடுத்து, "நான் சொன்னா, பயப்படக்கூடாது...", எனக் கூறி தன் அம்மாவின் உள்ளங்கைக்குள் தன் கையைப் பதித்து இறுகப்பற்றிக்கொண்டான்.

"டேய் முதல்ல என்னனு சொல்லுடா"

சிறிய தாமதம் விட்டு, எச்சிலை விழுங்கி, "எனக்கென்னமோ அப்பா இங்க இருக்குற மாதிரியே கொஞ்ச நாளா தோணிக்கிட்டே இருக்கு..."

"புரியலடா". புன்னகைத்தபடியே அம்மா பதில் கூறினார்.

"அம்மா... அப்பாவோட ஆவி இன்னும் இங்க சுத்திக்கிட்டு இருக்கு மா", எனக் கூறி அவன் அதுவரைக் கண்ட அனுபவத்தையெல்லாம் சொன்னான்.

அதை பொறுமையாகக் கேட்ட அம்மா, "திரும்பவும் வந்துட்டாரா... போனதடவ அனுப்பும்போதே சொல்லிதான் அனுப்புனோன்... வராதீங்கன்னு... உங்கப்பா இருக்காரே... எங்க உயிரோட இருக்கும்போதே நான் சொல்றதக் கேக்காம ஒத்தக் காலுல நிப்பாரு... இப்போ ஆவியா காலே இல்லாதப்போவா நான் சொல்றதக் கேக்கப்போறாரு", என மிகச் சுலபமாக பதிலளித்தார்.

"திரும்பவும் வந்துட்டாரானா? புரியல", அதிர்ந்த குரலில் கேட்டான்.

"உனக்கு ஞாபகம் இல்லயா... உன்னோட எட்டு வயசு வரைக்கும் நீ திடீர் திடீர்னு தூக்கத்துல அழுவ... அழும்போதெல்லாம் 'அப்பா, அப்பா'னு பொலம்புவ... டாக்டர்கிட்டல்லாம் காட்டியும் ஒன்னும் சரியாகல... அப்போதான் ஒரு நாள் பாதித் தூக்கத்துல இருந்து எழுந்து 'அப்பா...'னு கத்தி ஊரக்கூட்டுன... என்னனு கேட்டதுக்கு தூக்கத்துல இருக்கும்போது அப்பா உன்ன வந்து இறுக்கமா கட்டிப்புடிச்சாருனு சொன்ன...", என்றார் அம்மா.

"ஏற்கனவே வந்தாரா", அதிர்ச்சியுடன் கேட்டான்.

"முழுசா சொல்றதக் கேளுடா... முதல்ல அது கனவுனுதான் நெனச்சேன்... ஆனா அதுக்கு அடுத்து கொஞ்ச நாளா வீட்டுல பாத்திரம் உருட்டுற சத்தம், பீரோ தொறக்குற சத்தம்லாம் தானா கேக்கும்... அப்போதான் எனக்கு கொஞ்சம் பயம் வந்துச்சு... சரின்னு ஒரு கோடங்கிய கூப்பிட்டு என்ன ஏது பாக்கச் சொன்னப்பதான், நீ உன் அப்பாவக் கட்டிப் புடிச்சு அழணும்னு ஆசப்பட்டியாம் அதுக்காகத்தான் அவரு திரும்ப வந்திருக்குறாரம்னு சொன்னாரு... அப்பறம் உன் கையால அப்பாவுக்கு ஒரு நாள் படையல் போட்டு, இனி திரும்ப வராதீங்கன்னு சாமி கும்பிட்டோம்... அதுக்கு அப்பறம் இப்பவர அவரு திரும்ப வரல... நீயும் தூக்கத்துல அழுது பொலம்புறத நிறுத்திட்ட... இப்போ மறுபடியும் சேட்டைய ஆரம்பிச்சுட்டாரா உங்கப்பா..."

"என்னமா இவ்வளோ ஈசியா சொல்ற"

"விட்றா... என் புருஷன்தான்... ஆவியா இருந்தாலும் எனக்கு அடங்கிதான் போவாரு... அந்தக் கோடங்கி போட்ட மந்திரத்துக்கு வேலிடிட்டி முடிஞ்சிருச்சு போல... வேற சாமியாரக் கூப்பிடலாம்..."

"அம்மா... எவ்வளோ பெரிய பிரச்சன இது... உனக்கு பயமா இல்லயா"

"அதவிடப் பெரிய பிரச்சன இருக்குடா நமக்கு... தோசைக்கு மாவு நேத்துதான் அரச்சேன்... அதை வைக்க எனக்கு இப்போ நல்ல ஃப்ரிட்ஜு வேணும்... உங்கப்பாவ பொறுமையா ரிப்பேர் பண்ணிக்கலாம்... முதல்ல இந்த ஃப்ரிட்ஜ ரிப்பேர் பண்ணிக்குடு எனக்கு", என்றார்.

அம்மாவின் பதில்களைக் கண்டு அவனுக்கு வியப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தபோது, அவனுக்கும் அதுதான் தோன்றியது. "என்ன இருந்தாலும் அப்பாதான... அவரு பையன என்ன பண்ணிட போறாரு... ரூமத் தொடச்சு சர்ட்டிபிக்கேட்டெல்லாம் பத்திரமா வச்சிருக்காரு... எங்க நான் தற்கொல பண்ணிக்கிட்டு அவரப் பாக்க போயிருவேனோன்னு பயந்துட்டு என்னப் பாக்க வந்திருக்காரு... என் அப்பா நல்ல பேய்தான்..." எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

அப்போது மீண்டும் சமையலறைக்குள்ளிருந்து வந்த அம்மா, "நான் சொல்றது கேக்குதா", எனக் கத்தினார்.

"என்னமா பிரச்சன இப்போ உனக்கு"

"ஃப்ரிட்ஜுடா... எட்டு மணியாகப்போகுது அவன் கெளம்புற நேரம்... போய் ஒருதடவ ஞாபகப்படுத்திட்டு வா..."

"போறேன் போறேன்... நானும் அவருகிட்ட ஒன்னு சொல்லணும்..."

"நீ என்ன சொல்லப்போற?"

"எப்போப்பாத்தாலும் ஃபுல் வால்யூம்ல பாட்டு கேட்டு ஒரு வேலையும் ஒழுங்கா பண்ண விடமாட்டெங்குறாரு"

"என்னடா ஒளறுர... அவன் எப்படி பாட்டு கேப்பான்..."

"ஏன்... அந்தண்ணன் பாட்டு கேக்கக் கூடாதுன்னு எதும் சட்டமா என்ன..."

"கிறுக்கா... இதே மாதிரி அப்பார்ட்மெண்டுல வேற யாருக்கிட்டயும் போய்சொல்லிக்கிட்டு இருக்காதடா..."

"இப்போ நீ ஏன் ஒளறுர"

"உனக்கு அப்போ அவனப் பத்தி தெரியாதா?"

"என்னமா தெரியணும்?"

"அவனுக்கு வாய்ப்பேச்சும் வராது... காதும் கேக்காது..."

"என்ன சொல்ற?", அதிர்ந்த குரலில் கேட்டான்.

"டேய் ஆறு மாசமா இங்கதான் இருக்கான்... நாங்க எல்லாருமே கை அசச்சு அவன்கிட்ட செய்கைலதான் பேசுவோம்... நீ பாத்ததில்லயா..."

இதைக் கேட்டவுடன் படக்கென்று எழுந்து தன் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே ஓடினான். அவன் செய்வதைப் பார்த்து அம்மாவுக்கு மீண்டும் குழப்பம். ஓடியவன் கீழ் தளத்துக்குச் சென்று அந்த எலக்ட்ரீஷியன் வீட்டுக் கதவைத் தட்டினான். இரண்டு முறை தட்டிவிட்டு, பின் சுயநினைவுக்கு வந்து தலையில் அடித்துக்கொண்டான். என்ன செய்வதென்று சுற்றும் முற்றும் அந்தக் கதவைப் பார்த்து அந்த வீட்டின் காலிங்பெல் ஸ்விட்சைப் பார்த்தான். அதன் மேல் வரையப்பட்டிருந்த 'மணி' படம் அடிக்கப்பட்டு, அதன் கீழ் 'காலிங் லைட்' என எழுதப்பட்டிருந்தது.

அந்த ஸ்விட்சை அழுத்தியவுடன் அந்த வீட்டுக்குள் பளிச்சென சிவப்பான வெளிச்சம் அடித்து, அது கதவின் கீழ் இடைவெளியில் இவனுக்கும் தெரிந்தது. சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்ததும் இவனைப் பார்த்து புன்னகைத்தார் எலக்ட்ரீஷியன். பிறகு உள்ளே அழைத்து அவனை அமரவைத்தார். தற்போதுதான் குளித்துவிட்டு வந்ததாகவும் சில நிமிடங்கள் பொறுங்கள் சட்டை மாட்டிவிட்டு வருவதாகவும் சைகையில் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். 

அங்கே அமர்ந்தவன், அவர் வீட்டை முழுவதும் சுற்றி கவனித்து கண்களால் மேய்ந்தான். தொலைக்காட்சி, அயர்ன்பாக்ஸ், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என எல்லா வகைய மின் சாதனப் பொருட்கள் அவர் வீடெங்கும் வாங்கிவைத்திருந்தான். ஒலிப்பெருக்கி, ரேடியோ, எம்பி3 ப்ளேயர் போன்ற பாடல் கேட்கும் கருவி ஏதும் இருக்கிறதா எனத் தேடினான், அங்கே ஒன்றுமே இல்லை. பிறகு எழுந்து அவர் பெட்ரூம் வாசலில் நின்று அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தான். உடையுடுத்தி அவர் கதவைத் திறந்ததும் இவன் முன்னால் நிற்பதைப் பார்த்து ஒரு கணம் திகைத்துதான் போனார்.

இவனோ லேசாகப் புன்னகைத்துவிட்டு, தன் கை மணிக்கட்டைக் காட்டி அவனுக்கு நேரமாகிவிட்டது எனக் கூறி ஃப்ரிட்ஜ் சரிசெய்ய ஆள் அனுப்பும்படி சைகையில் கூறினான். அவரும் சரி எனப் புன்னகைத்துத் தலையசைக்க, அங்கிருந்து கிளம்பும் முன் அவர் படுக்கையறையை பார்வையால் அலசிவிட்டு அங்கும் வெறும் மின் சாதனப் பொருட்கள், அவர் வேலைபார்க்கும் டூல்ஸ், பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அங்கும் ஏதும் பாடல் கருவி இல்லை என்பதை உறுதிசெய்துவிட்டு விடைபெற்றான்.

அவர் வீட்டைவிட்டு வெளியே வரும்வரை இயல்பாக நடப்பதுபோல் நடந்து வெளியே வந்தவுடன் அவசர அவசரமாக மீண்டும் தன் வீட்டுக்கு ஓடிவந்தான். 

மூச்சு வாங்க தன் அம்மாவிடம், "நமக்கு கீழ இல்லனா மேல ஏதும் ஃப்ளோர்லலாம் யாரெல்லாம் இருக்காங்க"

"ஏன்டா... நம்ம, கீழ அந்தப் பையன், அவனுக்கும் கீழ் வீடு காலியா இருக்கு... அதுக்குக் கீழ ஒரு நார்த் இண்டியன் ஃபேமிலி, க்ரவுண்ட் ஃப்ளோர்ல ஒரு பாட்டி தாத்தா இருக்காங்க... நமக்கு மேல ஒரேயொரு ஃப்ளோர்தான்... அந்த வீடும் ரெண்டு வருஷமா ஆள் இல்லாமதான் இருக்கு...", என அம்மா கூறினார்.

"இல்லமா பகல் ராத்திரினு அந்த வெண்டிலேஷன் எக்ஸாஸ்ட் வழியா பாட்டு கேக்குது..."

"பகல்னா பரவாயில்ல அந்தத் தாத்தா பாட்டி கேக்குறாங்கனு சொல்லலாம்... ராத்திரிலயும்னா... நார்த் இண்டியன்ஸா இருக்குமோ"

"யாரு அவனுங்களா? அவனுங்களுக்கு இளையராஜா பாட்டே ஒழுங்கா தெரியாது... எந்தக் காலத்துல தேவா, ஹாரிஸ் ஜெயராஜெல்லாம் கேக்கப்போகுது..."

"அப்படி என்ன பாட்டுடா கேக்குது...", எனக் கேட்டபடியே அவன் அறைக்குள் சென்று குளியலறைக் கதவைத் திறந்துபார்த்தார் அம்மா. அது அமைதியாகத்தான் இருந்தது.

அவள் அருகே சென்று அவனும் தன் குளியலறையைப் பார்த்து, "இல்லமா இப்போ கேக்காது... எப்போலாம் என் மனசு கொழம்புதோ அப்போதான் கேக்கும்..."

"ஒருவேள அப்பாவா இருக்குமோ..."

"மொதல்ல அதான் நெனச்சேன்... ஆனா அப்பா செத்தது 1997ல... அவருக்கு எப்படி ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுலாம் தெரியும்..."

இதைக் கேட்டவுடன் டக்கென்று வாய்விட்டுச் சிரித்து, "ஏன்டா... ஆவிக்கிட்டலாமா லாஜிக் பாப்ப", என்றார் அம்மா.

"நக்கலடிக்காதம்மா... இது அப்பா இல்ல...", என மிகத் தீர்மானமாகச் சொன்னான்.

"சரி... இப்போ என்ன சொல்லவர?"

"உனக்கே தெரியும்... நீ சென்னைக்கு வரவரைக்கும் இந்த வீட்டுலதான் நானும் ப்ரியாவும் சேர்ந்து வாழ்ந்தோம்... நானும் அவளும் சேர்ந்து தூங்குன பெட், சேர்ந்து வாழ்ந்த ரூம்... சேர்ந்து குளிச்ச இடம்... எங்க ப்ரேக்கப்புக்கு அப்பறம் என்னோட தனிமையையும் இதே ரூம்தான் பாத்திருக்கு... என்னோட வலி, சோகம், எல்லாமே இங்கதான் முழுசா வெளிவந்துருக்கு... ஆனா அவளுக்குக் கல்யாணம்னு  தெரிஞ்சதும் வலி இன்னும் அதிகமாச்சு. எனக்கு இருந்த வலி அடுத்த ரெண்டே மாசத்துல அவ இறந்துட்டான்னு தெரிஞ்சதும் மொத்தமா போயிருச்சு... ஹஸ்பண்ட் சரியில்லனு அவ தற்கொல பண்ணிப்பானு நெனைக்கல... வலி கோபமாதான் மறிச்சு... அவ என்ன ஏமாத்திட்டு போய்ட்டான்னு தோணிச்சு... திரும்ப என்கிட்டயே வந்திருக்கலாங்கிற ஒரே நெனப்பு மட்டுமதான் இருந்துச்சு... இப்போ அவ என்னோட அந்த நெனப்புல மட்டும்தான் இருக்கா... அவகிட்டயே நானும் போயிடணும்னு ரெண்டுதடவ ட்ரை பண்ணுனேன்..."

அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அம்மா, "ம்...", என்றார்.

"அப்போதான் எனக்கு அந்தப் பாட்டு கேக்க ஆரம்பிச்சுது... நானும் புதுசா குடி வந்திருக்குற கீழ் வீட்டு அண்ணந்தான்னு நெனச்சேன்... ஆனா பாட்டுக்கேறது பாத்ரூம்கு வெளிய இருந்து இல்ல. உள்ளயிருந்து..." என ஒரு நொடி பேசுவதை நிறுத்தினான்.

அம்மா, அவனை மெல்லிய அதிர்ச்சியுடன் பார்க்க, மேலும் தொடர்ந்தான்.

இதுல கேக்குற எல்லாப் பாட்டும் நானும் அவளும் சேர்ந்து கேட்டப் பாட்டு... அதுலயும் ஆகசவாணி, வானெங்கும் நீ மின்ன மின்ன, இப்படி எல்லாப் பாட்டுலயும் ஒரு ஒத்துமை இருக்கு", என அவன் கூற, 'என்ன?' என்பதுபோல் சந்தேகமாக அவனைப் பார்த்தார் அம்மா.

"இந்த எல்லா பாட்டுலையுமே ஒரு எடத்துல அவ பேரு வரும்... நம்ம வீட்டுல இருக்குறது அப்பா இல்லம்மா...", எனக் கலங்கிய கண்களோடு சிரித்துக்கொண்டே கூறினான்.

அம்மா அவன் கண்களுக்குள்ளே இருந்த பெருமகிழ்ச்சியை ஆழமாகப் பார்த்து புரிந்துகொண்டு, அவன் கன்னத்தில் கை வைத்துத் தடவிக்கொடுத்தார். அப்போது, அந்த குளியலறையிலிருந்து, 'ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா' எனக் கேட்டது.

- சந்தோஷ் மாதேவன்,

சென்னை, மே 22, 2021.