ஒரு வீடு இரு வாசல் | Tamil Short Story

"யாச்சி... உங்கப் பேத்தியப் பாருங்க" எனக் கூறியபடி தன் பாட்டியிடம் தன் கைப்பேசியின் திரையில் தன் காதலியின் நிழற்படத்தைக் காட்டினான். அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அத்தையும் தாணுவின் காதலியை ஒரு முறை பார்த்துவிட்டு, "பாக்க இந்தி நடிக கணக்கால்ல இருக்கா", என்றனர்.

"அதெல்லாம் இல்ல அத்தே இது ஃபேஸ் ஆப், அப்படிதான் வெள்ளையா காட்டும்... ஆந்திராதான் அவளுக்கு... விசாகப்பட்னம் பக்கம்... ஆனா இப்போ கல்கத்தாவுல செட்டில் ஆகியிருக்காங்க" எனக் கூறிவிட்டு, "இருங்க வீடியோ கால் பண்றேன்", என மீண்டும் கைபேசியைத் திறந்தான்.


ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தற்போது தாணு வீட்டோடு இருக்கிறான். பிடித்த வேலையைச் செய்யவேண்டும் என்ற கனவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல முன்னணி புகைப்படக் கலைஞர்களிடம் உதவியாளராகப் பணியாற்ற வாய்ப்பு கேட்டு அலைந்துகொண்டிருக்கிறான். எப்படியாவது ஒரு பெரும் விலங்கின புகைப்படக் கலைஞனாக ஆகிவிட வேண்டுமென்ற ஆசை அவனுக்கு. தன் சம்பளப் பணத்தைச் சேமித்து அவன் முதன்முதலில் வாங்கியதுகூட ஒரு கேமராதான்.

இருந்தாலும் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க ஏதேனும் செய்யவேண்டும் என்பதனால், தற்போது கல்லூரி, பள்ளி, இல்ல நிகழ்வுகளுக்குப் படம் எடுத்துக் கொடுத்து மாதச் செலவுகளை ஓட்டிக்கொண்டிருக்கிறான். தற்போது தேர்தல் சமயத்தில் ஒரு பெரும் தலைவருடன் சேர்ந்து தமிழகம் முழுக்க பயணித்து அவரது  பரப்புரையைப் படம் பிடிக்கும் வேலையைத் தற்காலிகமாகச் செய்துகொண்டிருக்கிறான். அப்படித்தான், தன் சொந்தவூருக்கு வந்தபோது வேலையிலிருந்து சிறு விடுப்பு எடுத்துக்கொண்டு அவன் ஆச்சி வீட்டுக்கு வந்தான்.

வீடியோ காலில் அவன் காதலி இணைந்ததும் தன் காதலியிடம் ஏதோ சைகை செய்துகாட்டியபடி, ஆச்சியிடம் கைப்பேசியை நீட்டினான். அவளைப் பார்த்தவுடன் நன்றாகச் சிரித்தபடி ஆச்சி அவளிடம் தெலுங்கில் பேசத் தொடங்கிவிட்டார். அவனுக்கோ ஆச்சரியம். 

"என்னடே பாக்க... உம் பிராயத்துல நான் விஜயவாடாலதான் வளந்தேன்", எனக் கூறிவிட்டு மீண்டும் அவன் காதலியிடம் பேச்சைத் தொடர்ந்தார்.

"எனக்கே தெலுங்கு தெரியாதே", எனத் தன் அத்தையைப் பார்த்து சலித்துக்கொண்டான்.

நக்கலாகச் சிரித்தபடியே அத்தை அடுக்களைக்குள் சென்றுவிட்டார். இவர்கள் பேசியவுடன், கைப்பேசி வீட்டிலிருந்த பெரியம்மா, பெரியப்பா மகள், அத்தை, மாமா, அவர்களின் மக்கள், என ஒவ்வொருவரிடமும் கைமாறியது. அனைவரும் அவளிடம் சிரித்துப் பேச, இவனுக்கோ உற்சாகம் தலைக்கு ஏறியது. வீட்டில் அனைவருக்கும் அவளைப் பிடித்துவிட்டது என உறுதி செய்துகொண்டான்.

இறுதியாக அவனிடம் கைப்பேசி வந்தபோது, அதை எடுத்துக்கொண்டும் தனியான ஒரு இடத்துக்கு வந்து "எல்லாரும் பேசியாச்சு... பெரியப்பா மட்டும்தான் வீட்டுல இல்ல... நான் அப்பறம் கூப்பிடுறேன்", என அவளிடம் ஆங்கிலத்தில் கூறிவிட்டு மகிழ்வுடன் அழைப்பத் துண்டித்தான்.

மீண்டும் அவன் வரவேற்பறைக்கு வரும்போது, பெரியப்பாவும் வீட்டுக்குள் வந்தார். அவரைப் பார்த்ததும் மீண்டும் தன் கைப்பேசியை எடுக்கப் போனான். அப்போது, "ஏய்... உனக்கு இந்த வேல எப்போ முடியுது?" என்றார், பெரியப்பா.

"பிரசாரம் மூணாந்தேதி வர நடக்குது... அதுவர இருக்கணும் பெரியப்பா..."

"ஓ... அதுக்கு மிந்தி ரெண்டு நாள் லீவு எடுக்க முடியாதோ?"

"ஏன் பெரியப்பா..." எனக் குழம்பியபடி கேட்டான்.

"ஏன்டே... உங்கொப்பேன் உங்கிட்டச் சொல்லலியா..."

"இல்ல பெரியப்பா... ஒரே அலச்சல்... ரெண்டு நாளாச்சு அப்பாகிட்ட பேசி... ராவுதான் பேசணும்".

"என்னடே இது... அப்பன்கிட்டயும் அம்மகிட்டயும் பேசாம அப்படி என்ன வேலபாத்து கொண்டாடிக் கொடம் ஒடைக்க".

"அத விடுங்க... எதுக்கு லீவு எடுக்கணும்".

"உங்கொக்காளுக்கு கல்யாணம் முடிவாயிருக்கு... வர ரெண்டாந்தேதி".

அதைக் கேட்டதும் அவன் தலையில் இடி விழுந்ததைப் போல அதிர்ச்சி. தன் பெரியப்பாவின் மகள் பள்ளிக்காலத்திலிருந்தே ஒருவனைக் காதலித்துக்கொண்டிருந்தாள். அது வீட்டில் எல்லோருக்குமே ஓரளவுக்குத் தெரியும். அதற்குக் கடும் எதிர்ப்பு வேறு எழுந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவந்தவனைவிட்டு இப்போது வேறொருவனை மணக்கப்போகிறாளோ, என தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டான்.

அவன் தீவிரமாக யோசிப்பதைப் பார்த்த பெரியப்பா, "என்னடே... லீவு உண்டுமா?" என மீண்டும் கேட்டார்.

பெரியப்பாவைப் பார்த்து அந்த குழப்பத்துடனேயே, "ஆங்... ரெண்டு நாளுக்கு வேற ஆள அனுப்பி ஃபோட்டோ எடுக்க அனுப்பிட்டு நான் வாரேன்", என்றான்.

"எப்படியாவது வந்துருடே", எனக் கூறிவிட்டு பெரியப்பா மீண்டும் வெளியே சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் குழம்பியபடியே வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தான். இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம் நடக்கவிருக்கும் ஆரவாரம் யாரிடமும் இல்லை என்பதை அவனால் உணரமுடிந்தது. அவன் காதலியிடம் பேசியபோது அவர்களிடம் இருந்த உற்சாகம் கூட யார் முகத்திலும் இல்லை. இப்போது அவனுக்குக் குழப்பம் மேலும் அதிகமானது. அவன் அக்காவைப் பார்த்து, வெளியே வா எனக் கண் காட்டினான். சைகை செய்துவிட்டு வெளியே வீட்டு முற்றத்துக்குச் சென்றான்.

சில நொடிகளில் அவள் அங்கே வந்தாள். அவளைப் பார்த்து, "என்னட்டி... அவனக் கழட்டிவுட்டுட்டியா," என்றான்.

"கிறுக்குப் பயலே... இதுக்குத்தான் கூப்டியாக்கும்... அவனதாம்ல கட்டுகேன்", எனச் சிரித்தபடி கூறினாள்.

நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி, "அப்பறம் ஏன் எல்லாரு மூஞ்சியும் எட்டா வளஞ்சு கெடக்கு".

அப்போது அவளுடைய தங்கையும் அங்கே வந்தாள். அவனை அணைத்தபடி நின்றாள்.

"நான் ஜாலியாதாம்ல இருக்கேன்..." எனக் கூறிவிட்டு, தன் தங்கையைக் காட்டி, "இவளும் சந்தோசமாதான் இருக்கா... எனக்கு முடிஞ்சதும் அடுத்தால இவளையும் இந்த வருசமே சுசீந்திரத்து அத்தானுக்குக் கட்டிவைக்கலாம் பேசிமுடிச்சாச்சு... இவளுக்கும் ரூட் கிளியராய்ட்டு", என்றாள்.


"நீங்க ரெண்டுபேரும் சரி... மத்தவங்கல்லாம் ஏன் உம்முன்னு இருக்காங்க".

"அத நீ அவங்ககிட்டதான் கேக்கணும்... வேணும்னா அத்தகிட்ட பய்ய போய் கேட்டுப்பாரேன்".

அவள் சொன்னவுடன் அடுக்களைக்கு விரைந்தான். அங்கே அவனது மாமா தேங்காய் தொலிக்க, அத்தை அவனுக்காக அவல் இடித்துக்கொண்டிருந்தார். அதற்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுச் சர்க்கரையில் ஒரு துண்டையும், துருவிய தேங்காயில் ஒரு பிடியையும், கொஞ்சம் பச்சை அவலையும் அள்ளி தன் வாய்க்குள் திணித்துக்கொண்டு, தன் பற்காளாலேயே அவலை அரைக்கத்தொடங்கினான். சர்க்கரை கரைந்து அவலுடனும் தேங்காயுடனும் கலப்பதைத் தன் கண்களை மூடி சில வினாடிகள் அனுபவித்துவிட்டு, வாயில் நிரம்பியிருந்த அவலைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினான். 

அதைப் பார்த்த அத்தை அவனைக் கிள்ளி, "மலமாடு கணக்கா வளந்துட்ட... இன்னும் இந்தப் பழக்கம் போவல..." என்றார்.

அவரைப் பார்த்து வெகுளியாகச் சிரித்துவிட்டு, "அது அப்படிதான்", என்றான்.

அத்தை புன்னகைத்தபடியே, மீண்டும் அவல் இடிப்பதைத் தொடர்ந்தார். அப்போது, அவரையே கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, பேசத் தொடங்கினான். "யத்தே... கல்யாண வேலையெல்லாம் எப்படிப் போகு".

"ம்ம்... கொமாரகோயில்லதான் தாலிக்கட்டு... அது முடிஞ்சால பக்கத்துலயே உடுப்பி ஹோட்டல்ல சாப்பாடு... என்ன வேல இருக்கு பாக்க", என சலித்துக்கொண்டே சொன்னார்.

"என்னத்தே இப்படி சொல்லுகீங்க... ஊரழைக்கணும்... மறுவீடு... ரிசப்ஷன்... எவ்வளோ கெடக்கு..."

"மக்ளே... அதெல்லாம் ஒன்னும் கெடையாது... தாலிகட்டு முடிஞ்சால அக்கா புத்தேரிக்கு அவ்வோ வீட்டுக்குப் போயிடுவா"

"யான் த்தே?"

"ஓன் அக்காளுக்கு இது செய்யதே பெருசு... ஆச்சி, தாத்தா, அம்ம, அப்பேன்னு வீட்ல யாரு சொன்னடியும் கேக்காம அவந்தான் வேணுன்னு போறா... அந்தப் பயலுக்குச் சரியா ஒரு வேலகூட இல்ல... இவள நல்ல வச்சுப் பாத்துப்பானா... அதுபோக உன் ரெண்டாவ்து பெரியப்பா வேற அவ இப்படி கல்யாணத்துக்குப் பொறவு இங்க வந்தா அவன் வரமாட்டேன்னு சொல்லுறான்... அதெல்லாம் தெரிஞ்சும் போறால்ல... நம்ம அவ்வளோதான் செய்ய முடியும்"

அத்தை கூறிய சொற்கள் அவன் மூளைக்கு எட்ட சில நொடிகள் பிடித்தது. அப்படியே உறைந்துதான் போனான்.

அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த மாமா, "இப்போத்தான் புத்தேரிக்கு மாறிப் போயிருக்கான்... இதுக்கு மிந்தி அவ்வோ வீடு எங்க இருந்து தெரியுமா... வீர்ணமங்கலத்துக்கு அடுத்தால ஒரு சர்ச் இருக்கும் பாத்துருக்கியா... அங்கணதான் எங்கயோ", எனக் கூறினார்.

அவனுக்குக் காரணம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது. அந்தக் காரணத்தையே முழுவதும் விழுங்க முடியாததால், இடித்த அவலைச் சரியாகச் சாப்பிடாமல் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினான். வேலைக்குத் திரும்பும் வழியில் அவனுக்கு அந்தக் காரணம் மட்டுமே உறுத்தலாக இருந்தது. கைபேசி எடுத்து அப்பாவை அழைத்தான். நடந்தவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றைப் பொறுமையாகக் கேட்ட அப்பா, எல்லாம் சொல்லி முடிந்ததும் வாய்விட்டுச் சிரித்தார். பிறகு பேசத் தொடங்கினார்.

"இதுக்கே இப்படி மூக்கால அழுவுறியே... அழயாண்ட்ரத்து மாமா என்ன சொன்னா தெரியுமா?", சிரித்தபடியே கேட்டார்.

"என்ன... தங்கச்சி கல்யாணத்துக்கு ஏதும் கண்டீஷனா?"

"ம்ம்... கல்யாணத்துக்குப் பொறவு உன் அக்கா நம்ம வீட்டுக்கு வரக்கூடாதாம்... வர மாட்டான்னு அவகிட்டயும் அவ மாப்ளகிட்டயும் எழுதி வாங்கச்சொல்றாங்க... சொத்துலயும் பங்கு கேக்கமாட்டொம்ன்னு எழுதிகொடுக்கணுமாம்... இதெல்லாம் தங்கச்சி கல்யாணத்துக்கு மிந்தியே எழுதிவாங்கணுமாம்"

"என்ன அநியாயம் இது... இதெல்லாம் எழுதி வாங்கிட்டு நீங்க எல்லாரும் இன்னும் பத்து பதினஞ்சு வருசத்துல செத்து போயிருவியோ... ஆனா அக்காளும் தங்கச்சியும் வாழ்க்க முழுக்க சாகுகதுவர பேசிக்கக்கூடாது..."

"நீ எனகிட்ட ஏன்டே கோவப்படுக... அதச் அவ்வோ அப்டி கேக்கதுக்க காரணமே நம்ம வீட்ல இருந்து ஒரு ஆளு உன் பெரியப்பனுக்கிட்டகூட பேசாமா ஒரு அனக்கமும் இல்லாம அந்த மாமாகிட்ட சொத்து நம்ம குடும்பத்துக்குள்ளதான் ஒரு பைசாகூட உங்காக்களுக்குக் குடுக்கமாட்டோம்னு சொல்லியிருக்கு... யாருன்னுதான் தெரியல. இதுல நீ என்கிட்ட கோவப்பட்டு என்ன கெடைக்கப்போவுது" என்றார் அப்பா.

"பின்ன... அவாள் இன்னைக்கு இவளுக்குச் சொல்றததான நாளைக்கு எனக்கும் சொல்லுவா..."

"உனக்கு என்னடே சொல்லப்போறா..."

"நானும் வெளியாளத்தான பாத்து வச்சிருக்கேன்... அவளையும் சேத்துக்கமாட்டேன்னுதான சொல்லுவாங்க"

"அதெல்லாம் சொல்ல மாட்டாங்கடே... என்னத்தையாம் ஒளறாதென்னா"

"நான் ஒன்னும் ஒளறல... காலேஜ் படிக்கச்சில ஒரு புள்ளய லவ் பண்ணுனேன்... அதுக்கு அவ்வோ எல்லாம் சொன்னா..."

ஒரு வினாடி யோசித்துவிட்டு, அப்பா "அந்தப் புள்ள வடீசொரத்துக்காரிதான...", என்றார்.

"ம்ம்".

"இவ விசாகப்பட்னமா... கல்கத்தாவா..."

"ரெண்டும்தான்..."

"என்னமோ... இவனுவளுக்கு வீர்ணமங்கலமும் வடீசொரமுந்தான் தெரியும்... விசாகப்பட்னம்லாம் தெரியாது... மனசுலாச்சா"

"அதெப்படி சொல்லுகீங்க"

"பொறவு இன்னைக்கு உன் ஆச்சி, அத்தமாறு, பெரியம்மை எல்லாரும் எப்படி அவகிட்ட பேசுனாங்க? இதே மாதிரி உங்க அக்காளுக்க மாப்ளகிட்ட பேசுவாங்கன்னு நெனைக்கியா"

"பேச மாட்டாங்களோ?"

"நொட்டுவாங்க... இவனுவளுக்கு ஆராம்ப்ளிக்கு வடக்க ஒரு ஒலகம் இருக்கதே இன்னும் தெரியாது... அவனுக்க ஊரு வீர்ணமங்கலங்கதுதான் இவாளுக்குப் பிரச்சன... அந்த ஊருகாரன் நம்ம வீட்டுக்கு வருகதுதான் பிரச்சன... மத்தபடி அவனுக்கு வேல இல்ல, மயிரு இல்லன்னு சொல்லுகதுலாம் சும்மா... ஒனக்கு மட்டும் என்ன வேலையா இருக்கு... நீ உன்ன நம்பி வரவள எப்படிப் பாத்துப்ப..."

அப்பா பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டே சிந்திக்கலானான். அப்பா மேலும் தொடர்ந்தார்.

"மறுவடி சொல்றேன்... இவாளுக்கு வீர்ணமங்கலந்தான் தெரியும்... விசாகப்பட்னம் தெரியாது..."

அவனும் அவன் அக்காவும் ஒரே வீட்டில் ஒரே நாள் வெறும் நான்கு மணிநேர இடைவெளியில் பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் உலகங்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளி அளவிடமுடியாததாக இருந்ததை அவன் அப்போதுதான் உணர்ந்தான். இன்னும் சில ஆண்டுகளில் சாகப்போகும் மாமாக்களும் பெரியப்பாக்களும் சேர்ந்து எடுத்த முடிவில் தன் அக்காவும் தங்கையும் வாழ்நாள் முழுக்க பிரிந்திருக்கப் போகிறார்கள் என்பதுதான் அவனை மீண்டும் மீண்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அதோடு வேறொன்றும் விளங்கியது. குறுகிய மனம் படைத்த அவன் ஊருக்கு விசாகப்பட்டினமும் ஒரு ஃபேஸ் ஆப்தான்.

- சந்தோஷ் மாதேவன்,
நாகர்கோவில், ஏப்ரல் 11, 2021.