எட்டு செகண்ட் முத்தம் | Tamil Short Story

காதலுக்குப் பாதகம் விளைவிக்க கோபம், அகந்தை, பொறாமை, காலம், மொழி, இனம் என இயற்கை பலவற்றை உருவாக்கியிருக்கிறது. மனிதனும் தன் பங்குக்கு சாதியையும் மதத்தையும் உருவாக்கிவைத்திருக்கிறான். உலகின் பெரும்பாலான காதல் தோல்விகளுக்குக் காரணங்கள் இவைதாம். ஆனால், இந்தக் காதல் கதையின் முடிவுக்கு ஒரு எஸ்கலேட்டரின் படிகட்டுகள்தாம் காரணம்.எஸ்கலேட்டர் படிகட்டுகளுக்கு இருக்கும் விசித்திர பண்பு அவன் கண்களுக்கு அன்றுதான் புலப்பட்டது. ஏன் அவை மற்ற படிகட்டுகள் போல் இருவழிப் பாதையாக இருக்கவில்லை என அவனைச் சிந்திக்கத் தூண்டியது. கீழ் நோக்கி இறங்கும் படிகட்டுகளால் ஏன் மேல் நோக்கி ஏற முடிவதில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்பினான். காரணம், அவள்.


திரைப்படம் தொடங்கும் நேரத்துக்காக திரையரங்கின் வெளியே காத்துக்கொண்டிருந்த வேளை. பல திரைகளை உள்ளடக்கிய மல்டிப்ளெக்ஸ் அது.  ஒரு பன்னடுக்கு மாடிக் கட்டடத்தில் அமைந்திருக்கும் பேரங்காடியின் மேல் தளத்தில் அமைந்திருக்கும் அரங்கம். அதனால் எப்போதும் ஏதோ ஒரு படத்தைக் காணவோ, அல்லது இடைவேளையினாலோ மக்கள் கூட்டம் விரவிக்கிடக்கும் தளம். அதில் கண்ணாடியால் எழுப்பப்பட்ட மதிற்சுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் தெரியும் தூரத்தில் திரையரங்கு. வீட்டுக்கு அருகிலேயே அந்தப் பேரங்காடி இருப்பதால் எப்போதும்போல் அன்றும் சீக்கிரமாக நடந்தே வந்துவிட்டான். பொதுவாக திரைப்படம் தொடங்கும் நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிடும் அவனுக்கு எப்போதும் அந்த அர்த்தமற்ற காத்திருப்பு அறவே பிடிக்காதது. என்றாலும் தணிக்கைக் குழு என்ன சொல்கிறது என்பதில் தொடங்கி இயக்குநர் என்ன சொல்கிறார் என்பது வரை எல்லாவற்றையும் ஒரு திரைப்படத்தில் முழுமையாகப் பார்ப்பதுதான் அந்தக் கலைக்கு அதன் பார்வையாளர்கள் சேர்க்கும் முதல் மதிப்பு என்பது அவன் தீரா நம்பிக்கை. அன்றும் எப்போதும்போல் அந்தக் காத்திருப்பைச் சகித்துக்கொள்ளலாம் என்ற முடிவை எட்டும், அரை நொடிக்கு முன்பு அதற்கு அர்த்தம் சேர்க்க அவன் கண்முன் தோன்றினாள், அவள்.

ஒரு கோல்டு காஃபி கோப்பை, தன் உலகத்தை அடக்கிய தோள் பை, ஒரு தோழி என அவள் அந்த ஒட்டுமொத்த திரையரங்கத் தளத்தையும் அலங்கரித்துக் கொண்டிருந்தாள். சில பெண்களைப் பார்த்தால் பேசத் தோன்றும், நாள் முழுக்க அவர்களைப் பேசவிட்டு, கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றும் தோன்றும். சிலரைத் தோளோடு தோள் சேர்த்துத் தோழியாக்கிக்கொள்ளத் தோன்றும். சிலர் மீது வயதுக்கு ஏற்ற ஈர்ப்பு மூளும். சிலரை அள்ளி அணைத்து முத்தமிடலாம் என்றுகூட தோன்றும். அப்படி ஒவ்வொரு பெண்ணிடமும் பிடித்துவிடுவதற்கான காரணம் என ஏதோவொன்று அவனிடம் இருக்கும். ஆனால், அதுவரை எந்தப் பெண்ணிடமும் தோன்றாத ஒன்று, அன்று அவனுக்கு அவளிடம் பிடித்தது. அது அந்த தூரம்.

தன்னைவிட்டு சில மீட்டர்கள் தொலைவில் நின்றுகொண்டிருக்கும் அந்தப் பெண் யார் என அவனுக்குத் தெரியாது. அவன் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. ஆனால், அவள் தொலைவில் இருப்பதால்தான் அவள் மீது எழுந்த உணர்வுகளுக்குள் சட்டென்று வசப்பட்டுவிட்டான் என்பதை மட்டும் உணர்ந்துகொண்டான். அருகில் நின்றிருந்தால்கூட அந்த உணர்வு தனக்கு வந்திருக்காதோ, எனத் தன்னைத்தானே கேட்டும்கொண்டான்.

ஒரு சூழல் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அழகாக்குகிறது. தன் கைபேசியைத் தோள் பையிலிருந்து வெளியே எடுக்க முயன்றபோது, காஃபி அந்தக் கோப்பையிலிருந்து சிந்தாமலிருக்க அவள் மேற்கொண்ட மெனக்கெடல்கள், அவன் கண்களுக்கு அவளை இன்னமும் அழகாகக் காட்டின. என்ன நினைத்தாளோ தெரியவில்லை, எடுத்த கைபேசியை மீண்டும் பைக்குள்ளேயே வைத்துவிட்டு, தன் தோழியின் கைகளைப் பிடித்துகொண்டு எஸ்கலேட்டரில் காலடி எடுத்துவைத்தாள். அவன் அப்போதுதான் சுய நினைவுக்கு வந்தடைந்தான்.

அவள் அவனைவிட்டு விலகிச் செல்கிறாள். அதுவரை அவன் ரசித்துவந்த தூரம் ஒரே வினாடியில் அவன் மீது கோபத்தையும் அதிர்ச்சியையும் அள்ளிப்பூசிவிட்டு, அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. 'உயிரே' படத்தில் சுஜாதா எழுதிய வசனம் அவனுக்கு அந்தச் சிரிப்பு சத்தத்தின் எதிரொலியானது. "உலகத்தோட சுருக்கமான காதல் கதை இதுதான்" என  அந்த தூரம் அவன் காதுகளில் ஓதியது.

ஆனால், காலம் அவனுக்கு வேறொரு நம்பிக்கையைத் தந்தது. அதுவரை அவளை ரசித்து வந்த அந்தச் சில நொடிகளுக்கான எதிர்வினை, அவள் பார்வை. ஒரு நொடி அவன் அந்த தூரத்தின் மீது வீசிய வெறுப்பை, மீண்டும் காதலாக்கியது, அவள் அவனைப் பார்த்த அந்தக் கணம். அந்தக் கோல்டு காஃபி கோப்பை நுனியைத் தன் இதழ்களுக்கு இடையே பதிக்க அவள் முனைந்த அந்தக் கணம்.

இருவரும் ஒருவரையொருவர் ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்த்துக்கொள்ள, எஸ்கலேட்டரோ அந்தத் தளத்திலிருந்து அவளைக் கீழ்த் தளத்துக்குக் கடத்தத் தொடங்கியது. தூரத்தின் மீது இருந்த கோபமும் வெறுப்பும் எஸ்கலேட்டரின் மீது பாய்ந்தன. எஸ்கலேட்டேரின் படிக்கட்டுகள் தானாக நகரவேண்டும் என யார்யாரெல்லாம் முடிவு செய்தார்களோ அவர்கள் அனைவரையும் கழுவிலேற்றி மரண தண்டனை விதிக்கவேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றியது.

ஒருவரையொருவர் பார்த்துகொண்டிருப்பதை இருவரும் உணர வெகுநேரம் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. சட்டென்று தத்தம் பார்வையின் திசையை மாற்றிக்கொண்டனர். அவனுக்கோ அவளும் தன்னைப் பார்த்துவிட்டாள் என்ற பேரானந்தம். ஆண்டுக்கு ஓரிருமுறை மட்டுமே கடற்கரைக்குச் செல்பவர்களின் கால்களை நனைக்கும் முதல் அலை அப்படித்தான் ஒரு உணர்வைக் கொடுக்கும். ஆனால், என்ன செய்வது, கடல் அலை காலடியிலேயே நிலைத்திருப்பதில்லையே. மீண்டும் கடலுக்குள்ளேயே தன்னைப் பூட்டிக்கொள்ளும். அவளும் அப்படித்தான் விலகிச் செல்கிறாள். அந்த அலை திரும்பப் போவதில்லை.

அவன் மீண்டும் அவள் பக்கம் திரும்பினான். இப்போது அவள் காஃபி குடிக்கத் தொடங்கியிருந்தாள். கோல்டு காஃபி கோப்பை சாதாரண காஃபி குவளைகள் போலில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டான். அவற்றைவிட இவை அளவில் பெரியவை. அந்த வட்டமான அழகிய முகத்தின் பெரும் பகுதியை மறைத்துவிட்டது.கண்களையும் நெற்றியையும் மட்டுமே தன் பார்வைக்கு விட்டுவிட்டு பிறையாகச் சுருங்கிப்போனது அந்த முகம்.

எஸ்கலேட்டரை வடிவமைத்தவர்கள் மீதிருந்த கோபத்தில் கொஞ்சம் எடுத்து, இந்தக் காகிதக் கோப்பையை  வடிவமைத்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தான். அதற்குள் அவளை மேலும் சில படிகளுக்குக் கீழ் நோக்கி கடத்திவிட்டது எஸ்கலேட்டர். இதற்குப் பிறகு இந்த ஊரில் இவளை மீண்டும் பார்க்கப்போவது அத்தனை எளிதல்ல என்பதில் தீர்மானமாகிவிட்டான். அதனால், பார்வையைவிட்டு விலகும் வரை அவளைப் பார்ப்பதை நிறுத்தப்போவதில்லை எனக் கூறிக்கொண்டான்.

அப்போது கோப்பையை வலக்கையிலிருந்து இடக்கைக்கு மாற்றிவிட்டு, கன்னத்தின் மீது பரவிக்கிடந்த முடியை விரல்களுக்குள் வசப்படுத்தி தன் வலப்பக்கக் காது மடலுக்குப் பின்னால் சிறைபிடித்தாள். கூந்தலோடு சேர்ந்து அவனும் சிறையானான். அப்படியே முடியை ஒதுக்கியவாறே மீண்டும் பார்வையை  அவள் அவன் மீது பாய்ச்சினாள். இப்போது மீண்டும் ஒரு நொடி இருவரின் பார்வைகளும்  ஒன்றொடொன்று உறைந்துகொண்டன. முதன்முறை போலவே அவள் பார்வையை ஒரு குழப்பத்தோடு விலக்கிக்கொண்டாள். அவனோ, தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

மேலும் சில தூரம் கீழ் நோக்கிக் கடத்தப்பட்டாள். இவன் மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்ததால், உயரமும் கோணமும் அந்த பிறை முகத்தை இன்னமும் அதிகமாகச் சுருக்கிவிட்டன. ஏற்கனவே, எஸ்கலேட்டர் கீழ்த் தளத்தை நோக்கி அவளைப் பாதி தூரத்துக்கு கூட்டிச் சென்றுவிட்டது. இன்னும் சில வினாடிகளில் அவள், தன் நினைவுகளில் மட்டுமே நிலைத்திருக்கப் போகிறாள் என்பதை உணர்ந்துகொண்டான். என்றாலும் அவளைப் பின் தொடர்ந்து சென்று பேசத் தோன்றவில்லை. அவனையும் அறியாமல் அவர்களுக்கு இடையில் அதிகமாகிக்கொண்டே போன அந்த தூரத்தில் மயங்கி, அந்தப் போதைக்கு அடிமையாகிப்போனான்.

இது இப்படியே இருக்கட்டும், இதுவே சுகமாகத்தான் இருக்கிறது என ஏற்கனவே அந்தக் காதல் கதைக்கு முடிவுரை எழுதத் தொடங்கிவிட்டான். அதற்குக் காரணம் அவன் சோம்பேறித்தனமா, பெண்களைப் பின்தொடர்ந்து தொல்லை செய்யக்கூடாது என்ற அறமா, இல்லை திரைப்படம் தொடங்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற கவலையா என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும், அந்த தூரம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் மீண்டும் அவனைப் பார்ப்பாள் என நம்பி அங்கிருந்தபடியே தன் பார்வையை விலக்காமல் இந்த விவாதங்களை மனதுக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தான்.

இன்னும் சில படிகள் கடந்திருந்தன. ஆனால், அவள் பார்க்கவில்லை. அடுத்தத் தளத்தை நோக்கி இறங்க இறங்க, அவள் கீழ் இமைகள், இமைகளுக்கிடையே இருக்கும் விழிகள், மேல் இமைகள் என ஒவ்வொன்றாக அவன் பார்வையின் கோணத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டிருந்தன. இறுதியில் எஞ்சியது நெற்றியும் அதன் மீது படர்ந்திருந்த சில கூந்தல் முடிகளும்தாம். கிட்டத்தட்ட அவள் கீழ்த் தளத்தை அடைந்துவிட்டாள். அவள் நெற்றிக் காட்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் பார்வை இழக்கத் தொடங்கியது. அவனும் அவள் மீண்டும் பார்ப்பாள் என்ற நம்பிக்கையை இழக்கத் தொடங்கினான்.

கீழ்த் தளத்தை அடைந்துவிட்டாள். இப்பொது அவனுக்குச் செங்குத்தாக கீழே நின்றுகொண்டிருந்த அவளின் தலைமுடி மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. காதலைப் பொறுத்தவரை நம்பிக்கை எப்போதும் ஒட்டுமொத்தமாக  விடுதலை பெற்றுவிடாது. எல்லாவற்றையும் பருகிமுடித்த பின்னும், கோல்டு காஃபி கோப்பையின் அடியில் எஞ்சியிருக்கும் ஒரு சில துளிகளைப் போல காதலில் நம்பிக்கை எஞ்சியிருக்கும். அப்படி எஞ்சியிருந்த நம்பிக்கை, அவனை முன்னே தள்ளியது. அந்தக் கண்ணாடி மதிற்சுவருக்குக் கீழ் பலத்துக்காக அமைக்கப் பட்டிருந்த மேடை மீது ஒரு காலை அழுத்தமாகப் பதித்து கீழே அவளை எட்டிப்பார்த்தான். இப்போது அவள் அந்தக் கோல்டு காஃபி கோப்பையை முகத்திலிருந்து விலக்கியிருந்தாள்.

எஸ்கலேட்டரிலிருந்து வெளியேறி நடந்தவள், தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ஏதோ சிந்தித்தவாறு நின்றாள். இவனுக்கோ தீர்ந்துபோன கோல்டு  காஃபி கோப்பையை மீண்டும் ரீ-ஃபில் செய்த அளவுக்கு நம்பிக்கை ஒரே நொடியில் பொத்துக்கொண்டு ஊற்றியது. தன் நெற்றி, அதில் பதிந்திருந்த வரிகள், புருவங்கள், மேல் இமைகள், விழிகள் என எல்லாவற்றையும் ஒருசேர உயர்த்தி, அவனைக் கடைசியாக ஒரு முறை பார்த்தாள். இம்முறை அந்தப் பார்வையில் எந்தக் குழப்பமும் இல்லை. தெளிவு, தீர்க்கம், பிடிப்பு மற்றும் காதல் என எல்லாம் கலந்திருந்தது. அவள் பார்வையை அவனிடமிருந்து விலக்கவுமில்லை.

அவனுக்கு இவையெல்லாம் விளங்க நீண்ட நேரம் எடுக்கவில்லை. அவனுக்குள் உதித்த காதல் அவளுக்குள்ளும் வந்துவிட்டது என்பதை உணர்ந்து, அவளைப் பார்த்து அவனும் கடைசியாகப் புன்னகைத்தான். பதிலுக்குப் புன்னகைத்தவள் தன் தோழியை அள்ளி அணைத்து இழுத்தவாறு அங்கிருந்து விடைபெற்றாள். பார்வையிலிருந்து விலகியவள், நினைவுகளுக்குள் குடியேறினாள். சுஜாதா எழுதியதைவிடச் சுருக்கமான காதல் கதையில் அப்போது அவன் வாழ்ந்து முடித்திருந்தான்.

அவள் பெயரையோ, எங்கிருந்து வந்தாள் என்பதையோ அறிய அவனுக்கு விருப்பம்வரவில்லை. ஆனால், அவளை மீண்டும் ஒருமுறை அதே தூரத்திலிருந்து கண்டு காதலுற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அவனிடம் இருந்தது. அதற்காகவே அடிக்கடி அந்தத் திரையரங்குக்குச் செல்லத் தொடங்கினான். அங்கே ஓடிக்கொண்டிருக்கும் அத்தனைப் படங்களையும் பார்த்தாயிற்று. இனி பார்ப்பதற்குப் படமேயில்லை என்றபோதும் அங்கே நித்தமும் அவளைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

அவ்வப்போது, தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து அந்தப் பேரங்காடியையே பார்த்துக்கொண்டிருக்கிறான். பல்லாயிரம் கோடி மதிக்கத்தக்க கட்டடம், இப்போது அவள் நினைவுகளால் மட்டுமே சூழப்பட்டிருக்கிறது. வெறும் எட்டு நொடிகளை மட்டுமே தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்ட பெண்ணுக்காகவா இப்படியெல்லாம் என அவனுக்கே இது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. எட்டு நொடிகளாகவே இருந்தாலும், அது காதல் அல்லவா?

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, ஏப்ரல் 15, 2020.