காதல், கத்தரிக்காய், கொத்தமல்லி | Tamil Article

இயக்குநர் சேரனின் படைப்புகளில் பொக்கிஷம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இயல்பிலேயே காதல் படங்களின் மீது நான் காதல்வயப்படுவதுண்டு. அதிலும் பொக்கிஷத்துக்கு ஒரு தனி இடமுண்டு. அதற்குப் பெரும் காரணம், சேரன் அதில் கையாண்ட கதை சொல்லும் விதம். ஒரு சரியான காதல் கதையானது காதலர்களைப் பற்றியதல்ல, அல்லது அந்த காதலில் எற்படும் சிக்கல்களைப் பற்றியது கூட அல்ல. காதல் படைப்பு காதலைப் பற்றியதாக இருக்கவேண்டும்.


ஒரு காதல் கதையின் முதன்மை மாந்தர்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பாதகங்களையும் தாண்டி அவர்களிருவருக்கிடையே இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி விவரித்து உருவான படங்களே இங்கே பெரும்  வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

உதாரணத்துக்கு, பொக்கிஷம் படத்தின் முதல் சில காட்சிகளில் அக்கதையின் முகாமைச் செய்தியையும், உட்கருத்தையும் விளக்கும் வண்ணம் நிகழ்காலக் காதலர்களுக்கும் முந்தைய தலைமுறைக் காதலர்களுக்கும்  இடையேவுள்ள வேறுபாட்டை காட்சிபடுத்தியிருப்பார்கள். அரைமணி நேரத்தில் ஆறு முறை வாக்குவாதம் செய்யும் அலைபேசிக் காதலர்கள், ஆறு நாட்கள் இடைவெளிக்கு ஒருமுறை கடிதங்களில் உணர்வுகளைப் பரிமாற்றிக்கொள்ளும் அஞ்சல் வழிக் காதலர்களையும் அவர்களின் காதலையும் கண்டு வியப்புக்குள்ளாவது போல் அந்த காட்சி அமைந்திருக்கும்.

இங்கே, காதலை இப்படி காலத்தின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. கடந்தகாலத்தில் இருந்ததுபோல்தான் காதல் இப்போதும் வெளிப்படவேண்டுமா? ஏன் காதல் பரிணாம வளர்ச்சி அடையக்கூடாதா? என்ற துணைக்கேள்விகளும் உடன் ஒட்டிக்கொண்டு வருகின்றன.

ஒரு இணையைப்போல மற்றொரு இணையால் காதலிக்க முடியாது. அவர்கள் காதலை வெளிப்படுத்தும் விதம் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் காதல் ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஒரு உணர்வால் ஒரு வடிவத்தில்தான் இருக்கமுடியும். வெவ்வேறு வடிவத்தில் இருக்கின்றவென்றால், அதில் ஒன்று மட்டும்தான் காதலாக இருக்கமுடியும்.

இப்படித்தான் காதலிக்கவேண்டும் என காதலுக்கென்று ஒரு தனி மரபு இருக்க முடியாது. அதேவேளையில், நம் மரபில் காதல் எப்படி இருந்திருக்கிறது என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கே "எங்க காலத்துல நாங்க இப்படியா காதலிச்சோம்?" என்ற நம் அப்பாக்களின் கேள்விகளும் சரி, "நீங்க அப்படியிருந்தா நாங்களும் அப்படித்தான் இருக்கணுமா" என்ற நம் பதில்களும் சரி, இரண்டுமே காதலைப் பற்றியதல்ல, அவரவர்தம் காலத்துக் காதலர்களைப் பற்றியது மட்டுமே என்ற தெளிவுக்கு வரவேண்டியுள்ளது.

அவரவர் காலத்துத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல் அவர்கள் காதலிக்கும்விதம் மாறியிருக்கிறது. கடிதம், தந்தி, நாணையத் தொலைபேசி, கைப்பேசி, குறுஞ்செய்தி, காணொலி அழைப்பு என, காதல் எல்லா வகை தொலைத்தொடர்பு வசதிகளிலும் தன்னைத்தானே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது, எதிர்காலத்திலும் இது தொடரத்தான்போகிறது. இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் முந்தைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப்பார்க்கையில், "நீங்க அப்படியிருந்தா நாங்களும் அப்படித்தான் இருக்கணுமா" என்ற பதிலில் ஒரு இயல்பிருப்பது உண்மைதான். அதேபோல், அஞ்சல் காலத்துக் காதலர்களிடம் இருந்த முதிர்ச்சி இன்று இருக்கிறதா என்றால் இல்லை என்று ஒப்புக்கொள்ளவும் வேண்டும். உணர்வுகளை மட்டும் பரிமாற்றிக்கொள்ளும் நிலையில் இருந்ததாலோ என்னவோ, அவர்களின் ஊடலில்கூட இன்பம் இருந்தது. அந்த ஊடல் என்றும் பிரிவுக்கு இட்டுச்சென்றதில்லை. அந்த வகையில், அப்பாக்களின் "எங்க காலத்துல நாங்க இப்படியா காதலிச்சோம்?" என்ற கேள்வியும் சரிதானோ எனத் தோன்றுகிறது.

இது காதலைப் பற்றிய புரிதல் தொடர்பானது. உலகமயம் என்ற வேடத்தில் வணிகமயமாகிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், காதல், நட்பு, தாய்மை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடும் ஒரு பொதுத்தன்மைக்குள் அடங்கிக்கொண்டிருக்கிறது என்ற புரிதல் தொடர்பானது. தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களும் அதைச் சார்ந்துள்ள காதலிக்கும் முறைகளும் இங்கே பரிணாம வளர்ச்சியடைவதில் தவறில்லை, ஆனால், அந்தக் காதலே பரிணாம வளர்ச்சி அடைவது ஒரு இயற்கைப் பேரிடர் என்ற புரிதல் தொடர்பானது.

இதை இன்னும் எளிமையாகச் சொன்னால், நம்மிடமிருந்து நம் கைப்பேசியையும் கணினியயும் பிடுங்கிவிட்டால் நம் உணர்வின் ஊடகம் தான் நம்மைவிட்டுச் செல்லவேண்டும், அந்த உணர்வே நம்மைவிட்டுச் செல்லக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில் உங்களிடம் உணர்வு எஞ்சுமா என்றால் நம்மில் பலரிடம் பதில் இருக்காது என்பதே கசக்கும் உண்மை. ஏனென்றால் உலகமயமாக்கல் நம் உணர்வுகளை வணிகத்துக்குள்ளக்கிவிட்டது. பி.டி கத்தரிக்காய், வெங்காயம் போல், நம் காதலும் நட்பும் கூட மரபணு மாற்றப்பட்டதாக இருக்கின்றன.

அதனால்தான் என்னவோ 96 திரைப்படத்தில் வரும் ராம் போன்ற கதைமாந்தர்கள் நாம் ரசிக்கும்படி இருந்தாலும் நமக்குத் அயலாக இருக்கின்றனர். அதுவே பொக்கிஷத்தின் நாயகன் லெனினுக்கு பொருந்துகிறது. அத்தனை நாட்கள் சந்திக்காமல், பேசாமல் இருப்பவர்களிடம் எப்படி இன்னும் காதல் அப்படியே எஞ்சியிருக்கிறது என்ற கேள்விக்கு அதுதான் பதில். அவர்கள் உணர்வின் ஊடகத்தை நம்பியில்லை. அந்த உணர்வை மட்டும்தான் நம்புகிறார்கள். அப்படி இருந்தால்தான் அது உணர்வு, இல்லையென்றால் அது வெறும் உரையாடல்.

எப்போதுமே திரைப்படங்கள் போன்ற மனதினுள் எளிதில் நிரம்பும் ஒரு படைப்புக்கலை தான் தத்தம் தலைமுறைக்குக் காதலிக்கக் கற்றுக்கொடுக்கும். நமக்கு முந்தைய தலைமுறையில் கூட அவர்கள் கண்ட காதல் திரைப்படங்கள் தான் அவர்களை காதல் பாதையில் இட்டுச்சென்றன. அவர்கள் காலத்துக் காதல் கதைகளெல்லாம் கொஞ்சம் செயற்கையானதாகவே இருக்கும். ஆனாலும் அவர்களின் காதல் அப்படியிருக்கவில்லை. இன்றோ நாம் திரையில் காணும் ராமும் லெனினும் காதல் பற்றிய புரிதலில் முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். நாமே நம் காதலில் செயற்கைத் தன்மைகளைச் சேர்த்துகொண்டிருக்கிறோம்.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சனவரி 8, 2019.