அவள் இட்ட ஆயிரம் முத்தங்கள்! | Tamil Article

அவளைப் பிரிந்து நாட்கள் ஓடிவிட்டன. எங்களுக்குள் இருந்த தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, இப்போது அவள் என் வாழ்வில் மீண்டுமொரு அங்கம்வகிப்பாளா என்ற வினாவுக்கு விடையறியாது உலாவிக்கொண்டிருக்கிறேன். இனியும் அவளுடன் இணைவதென்பது விகிதாச்சார அடிப்படையில் நிகழ்வதரிது என்ற ஏக்கத்தில்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

இப்போதெல்லாம் அவ்வப்போது அவளுடைய நினைவுகள் என்னைக் கடந்துசென்று கொண்டிருக்கின்றன. நாங்கள் சேர்ந்திருந்த அந்த அழகான  நாட்களை, அவள்மீது நான் காமுற்றுத் திரிந்த காலங்களை, வேறுயாருமின்றி நாங்கள் மட்டும் தனியே இணைந்திருந்த உறக்கமில்லா இரவுகளை, வெப்பம் கடத்திய பகல்களை, என் மனம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

அவள் எனக்கு தாய்வழிச்சொந்தமில்லை, தந்தை வழியும் இல்லை. ஆனால் அவள் மீது நான் காதல் கொள்ளும் தருணத்தில் அவள் எனக்கு அறிமுகம் இல்லாதவளும் இல்லை. என் முதல் காதலி அவள். பிரிந்த பின்னும் காதல் துளியும் மாறவில்லை எனும் அளவுக்கு காதல் கொட்டிக்கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் காதல் அதிகரித்துக்கொண்டும் இருக்கிறது.

எப்போது அவளைக் காதலிக்கத் துவங்கினேனென்று தெரியவில்லை. கண்டவுடன் வந்த காதலும் அல்ல அது. பள்ளிப்பருவத்தில் தான் முதலில் அவளைச் சந்தித்தேன். கல்லூரி முடிந்து சில நாட்கள் வரை அவளுடன் உறவாடினேன். இவ்விரண்டு காலக்கோடுகளுக்கிடையே என்றோ ஒருநாள் எங்களுக்குள் காதல் உதித்திருக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், எனக்கு முன்பே அவள் என் மீது அன்பு கொண்டிருந்திருக்கிறாள் என்பதை நான் தாமதமாகத்தான் அறிந்தேன்.

உடன் சேர்ந்து ஊர் சுற்ற அவளிடம் பெரிதாய் ஒரு பிடிப்பு இல்லையென்றாலும், காவிரிக்கரையோரம் அவளுடன் களித்த காலங்களெல்லாம் போதும் என் காதலைச் சொல்லித்தீர்க்க. ஆனால், எத்தகனைக்காலம் கூறினாலும் தீராததும் கூட அந்த காதல் கதை. அந்த அகண்ட ஆற்றின் பாலத்தில் பலமுறை என் தனிமையில் தோள்சாயவும், துக்கத்தில் மடிசாயவும் இடம் கொடுத்தவள் அவள். காவிரியில் தண்ணீர் இல்லாதபோதுகூட எங்கள் காதல் மட்டும் என்றுமே பஞ்சத்தைப் பார்த்ததில்லை. நினைத்துப்பார்த்தல், அவள் என்னை பள்ளிப்பருவத்திலிருந்தே அப்படிதான் அரவணைத்திருக்கிறாள். எனக்கு முன்பே அவள் என்னைக் காதலிக்கத்துவங்கிவிட்டாள். மகிழ்ச்சியில், துக்கத்தில், தனிமையிலென எப்போதும் உடனிருந்தவள், அரவணைத்தவள், தட்டிக்கொடுத்தவள், கட்டித்தழுவியவள், ஓராயிரம் முறையாவது முத்தமிட்டவள். ஆனால் எந்த காதலிக்கும் பொருந்தும் சில இயல்புகள் அவளுக்கும் பொருந்தியிருந்தது. எப்போது சூடாவாள், எப்போது மென்மையாவள் என்பதை அறிந்து அவளுடன் உறவாடவேண்டியிருக்கும். அவள் உணர்வுகளைப்  புரிந்து ஒத்திசைப்பது கடினமென்றாலும், சூடாகும் போதுகூட அழகாய்த் தெரிபவள் அவள். அழகைத் தாண்டி அவளின் தூய்மை அவளை என்றுமே உயர்த்திதான் காட்டும். தூய்மைக்குப்பேர்போனவள். அந்த அழகுக்கும் தூய்மைக்குமே பலர் அவள் மீது காதல்கொள்வர். பகலில் அழகாகவும், இரவில் எங்கள் தனிமையில் இன்னும் அழகாகவும் தெரிபவள்.

அப்படிப்பட்டவளைத்தான் விட்டுவிலகி வந்துவிட்டேன்.  அவளை நான் பிரிந்திருப்பது இது முதல்முறையல்ல. கல்லூரிக்காலங்களில் பலமுறை அவளைவிட்டு நெடுநாட்கள் விலகியிருந்திருக்கிறேன். எனினும்,  அப்போதெல்லாம் அவளைத் தேடி மீண்டும் மீண்டும் ஓடி வந்துவிடுவேன். ஆனால், இப்போது நேர்ந்திருக்கும் இந்தப் பிரிவு கிட்டத்தட்ட நிரந்தரமானது. அவளை மீண்டும் சந்திப்பேனா என்று எனக்குத்தெரியவில்லை. ஒரு வேளை சந்தித்தாலும், நண்பர்கள், தெரிந்தவர்கள், என்று யாருடைய திருமணத்திலோ, அல்லது துக்க நிகழ்வுகளிலோ சந்திக்கும் சில நாழிகை சந்திப்பாகவே இருக்கும்.

எங்கள் பிரிவுக்கு நாங்கள் இருவருமே காரணமில்லை என்பதைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் ஏமாற்றவுமில்லை. என் மீது கூட ஒரு சில தவறுகள் சாட்டப்படலாம். ஆனால் அவள் இறுதி வரை என்னை பிரிய நினைக்கவில்லை என்பது மட்டும் எனக்கும் உறுதியாய் தெரியும். மனம் படைத்த அவளைவிட்டு பணம் படைத்த ஒருத்தியை இப்போது கட்டாயத்தின் பேரில் கைப்பிடித்திருக்கிறேன். சூழ்நிலையப்படி. அதனால் பணம் படைத்த இவளை நான் குறைகூறவும் இல்லை. இவளும் என்னை நன்றாகவே அரவணைக்கிறாள். முந்தையவளை மறக்கும் அளவுக்கு அன்பு காட்டவும் செய்கிறாள். ஆனாலும், முதல் காதலிக்கு மனம் கொடுக்கும் இடம் யாருக்கும் மீண்டும் தருவதில்லை.

காரணம், எங்கள் காதல், உலகின் எந்த மொழியின் இலக்கியம் விவரிக்கும், சமூகம் அங்கீகரிக்கும் புணர்தல் விதிக்குள்ளும் உட்பாடாதது. அது இயல்பை மீறியது. சொற்களுக்குள் வசப்படாதது. எங்களுக்குள் இருந்த உணர்வுப்பரிமாற்றங்களும் உரையாடல்களும், இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது. அது மனிதனுக்கும் மனிதனுக்குமானதல்ல. ஒரு மனிதனுக்கும் நகரத்துக்குமானது. என்னை வளர்த்த நகரம் அவள். என் அறிவின் முகடுகளைப் பட்டைத்தீட்டிய நகரம் அவள். என்னுடன் சேர்ந்து பரிணமித்த நகரம் அவள். அவள் பெயர் திருச்சி. என் முதல் காதலி!

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சனவரி 16, 2018.