ஒரு பாடல் எப்போதும் அந்தப் பாடலாகவே இருப்பதில்லை. நம்மோடு சேர்ந்தே அதுவும் வளர்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா கலைவடிவங்களுக்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன். முதிர்ச்சியற்ற பருவத்தில் ஒரு பாடல் என்றால் அதன் காட்சிகள்தாம். நாயகன் அணிந்திருக்கும் உடைகள், நாயகி தரும் முத்தம், அவர்களுக்குள் நிகழும் காமம்தான் பெரும்பாலும் சிறு வயதில் முதலில் ஈர்க்கும். நம் உடலும், மனமும் ஒருங்கே ஒரு பருவத்தை எட்டும் வரை பாடலின் மொழி நமக்கு வசப்படுவதில்லை. அப்படிச் சொற்கள் வசப்படும்போது காட்சிகள் தேவைப்படுவதில்லை.
'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் 'தாலாட்டும் காற்றே வா' பாடல் அப்படி என்னோடு இணைந்து வளர்ந்த பாடல். ஆரம்பத்தில் எனக்கு அது ஒரு 'ட்ரெயின் பாட்டு' மட்டும்தான். திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்குப் பேருந்தில் செல்லும்போது சாலைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டித் தடத்தையும், எனக்கு நல்லநேரம் இருந்தால் அதில் தற்செயலாகச் செல்லும் ஏதோவொரு தொடர்வண்டியையும் பார்த்து இந்தப் பாடலைப் பாடியது முதற்பருவம்.