Friday, 14 May 2021

நஞ்சைக் கக்கும் நாயாட்டு

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவுக்குப் பிறகு அவர் பேசிய, அவரைக் குறித்துப் பலர் பேசிய பேச்சுக்கள், நேர்காணல்களை தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அறிவின் எல்லையற்ற தன்மை, திரைமொழிக்குள் அவர் பொருத்திய பொதுவுடைமை கருத்தியல் என பலவற்றை அறியவும் உரையாடவும் அந்தக் காணொலிகள் உதவின.


ஆனால் அண்மையில் 'நாயாட்டு' திரைப்படத்தைக் காணும்போது, அவர் குறித்து ஒருமித்தக் கருத்தாக பலர் கூறியவொன்று மீண்டும் மீண்டும் எண்ணத்துக்கு வந்துசென்றது. திரைமொழியினூடே எளிய மக்களையும் விளிம்புநிலை மக்களையும் அரசியல்படுத்துவதற்காத்தான் தான் இந்தக் கலைவடிவத்தைக் கையில் எடுத்ததாக ஜனநாதன் கூறுவார். 

அதனால், தன் படங்களில் பெரும் கலைத்தன்மையோ, நேர்த்தியான தொழில்நுட்பமோ இருக்கவேண்டுமென பெரிதும் அவர் மெனக்கெட்டதில்லை என்றும் பலர் கூறுகின்றனர். அப்படியிருந்தும் 'இயற்கை' படத்தின் ஒளிப்பதிவு, 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' மற்றும் 'ஈ'யின் கலை இயக்கம் என அவர் படங்களில் சில ஆகச்சிறந்த திரைமொழிக்கான அம்சங்கள் இருந்தன. ஆனால், அவற்றுக்கும் மேலாக, ஜனநாதனின் நோக்கமான 'அரசியல்படுத்துதல்' அந்த எல்லா படங்களிலும் மேலோங்கி இருக்கும்.

அதே அளவுகோலைக் கொண்டு 'நாயாட்டு' படத்தை அளந்தால் வெறும் முரண்கள் மட்டும்தான் எஞ்சுகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் ஒன்றுசேர்ந்த அமைப்பாய் இயங்குவதை கடுமையாக விமர்சிக்கும் இந்தப் படம் 'எதுவும் முழுப் புனிதத் தன்மையுடன் இருக்க வாய்ப்பில்லை' என்பதை தீவிரமாக நம்பினாலும் அந்த நம்பிக்கையை ஒருசாரார் மீது மட்டும் பொருத்துகிறது. 

ஒடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் அப்பாவிகள் அல்ல என்பதை ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை எப்படியாவது சொல்லிவிடவேண்டும் என படம் முழுக்க கவனமாக இருக்கிறது. அதேவேளையில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அமைப்பாய் திரண்டு நீதிகோரும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிகழும் சதுரங்கத்தில் காவல் துறையினர் அனைவரும் அந்த இருவரின் சூழ்ச்சிக்கும், தன்னலத்துக்கும் பலியாகும் அப்பாவிச் சிப்பாய்கள் என ஒட்டுமொத்தமாக பொதுமைப்படுத்தி புனிதர்களாக்குகிறது. சாத்தான்குளம் சம்பவத்தை இந்த இடத்தில் நினைவில்கொள்க.

இயக்குநர் வெற்றிமாறன் ஒரு முறை ஒரு நேர்காணலில் சமூகம் அல்லது அரசியல் குறித்து பேசும் படங்கள் எந்தக் காலத்திலும் எந்த ஒரு கூட்டத்தையோ, சமுதாயத்தையோ, வர்க்கத்தையோ டைப்-காஸ்ட்(typecast) அதாவது பொதுமைப்படுத்தக் கூடாது என்பார். 

அதை அவர் தன் படங்களிலும் கடைபிடித்து வருகிறார். வெற்றிமாறனின் எந்த முதன்மைக் கதை மாந்தரும் முழுக்க நல்லவர்களாகவோ அல்லது  முழுக்க கெட்டவர்களாகவோ இருக்கமாட்டார்கள். அதேபோல, 'அசுரன்' படத்திலும் ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் இருக்கும் நல்லவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களில் இருக்கும் தீயவர்களையும் காட்டியிருப்பார். 

வடக்கூரில் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு ஆணின் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்கும்போது சிவசாமியைத் தடுத்து தண்ணீர் கொடுக்கும் ஒருவர், பஞ்சாயத்து செய்ய முன்வரும் வடக்கூட் பெரியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக வாதாடும் வழக்கறிஞர் என படம் முழுக்க ஆங்காங்கே பலர் இருப்பார்கள். அதேபோல, சிவசாமியின் மகன் முருகனைக் கொல்ல ஏவுவது வடக்கூரான் நரசிம்மனாக இருந்தாலும், ஏவப்பட்டு அவனைக் கொல்வது சிவசாமியின் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தாம். 

'பரியேறும் பெருமாளி'ல் வரும் பரியனின் தோழர்கள் ஜோவையும் ஆனந்தையும் இதே பட்டியலில் சேர்க்கலாம். இப்படி பல உதாரணங்களை சமூகம், அரசியல் சார்ந்த பல படங்களில் காணலாம்.

ஆனால், 'நாயாட்டு' இந்த அடிப்படை கலை நேர்மையிலிருந்து நீண்டுவிலகி நிற்கிறது. இந்தியா முழுக்க இதுவரை இந்த அமைப்பைச் சாடி 'விசாரணை', 'நியூட்டன்' உள்ளிட்ட வெகுசில படங்களே வந்துள்ளன. அந்தப் படங்களின் நோக்கம்தான் தன் நோக்கமும் கூட என்பதுபோல கூறிக்கொண்டு இப்படி ஒடுக்கப்பட்டவர்களின் முதன்மை அரசியல் வடிவமான 'அமைப்பாய் திரள்'வதை அபத்தமான முறையில் முரண்களோடு கையாண்டு இருக்கிறது 'நாயாட்டு'. 

அவர்கள் முழுக்க நல்லவர்களா, அத்தனை அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என்பதெல்லாம் அந்த இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் வைத்திருக்கும் நம்பிக்கை. ஆனால், நாம் இங்கே உற்று நோக்கவேண்டியது இந்த முரணைத்தான்.

கேரளாவின் அழகிய புவியியல் வடிவமைப்பும், காட்சிமொழியும் இந்த முரணை ஒருபுறம் தாங்கி மறைக்கின்றன என்றால், பாதிக்கப்படும் மூன்று காவலர்களில் இருவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தாம் என மறுபுறம் 'எஸ்கேப்பிசம்' செய்து தப்பித்துக்கொள்கிறது இதன் திரைக்கதை.

உறவு முறைகளுக்குள்ளே இருக்கும் சிக்கல்கள், சமூகத்தின் ஆணாதிக்க மனநிலை, எனப் பலவற்றை தன் உலகத்தர கலை நேர்த்தியிலும் காட்சி மொழியிலும் அழுத்தமாக, திரைப்படமாக்கும் வல்லமைகொண்ட மலையாள சினிமா, அவ்வப்போது 'சி.ஐ.ஏ', 'கப்பேலா', 'நாயாட்டு' என அரைவேக்காட்டு அரசியல், சமூகப் புரிதலுடன் அழகியல் மிஞ்சும் 'திரெளபதி'களை எடுத்து நஞ்சைக் கக்குகிறது. 

இதுபோன்ற வேளைகளில்தான், ஜனநாதன், தன் கலையில், நேர்த்தி, நேர்மை என்ற இரண்டு தன்மைகளுக்கும் இடையில் எதற்கு முதன்மைத்துவம் கொடுத்தார் என்பதைப் மீண்டும் மீண்டும் ஆராயவேண்டியிருக்கிறது.

- சந்தோஷ் மாதேவன்

சென்னை, மே 14, 2021.

Note: All pictures were taken from the internet!

No comments:

Post a Comment