திரைமொழியின் அழகு நாம் காண்பதிலும் கேட்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. ஒருவனின் மனத்துக்குள்ளேயே திகழும் மகிழ்ச்சியையோ சோகத்தையோ ஒரு புதினம் அல்லது சிறுகதை சில வரிகளிலும் பத்திகளிலும் விவரிக்கும் அளவுக்கான எளிமை திரைமொழிக்கு வாய்ப்பதில்லை. திரைப்படத்தின் படைப்பாளிகள் அதன் பார்வையாளர்களுக்கு அந்த மன ஓட்டங்களைக் கண்டிப்பாகக் காட்டவோ கேட்கவோ வைக்கவேண்டும்.
அப்படித்தான் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என, பல கலைஞர்களின் தேவை உருவாகிறது. ஒருவன் தனியாக ஒரு அறையில் இருப்பதைப் படமாக்கிவிட்டால் அவன் தனிமையிலும் துக்கத்திலும் இருப்பதை உணர்த்திவிடமுடியுமென்றால், மிஸ்டர் பீன்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். அப்படியென்றால் அவன் தனிமையையும் சோகத்தையும் பிற உள்ளுணர்வுகளையும் எப்படி பார்வையாளர்களிடம் கடத்துவது? அந்தக் கடத்தலை ஒளி ஒலி வடிவத்தில் செய்வதுதான் திரை கலை.
அந்தவகையில் நம் தெற்காசியத் திரைப்படங்களில் பாடல்களும் அவற்றினுள் பொதிந்துகிடக்கும் இலக்கியமும் பெரும் பங்குவகிக்கின்றன. அந்த உணர்வுசார் இலக்கியத்தைக் கையாள்வது பாடலாசிரியர்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்கிறது. ஒரு கதாபாத்திரம் தன்னைப் பற்றியோ தன் காதலன்/காதலி/தாய்/தந்தை/நண்பர் என யாரையோ பற்றிப் பாடும் பாடலில் கவிதையின் பொருளை நேரடியாகச் சொல்லிவிடலாம். 'காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா' எனப் பாடும்போது, தன் நாள் அம்மாவிடம்தான் தொடங்குகிறது; அவள் தேவதையைப் போன்றவள் எனப் பல தரவுகளை அந்த நேரடி வரிகளில் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால், திரைக்கதையின் போக்குக்கு இடையே கதைமாந்தர்களின் மன மாற்றங்கள், அவர்கள் நேர்கொள்ளும் சிக்கல்கள் உள்ளத்தின் அளவில் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை நேரடியாகச் சொற்களை அடுக்கிப் பாடிவிடமுடியாது. அங்குதான் ஒரு பாடலாசிரியர் கவிஞராகவேண்டியிருக்கிறது.
"இன்பம் ஒரு புறம் நின்று துன்பம் மறுபுறம் நின்று சுற்றிச் சுழலது இந்த மண்மேலே" என நா முத்துக்குமார் எழுதுவதற்கான காரணமும் அதுவாகத்தான் இருக்கிறது. 'கற்றது தமிழ்' திரைக்கதைப்படி, நாயகன் பிரபாகரன் ஒரு கதைசொல்லி. தன் வாழ்வின் இருண்ட பக்கங்கள், ஒளிபடர்ந்த பக்கங்கள் என எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே இருக்கிறான். தன் சிறுவயதில் ஏற்பட்ட பேரிழப்புக்குப் பிறகு, தன் மகிழ்ச்சி நிறைந்த மழலைக் காலத்தையொத்த வாழ்வைத் தன் தமிழையா வழியே மீண்டும் கண்டடைகிறான். சிரிப்பும் அழுகையும் மாறிமாறி நிகழும் அவன் வாழ்வைத்தான் இன்பம் ஒரு புறமும் துன்பம் மறுபுறமும் சுற்றிவருகின்றன.
என்றாலும், தன் தமிழையாவைத் தனக்கான முழுமையான வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளப் பிரபாகரனுக்கு வேறொரு காரணமும் இருக்கிறது. தனிமை. தன் தந்தை அவனைவிட்டு தூரமாகச் சென்றுவிட்டார். தாய் இப்போது இல்லை. மழலை காலத்துக் காதலி அந்த மழலை நினைவுகளில் மட்டும்தான் எஞ்சியிருக்கிறாள். இந்தச் சூழலில் தன் காதலி, அப்பா என இருவரையும் நினைவுபடுத்தும் தமிழையா அவன் வாழ்வுக்குள் வருகிறார். 'எதிரிலே அந்த மழலைக் காலம் மீண்டும் திரும்புதே' என்ற வரியில் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தக் காரணங்களே போதும். ஆனால் இந்தத் திரைக்கதை தனக்கான காரணங்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகிறது. அந்தத் தமிழையாவின் கண்ணோட்டத்தில். அவரும் அதே தனிமையில்தான் இருக்கிறார். கிட்டத்தட்ட வயதான பிரபாகரனாக. அவன் பிரபாகரனைத் தன் பிம்பமாகத்தான் பார்க்கிறார். அதனால் அவர் தனிமைக்குப் பிரபாகரன் துணையாகிறான். 'தன்நந்தனி ஆளென்று யாரும் இல்லை என்று உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே' என்கிற வரிகள் இருவரின் தனிமைக்கான விடையாக அன்பு தன்னைப் பொருத்திக்கொண்டது என எழுதப்பட்டிருக்கிறது.
பல துயரங்களைத் தொடர்ந்து இன்பம் சூழும் வாழ்க்கையாக இருப்பதால், இருவருக்குமே அந்த அனுபவங்கள் தரும் உணர்வு ஆழமாக விவரிக்கப்படவேண்டியிருக்கிறது. அடுத்த இரண்டு வரிகளில் அதைப் பதிவு செய்கிறார் முத்துக்குமார். "ஏதோஏதோர் உணர்ச்சி... எரிதழலில் மழையின் குளிர்ச்சி... கடல் அலைகள் மோதி மோதி... மணல் சிற்பமாகுதே" என முரண்களை அடுத்தடுத்து பட்டியலிடுகிறார். எரிகின்ற தழலில் மழையின் குளிர்ச்சி என இன்பமும் துன்பமும் வெவ்வேறு புறம் நின்று சுழலும் வாழ்க்கை இங்கே விளக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பிரபாகரன் தன் பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிப் பருவத்துக்குள் புகவிருக்கிறான். சோகமான நாட்களைக் கடல் அலைகள் போல வந்து தன் தமிழையா கரைத்துவிட, மணலாக இருந்தவன் இறுதியில் முழு சிற்பமாகிறான். மணலைக் கூட சிற்பமாக்கும் ஆற்றல் கொண்டது அன்பு என்றே நான் புரிந்துகொள்கிறேன்.
அந்த அன்பு தான் புது கண்ணாமூச்சி ஒன்றை ஆடி அந்த இரு பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களையும் அவர்களின் இதயத்து வானிலையையும் மாற்றியது. நீரில் மிதக்கும் எறும்புகளாக இருக்கும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இலையாக வந்து படகாகுகின்றனர். நீண்ட நாட்களாக வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்க விரலொன்றை வேண்டிக்கிடந்தவர்கள் இறுதியில் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொண்டனர். பாடலின் தொடக்கம் முழுவதும் இப்படி உவமைகள்தாம் விரவிக்கிடக்கின்றன.
இந்தப் பாடலில் இடம்பெற்றும் படத்தில் இடம்பெறாத ஒரு பகுதியிருக்கிறது. பிரபாகரனின் நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்குமான தொடர்புகள் அதில் கவிதையாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 'காதல் என்பது என்ன புள்ளி கோலமுமல்ல காற்றில் கலையும் போது தள்ளாட' என பிரபாகரனின் ஆனந்தி நினைவுபடுத்தப்படுகிறாள். அவளைவிட்டு தொலைதூரம் தள்ளியிருக்கிறான் அவன். அவர்கள் முகம் மாறியிருக்கலாம். மறந்தும் போயிருக்கலாம், காற்றில் கலைந்த கோலம்போல. ஆனால், கோலத்தைக் கலைக்கும் காற்றுக்குக் காதலைக் கலைக்கும் அளவுக்கு வலு இல்லை. காற்றுக்குமட்டுமா?
அதைத் தொடர்ந்து வரும் வரிகள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கின்றன. 'எங்கோ எங்கோர் உலகம் உனக்காகக் காத்துக்கிடக்கும்' என இந்தப் பாடலில் முதல் முறையாக பிரபாகரனிடம் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார் முத்துக்குமார். அந்த எதிர்காலம் உன்னிடம் வந்துசேர நீ இன்னும் சில தூரம் இப்படியே பயணிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால், 'நிகழ்காலம் நதியைப் போல மெல்ல நகர்ந்து' போகிறது.
உன் கடந்த காலத்து ஆனந்தியும் இன்னும் மழலையாகவே உன்னுடன் இந்த நதியாக நடக்கும் நிகழ்காலத்தில் நினைவுகளாகத் தொடர்ந்து வருகிறாள். காற்று கலைத்த கோலம் போல அந்த நதியும் காய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், காற்றால் கூட தொடமுடியாத காதல் நதியைப் போலக் காய்வதில்லை என்பதைப் பிரபாகரனிடம், 'நதி காயலாம் நினைவில் உள்ள காட்சி காயுமா' எனக் கூறி முடிக்கிறார்.
ஒருவேளை இந்தப் பகுதி முழுவதும் முதல் பகுதியைப் போல் இல்லாமல், தமிழையாவைத் தவிர்த்துவிட்டு, பிரபாகரனின் உள்ளத்து உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்துவதால் இதைப் திரைப்படத்தில் சேர்க்காமலிருந்திருக்கலாம். என்றாலும், திரைக்கதையின் உணர்வுக் கடத்தலுக்கு இந்த வரிகளும் கண்டிப்பாக வலு சேர்த்திருக்கும் என்றே நம்புகிறேன்.
திரைக்கதையின் போக்கில் ஒரு பாடல் எப்படிவேண்டுமானாலும் இடம்பெறலாம். கதை மாந்தர்களின் மன ஓட்டம், உறவுமுறை என எதை வேண்டுமானாலும் பதிவுசெய்யலாம். ஆனால், எந்தக் காரணத்துக்காகவும், அந்த உணர்வுகளையோ, உறவுமுறையையோ சிதைத்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட முரண்பாடுகளுக்குத் திரைக்கதை இடம் கொடுக்கக்கூடாது. அதுவே திரையிசைக்கான இலக்கணம். இந்தப் பாடல் அந்த இலக்கணத்தின் ஒரு ஆகப்பெரும் எடுத்துக்காட்டு.
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, நவம்பர் 12, 2020.
படம்: கற்றது தமிழ்
இயக்கம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
No comments:
Post a Comment