Monday, 20 April 2020

இரயில் பயணங்களில் #1: அங்கமெங்கும் உயிரானவன்

ஒரு பாடல் எப்போதும் அந்தப் பாடலாகவே இருப்பதில்லை. நம்மோடு சேர்ந்தே அதுவும் வளர்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா கலைவடிவங்களுக்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன். முதிர்ச்சியற்ற பருவத்தில் ஒரு பாடல் என்றால் அதன் காட்சிகள்தாம். நாயகன் அணிந்திருக்கும் உடைகள், நாயகி தரும் முத்தம், அவர்களுக்குள் நிகழும் காமம்தான் பெரும்பாலும் சிறு வயதில் முதலில் ஈர்க்கும். நம் உடலும், மனமும் ஒருங்கே ஒரு பருவத்தை எட்டும் வரை பாடலின் மொழி நமக்கு வசப்படுவதில்லை. அப்படிச் சொற்கள் வசப்படும்போது காட்சிகள் தேவைப்படுவதில்லை.

'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் 'தாலாட்டும் காற்றே வா' பாடல் அப்படி என்னோடு இணைந்து வளர்ந்த பாடல். ஆரம்பத்தில் எனக்கு அது ஒரு 'ட்ரெயின் பாட்டு' மட்டும்தான். திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்குப் பேருந்தில் செல்லும்போது சாலைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டித் தடத்தையும், எனக்கு நல்லநேரம் இருந்தால் அதில் தற்செயலாகச் செல்லும் ஏதோவொரு தொடர்வண்டியையும் பார்த்து இந்தப் பாடலைப் பாடியது முதற்பருவம்.


"அது எப்படி அஜித் பாடுறது அவ்வளவு தூரம் தள்ளியிருக்குற ஜோதிகாவுக்குக் கேட்கும்? எட்டு மணிநேரப் பயணத்தில் இந்த ஐந்து நிமிட பாடலை அஜித் 96 முறை மீண்டும் மீண்டும் பாடினால்தான் ஒட்டுமொத்த பயணத்துக்கும் பாடியிருக்க முடியும்" என வீண் தர்க்கம் செய்தது இடைப்பருவம். இப்போது நானும் அந்தப் பாடலும் முதிர் பருவத்தை அடைந்துவிட்டோம். அஜித் சின்னாவாகிவிட்டார். அந்தச் சின்னாவும் சரி, அவர் ஏங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் செல்லாவும் சரி, அவர்களின் அந்தப் பயணமும் சரி, எதுவும் தெரியவில்லை. எனக்கும் அந்தப் பாடலுக்கும் இடையே எஞ்சியிருப்பதெல்லாம் அதன் கவிதையும் அதன் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியும்தான்.

ஊடல் அளவுக்குக் கூடல்கூட காதலர்களைக் காமுறச் செய்வதில்லை. அவர்களின் மனமும் ஏனோ கைகளுக்கு எட்டும் பழங்களைவிட, தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி இலைகளின் மீது காதல் கடிதம் வரைய விரும்புகிறது. காதலி அருகிலிருக்கும்போது அவள் மீது கொட்டத்தெரியாத இன்பத்தை, அவளோடு ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரூடலின் காலகட்டம் வட்டியோடு சேர்த்துக் கட்டணமாகப் பெறுகிறது. சின்னா வட்டியும் முதலுமாக செல்லாவின் மீது அதை இந்தப் பாடல் முழுக்கச் செலுத்திக்கொண்டிருக்கிறான்.

நீ எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், என் உயிர் நீதான், என் உரிமை நீதான் என்கிறான் சின்னா. பாடலுக்கு இடையில் அவன் காணும் கனவுகளில்கூட அவன் உலகத்தில் அவள் மட்டும்தான் இருக்கின்றாள். பின்னணியில் அவர்களை விலக்கிவைத்திருக்கும் அந்த இரயிலும். "ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து... திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ" என்கிறான்.


அவன் விரும்புவதெல்லாம் அவர்கள் மட்டுமே கடத்தவேண்டிய தனிமையைத்தான். அந்தத்  தனிமையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் எனப் பாடல் முழுவதும் பட்டியலிடுகிறான். அவள் பாதத்தை நெஞ்சில் பதியவேண்டும், அவள் பன்னீர் எச்சிலைச் சுவைக்கவேண்டும், அவள் கண்களோடு என் கண்களை உரசவேண்டும், நாங்கள் உறவாடி இளைத்துப் பேச்சிழந்துகிடக்கும் வேளையில் அவள் கட்டுக்கூந்தல் காட்டில் நுழைந்து கள்ளத்தேனைப் பருகவேண்டும் என அடுக்கிக்கொண்டே போகிறான், சின்னா.

நீ என்னை விட்டு விலகிச் சென்றாலும் நான் உன்னை விடுவதாக இல்லை என்பவன், உன்னைவிட்டு உன் உயிர் விலகிச் சென்றாலும் நான் உன்னை விடுவதாக இல்லை என்றும் சொல்கிறான். காதலில் இந்த விலகல் மட்டும் ஏனோ இன்னும் அதிகமாகத்தான் காதலிக்கவைக்கிறது. "உன் உடலை உயிர் விட்டுப் போனாலும் என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ" அப்படிப் பாய்ச்சியாவது உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்ந்துவிடுவேன் எனச் செல்லாவிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறான். இந்த வரியின் ஆழத்தைப் புரிந்துகொள்ள எனக்கோ பல காதலிகளைக் கடந்துவரவேண்டியிருந்திருக்கிறது. ஒருவேளை இந்தப் பாடலை விளங்கிக்கொள்ளும் பருவம் முன்பே வந்திருந்தால் எப்படிக் காதலித்திருக்கவேண்டும் என்றும் கற்றிருப்பேன், விலகிச் சென்ற காதலிகளையும் விடாமல் பிடித்துவைத்திருப்பேன். வளரத் தாமதித்துவிட்டேன். 'ட்ரெயின் பாட்டு', காதல் பாடலாக மாறுவதற்குள் 17 காதலிகளை இழந்துவிட்டேன்.

தொடர்வண்டிகளுக்கும், காதலர்களுக்கும் அப்படி என்னதான் ஒப்பந்தம் என்று தெரியவில்லை. ஊடல், கூடல், முத்தம், புணர்ச்சி, மௌனம், பிரிவு, எனக் காதலின் எல்லா அங்கங்களையும் பார்த்துவிட்டன. இத்தனைக் காதலர்களைச் சுமந்து சென்ற தொடர்வண்டி சின்னாவை மட்டும் பின்தொடர வைத்திருக்கிறது. எத்தனை மகிழ்வான விழாவுக்குச் சென்றாலும், எத்தனைப்பேருடன் குழுவாகச் சென்றாலும், தொடர்வண்டியின் ஜன்னல் இருக்கை தனிமையையும், மென்சோகத்தையும் இரயில் நிலையத்தைவிட்டு வெளியேறிய ஒரு சில மணித்துளிகளிலேயே கொடுத்துவிடுகிறது. அப்படி அந்தத் தனிமையிலும் மென்சோகத்திலும் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்க்கும்போது சின்னா மட்டும்தான் செல்லாவுக்குத் தெரிகிறான். அந்த விலகல்தான் சின்னா பாடியதையெல்லாம் செல்லாவுக்குக் கேட்கவைத்தது. அந்தத் தொடர்வண்டி அவனை விட்டுச் சென்றதும் நன்மைக்குத்தான். அவளோடு அதே தொடர்வண்டியிலேயே பயணித்து அவளது எதிர் இருக்கையிலிருந்து பாடியிருந்தால் கூட அந்தப் பாடல் அந்தப் பாடல் கேட்காமல் போயிருக்கும். அந்த தொலைவுதான் அவள் கனவில் அவனை அருகில் இட்டுவந்திருக்கிறது.


என் கடந்தகாலத்தின் மீது எனக்கிருக்கும் வியப்பெல்லாம் ஒன்றுதான். "ஆளில்லாத இரும்புப் பாதையைப் பார்த்தா சிறு வயதில் இந்தப் பாடலைக் கொண்டிருந்தேன்?" என இப்போது என்னை வெட்கம் கொள்ளச் செய்துவிட்டார் வைரமுத்து. செல்லா அவ்வளவு தூரம் தள்ளியிருப்பதே, சின்னா அவளை மார்போடு அணைத்து அவள் மூச்சுவிடும் வாசனையை முகரவேண்டி, தன் கர்வத்தையெல்லாம் தொலைத்து ஏங்கவேண்டும் என்பதற்குத்தான் என்றே விளங்கிக்கொள்கிறேன். என் முந்தைய பருவங்களிலிருந்த எல்லா கருத்துக்களும் இந்தப் பருவத்தில் உடைந்துபோய்விட்டன.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, ஏப்ரல் 20, 2020.

No comments:

Post a Comment