அடேய் சந்தோஷ்,
கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் பகுத்தறிவுக்குப் புலப்படாத உணர்வாகவே இருந்துவந்தது. இப்போதும் அப்படியே இருக்கிறது என்றே நம்புகிறேன். பல முறை காதலில் விழுந்து, எழுந்தவன் என்றபோதிலும் இந்த வகைக் காதல் கதைகள் மட்டும் உன்னை எப்போதும் வேடிக்கைக்குள்ளேயே ஆழ்த்தியிருக்கின்றன.
பிறகேன், நீ மட்டும் அவள் நினைவிலேயே நேரத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறாய். ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது உன்னைப் பார்ப்பவன் நான். வலப்பக்க வகிடா இடப்பக்க வகிடா என்பதே உன் அன்றாடத்தின் ஆகப்பெரும் கேள்வியாக இருந்தது. அன்றைய பொழுதில் உன் சீப்பு எந்தப் பக்கம் சரிகிறதோ அந்தப் பக்கம்தானே வகிடெடுத்து முடியை வாரிக்கொண்டிருந்தாய். இப்போது மட்டும் ஏன் கண்ணாடியின் மீது இத்தனை கவனம். வெளியில் எட்டிப்பார்த்த முதல் நரைமுடியைக்கூட வெட்டிவீசிவிட்டாய். அவள் உன்னை அப்படி மாற்றிவிட்டாளா என்ன? போதாத குறைக்கு வெட்கம்வேறு.
வெட்கப்பட்டு, நீ என்னையே கண்ணாடியில் பார்த்து காலம் கழிப்பதெல்லம் இருக்கட்டும். கொஞ்சம் உன்னையும் பார்த்துக்கொள். அவள் நினைவில் இருக்கும் உனக்கு இறுதிவரை எஞ்சப்போவது அந்த நினைவுகள் மட்டும்தான் என்பது நீயே அறிந்தவொன்று. எவ்வளவு முயன்றாலும் உன் வாழ்வை அவள் அலங்கரிக்கப்போவதில்லை. அவள் சூழல் அத்தகையது. இது உனக்கு முதல்முறையுமில்லை.
எனக்குத் தெரியும். அவளைக் கண்ட அந்தத் தருணத்திலேயே அவள் மீது வைத்த கண்ணை உன்னால் அகற்றமுடியவில்லை. உலகில் அழகாகப் படைக்கப்பெற்ற அத்தனையுமே அழகற்றுப்போனது அந்தவொரு நொடியில்தானே. அந்த நாளின் நினைவுகள், அதனைத் தொடர்ந்து வந்த எத்தனைப் பின்னிரவுகளைச் சூரையாடின என்பதும் எனக்குத் தெரியும். அப்படியொரு பின்னிரவில் நீ இதை எழுதிக்கொண்டிருக்கிறாய். அதே கண்ணாடியின் முன் அமர்ந்து. என் முன் அமர்ந்து. இப்போது தூங்கி காலையில்தான் விழிக்கப்போகிறாய். ஆனாலும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் முடியைச் சரிசெய்துகொள்கிறாய். கண்டவுடன் காதல் என்றால் உனக்கு வேடிக்கை எனச் சத்தமாகச் சொல்லிவிடாதே. ஊர் சிரித்துவிடும்.
அவள் முடி நெற்றியில் கோலமிடுவதில் உனக்கு என்ன சங்கடம். சுற்றியிருப்பவர்களை மறந்து, சூழலை மறந்து, இடம், காலம், இரவு, பகல் என எல்லாவற்றையும் மறந்து, இப்படியா கண்களை நெற்றியில் மேயவிடுவாய். ஒப்புக்கொள்கிறேன், அவள் அழகாகத்தான் இருக்கிறாள். அவளுடைய சிறு சினுங்கல்களும் அதனினும் சிறிய இரு இதழ்களுக்கிடையே கோடிட்ட புன்னகையும், உன்னைத் தவிர உலகில் யார் கண்ணுக்கும், ஏன் அவள் கண்ணுக்கே புலப்படாத கன்னக்குழிகளும் அழகாகத்தான் இருக்கின்றன. அப்படியிருந்து என்ன பயன்?
அவளிடம் இதுவரை நீ இவற்றைச் சுட்டிக்காட்டி பேசவில்லை. இனியும் பேசப்போவதில்லை. அப்படி பேசியும் ஒன்றும் ஆகப்போவதுமில்லை. கடைசி வரை அவளிடம் நீ பேசுவதற்காகச் சேகரித்துவைத்திருக்கும் சொற்களெல்லாம் என்னிடம் செய்துகாட்டும் உரையாடல் ஒத்திகைகளிலேயே ஒலித்து ஒலித்து தேயப்போகின்றன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். உனக்கு அந்தத் தெளிவுவரும் வரை காத்திருப்பேன்.
எந்தப் பாடலைக் கேட்டாலும் அது அவளுக்காகவே எழுதப்பட்டதாய் தோன்றுவதெல்லாம் உனக்குப் புதிதல்ல. பல முறை, பல 'அவள்'களுக்காக, பல பாடல்களைக் கேட்டவன் நீ. ஆனால், இப்போது மட்டும் பாடல்களுக்குப் பின்னால் ஏன் விசித்திரமாக உலாவிக்கொண்டிருக்கிறாய். ஒருவேளை இதுவரை அந்தப் பாடல்களின் வரிகளில் காணாத ஏதும் புதிய மறைபொருளைக் கண்டுவிட்டாயா என்ன?
தயவு செய்து இது காதல் என்ற முடிவுக்குமட்டும் வந்துவிடாதே. நாளை இன்னொருத்தி வந்தால் வேறொரு மறை பொருளைக் கண்டடைவதில் வல்லன் நீ. வைரமுத்துவுக்கும், முத்துக்குமாருக்கும், நாள்தோறும் ஒருமுறையாவது நீ நன்றி சொல்வதைக் கேட்டுக் கேட்டுச் சலிப்படைந்துவிட்டன என் காதுகள்.
இந்தச் சலிப்பைக்காட்டிலும், என் கவலையெல்லாம் ஒன்றுதான். உன் முன்னாள் காதலிகளுக்கு இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டபோதுகூட கண்களை மூட மறந்தவன் நீ. இப்போதோ, பாப்பாய்க்கும் ஆலிவுக்கும் இடையே மூளும் காதல் காட்சிகளுக்கெல்லாம் வெட்கம்கொள்கிறாய். அவள் உன்னை அப்படி என்னதான் செய்துவிட்டாள்.
இந்தக் கனவு நிலைக்கப்போவதில்லை எனத் தெரிந்தும், இதை உண்மை என்ன நினைத்து நினைத்து அதைத் துரத்திக்கொண்டிருக்கிறாய். இத்தனை ஆசைகளைக் கொண்டிருந்தும் அவளிடம் அதை சொல்லமுடியாது, உனக்கு நீயே கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறாய். இதிலிருந்தாவது புரியவேண்டாமா உனக்கு?
அவளை நினைத்தபடியே, அவளுக்காகவே எழுதப்பட்டதாகக் கருதி எத்தனையோ நா முத்துக்குமார் பாடல்களைக் கேட்டுத் தீர்த்துவிட்டாய். அவற்றினூடே நீ கேட்ட ஒரு வரியையும் இங்கே நினைவுபடுத்துகிறேன். உன்னைத் தொட்டு தொட்டு போகும் இந்தத் தென்றல், ஒரு காலமும் உன் தேகமெங்கும் வீசப்போவதில்லை. ஏனென்றால், அது வானவில் இல்லை. வெறும் சாயம். அது தானாகக் கரைவதற்குள் நீ அதனுள் கரைந்துவிடாதே.
பித்துப் பிடித்து அலைந்ததெல்லாம் போதும். நெற்றியில் சுழன்று பறக்கும் முடி, சினுங்கல், புன்னகை என, அவளுக்காக மொழியை வளைத்ததும் போதும். அரங்கம் ஏறாத இந்த நடகத்துக்கு ஒத்திகை எதற்கு? அவள் ஓரப் பார்வைகூட உன் மீது விழப்போவதில்லை. அப்படியிருக்கையில் அவளுக்கே தெரியாத காதல் மட்டும் ஏன் உன்னுள் நிகழவேண்டும்? யார் கண்ணுக்கும் புலப்படாத நீ மட்டுமே ரசித்து, சிக்கிக்கொண்டிருக்கும் கன்னக் குழிகளைப் பற்றிச் சொன்னேன் அல்லவா. முடிந்தால், உன் காதலை அந்தக் குழியிலேயே புதைத்து மறைத்துவிடு. அந்தக் கன்னக் குழிகளைப்போலவே உன் காதலும் யாருக்கும் புலப்படாமலேயே போகட்டும்.
இப்படிக்கு,
சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சனவரி 29, 2020.
No comments:
Post a Comment