Monday, 20 January 2020

1917: போர்த் 'திரைப்படத்' தொழில் பழகு

புதிதாக வெளியான படங்கள், பழைய படங்கள் என ஓராண்டில் குறைந்தது 350 படங்களையாவது கண்டுவிடுகிறேன். என்றாலும், திரைப்படம் என்பது, கதை சொல்லும் கலையா, இல்லையென்றால் தொழில்நுட்பங்களால் அந்தக் கதைகளை ஒரு பேரனுபவமாக மாற்றும் கலையா என்ற விவாதம் எனக்குள்ளே நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. கண்டிப்பாக இந்த இரண்டுக்கும் இடையே, இரண்டு நிலைகளையுமே ஒத்த, அந்தந்த காலக்கட்டத்துக்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றவாறு தன் வடிவத்தையும் மேம்படுத்திக்கொள்ளும் கலை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.

இப்படியொரு காட்சியை எடுத்துக்கொள்வோம். கூட்டமாக இருக்கும் ஒரு போர்ப் படை, தனிமையில் இருப்பதாக பார்வையாளர்கள் உணரவேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம். தனியாக இருக்கும் ஒருவனின் தனிமையைக் காட்டுவது எளிது. ஒரு கூட்டம் தனிமையில் இருப்பதாய் எப்படிக் காட்சிபடுத்தமுடியும்? இதைச் சாத்தியப்படுத்துவதுதான் திரைக்கலை. தன்னுடைய 'டன்கிர்க்' படத்தின் வாயிலாக அதைச் செய்துகாட்டினார், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். நீண்டநெடும் கடற்கரையில் ஒன்றாக ஒருமித்து நிற்கும் படையை அவர்களிடமிருந்து தள்ளி நின்று தூரத்திலிருந்து ஒரு வைடு ஷாட் மூலமாக ஐமாக்ஸ் கேமிராவில் படம்பிடித்து, குழுமியிருக்கும் ஒரு கூட்டத்தின் தனிமையை உணரவைத்தார்.

1917

யாராவது வந்து நம்மைக் காப்பாற்றிவிடமாட்டார்களா என்ற அந்தப் போர்வீரர்களின் ஏக்கத்தை, அதே வீரியத்துடன், யாராவது வந்து அவர்களைக் காப்பாற்றிவிடமாட்டார்களா எனக் காண்பவர் மனத்துக்குக் கடத்தினார் நோலன். அதுவே அந்தப் படத்தின் வெற்றிக்கான காரணமாக இருந்தது. நகைச்சுவையாக இருந்தாலும் 'டன்கிர்க்'கிற்கு நேர்மாறானது 'மிஸ்டர் பீன்' தொடர். தனியாக இருக்கும் ஒருவனைத்தான் காட்டுவார்கள். ஆனால் ஒருபோதும் அவன் தனிமையில் இருப்பதாக உணர்த்தமாட்டார்கள். அதையும் செய்யவல்லது திரைக்கலை.

தற்போது வெளியாகியிருக்கும் '1917' படத்தை இத்தகைய தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான காரணங்கள் ஏராளம். திரைக்கதையின் மிட்பாயிண்ட் (மையப்பகுதி) வரை ஒரு ஷாட், அதன் பிறகு படத்தின் இறுதிவரை மற்றொரு ஷாட் என மொத்தம் இரண்டே ஷாட்டுகளில் எடுக்கப்பட்டிருக்கும் படம். உண்மையில் இது பல ஷாட்டுகளில் படமாக்கப்பட்டிருந்தாலும் படத்தொகுப்பு நுணுக்கங்கள் மூலம் சில திரைவித்தைகளைச் செய்து இந்தப் படத்தை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியிருக்கின்றனர். இவையெல்லாம் எப்படி படமாக்கப்பட்டிருக்கின்றன என்ற காணொலிகள் இணையத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

டன்கிர்க்

பொதுவாக நீளமான ஷாட்டின் மூலம் ஒரு காட்சி படமாக்கப்படுகிறது என்றால் பார்வையாளர்களுக்கு அதன் வாயிலாக பரபரப்பையோ, கதை மாந்தர் கொண்டிருக்கும் உணர்வுகளின் ஆழத்தையோ உணர்த்துவதே இயக்குநரின் நோக்கமாக இருக்கும். 'வடசென்னை'யில் ராஜன் கொல்லப்படும் காட்சி, 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இடைவேளைக் காட்சி, 'அங்கமாலி டைரீஸ்'ஸின் இறுதிக்காட்சி என இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். ஆனால், ஒரு முழு படத்தையே ஒன்று அல்லது இரண்டு ஷாட்களில் படமாக்குவது, அல்லது அப்படியிருப்பதாகக் காட்சிபடுத்துவது அரிது.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'பேர்டுமேன்' என்ற ஆங்கிலப் படம், 2015-ல் வெளியான ஜெர்மானியப் படம், 'விக்டோரியா' உள்ளிட்ட மிகச் சொற்பமான படங்களே இத்தகைய முறையில் உருவாகியிருக்கின்றன. ஒரு நூற்றணடையும் கடந்துள்ள திரைத்துறை வரலாற்றில், இதுவரை எல்லா மொழிகளையும் சேர்த்தே 50க்கும் குறைவான ஒரு ஷாட் படங்கள் வெளியாகியுள்ளன. 1948-ம் ஆண்டில் வெளியான தன் 'ரோப்' படம் மூலம் இந்த முறையை முதலில் முயன்றவர், திரை இயக்க மேதை ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக். இந்த முறையில் உருவாகியிருக்கும் '1917' அடிப்படையில் ஒரு போர்ப் படம். அதுவும் முதலாம் உலகப் போரில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் குறித்த படம்.

1917

எப்படி போர் புரிவதற்கென சில நெறிகள் இருக்கின்றனவோ, காலங்காலமாக போர் குறித்த கலைப் படைப்புகளும் சில நெறிகளைப் பின்பற்றி வருகின்றன. போர் எத்தனைக் கொடியது, அவசியமற்றது என 'களவழி நாற்பது' தொடங்கி, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' வரை சொல்லிக்கொண்டேதான் வருகின்றன. வெற்றி பெறுபவர்களால் எழுதப்படும் பெருமைமிகு வரலாற்றுப் பக்கங்களில், இப்படிப்பட்ட கலை வடிவங்கள்தாம் போரின் கொடிய விளைவுகளையும் கூறுகின்றன. '1917' கிட்டத்தட்ட அந்த அறத்தைத்தான் தன்னுடைய உட்பொருளாகச் சுமந்து வருகிறது. அதை ஆழமாக உணர்த்தவே இந்த ஒரு ஷாட் முயற்சி. அப்படியென்றால் இங்கே தொழில்நுட்பத்தைத் தாண்டி ஆராயவேண்டியிருக்கிறது.

இரண்டு கருத்தியல்களுக்கு இடையே மூளும் வாதம், சண்டை அல்லது போர் குறித்த படைப்பை உருவாக்கும்போது பொதுமைப்படுத்துதல் எளிதில் நடந்துவிடுவது வழக்கம். யூதர்கள் அனைவரும் நல்லவர்கள், நாஜீக்கள் அனைவரும் கொடியவர்கள் என்ற கணக்கிலேயே பெரும்பான்மையான இரண்டாம் உலக்கப் போர் திரைப்படங்கள் இன்றளவும் வெளியாகி வருகின்றன. இந்தப் பொதுமைப்படுத்துதலை, 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்', போன்ற திரைப்படங்கள் அவ்வப்போது தவிர்த்தும்வந்துள்ளன. அந்த வகையில், 'டன்கிர்க்' ஒரு புதிய வகை போர்த் திரைப்படமாக அமைந்தது. படத்தின் தொடக்கம் முதலே எந்த இடத்திலும் ஒரு ஜெர்மானியப் படை வீரரையும் காட்டமலேயே ஒரு முழு திரைக்கதையையும் போர்க்களத்தில் அமைத்திருந்தார் நோலன். இத்தனைக்கும் பிரித்தானிய படைவீரர்களை மூன்று புறமும் சூழந்திருப்பது நாஜீக்கள்தாம்.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

'டன்கிர்க்'கில் பிரித்தானியப் போர் வீரர்களுக்கு நேர்ந்த அதே போன்ற ஒரு சிக்கல்தான் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான 'கேசரி' படத்தில், பட்டான் படையின் பிடியில் சிக்கியிருந்த பிரிட்டிஷ்-இந்திய போர்வீரர்களுக்கும் நேர்ந்தது. ஆனால், 'கேசரி' ஒரு போர்ப்படம் என்பதையும் கடந்து காவி அரசியல் பரப்புரை திரைப்படமாக உருவாக்கப்பட்டது. கேசரி என்றால் காவி எனப் பொருள் தருகிறது இந்தி மொழி.  இதனால், முழுக்க முழுக்க இசுலாமியர்களாலான பட்டான் படையை, இரக்கமற்றதாகவும், அவர்களைக் கொடியவர்களாகவும் காட்டி, இந்தியப் போர்வீரர்களை புனிதப்படுத்துவதே அந்தப் படத்தின் நோக்கமாக இருந்தது. தமிழில் வெளியான 'காற்றுவெளியிடை', 'சொல்லிவிடவா' போன்ற படங்களும் இந்த வகையில் அடக்கலாம். இரண்டையும் போர்க் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால்.

'டன்கிர்க்', 'கேசரி' என இந்த இரண்டு வகைப் படங்களில் '1917' தேர்ந்தெடுத்திருப்பது 'டன்கிர்க்'கின் பாதையை. பத்துக்கும் குறைவான ஜெர்மானிய வீரர்களை மட்டுமே இந்தப் படத்தில் காணமுடிகிறது. காரணம் படத்தின் நோக்கம் ஜெர்மானியர்களை இழிவுபடுத்துவது அல்ல. இதன் முதன்மை நோக்கம், அந்த இரண்டு போர்வீரர்களும் ஆறு மணிநேரங்களுக்குள் தரைவழியாக ஒரு போர் முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்குச் சென்று ஒரு பெரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவேண்டும். அதன் மூல 1600 வீரர்களின் உயிர் காப்பற்றபடும். இதனூடாக போரின் தாக்கம், விளைவு இரண்டையும் மறைமுக நோக்கமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டுமென்பதே.

கேசரி

"நீ அந்த செய்தியை அவரிடம் கொண்டுசேர்க்கும்போது, சிலரை சாட்சியாக வைத்துக்கொள், காரணம் இங்கே சிலருக்குச் சண்டையிடுவது மட்டுமே நோக்கமாக இருக்கிறது" என்ற வசனம் படத்தின் இடைப்பகுதியில் ஒரு பாத்திரத்தால் சொல்லப்படுகிறது. போர் முனையில் நின்று சண்டையிடுபவர்களுக்கு போர் எத்தனை ஒவ்வாமையைக் கொடுக்கிறது என்பதை இந்தக் காட்சி உணர்த்துவதாகவே நான் பார்க்கிறேன். "இன்று இல்லையென்றாலும் அடுத்த வாரம் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான கட்டளை வரத்தான்போகிறது" என விரக்தியில் கூறப்படும் வசனங்களும்கூடம் படத்தில் வருகின்றன.

இந்த வசனங்கள் அல்லாமல், தங்கள் பயணத்தில் அந்த இருவரும் கடந்துவரும் பலக் காட்சிகளிலும் போரின் கொடுமைகளைப் படமாக்கியிருக்கிறார்கள். வயிறு கிழிந்து இறந்துகிடக்கும் ஒருவனின் உடலுக்குள் தெரியாமல் வழுக்கிச் செல்லும் கை, பெற்றோரற்று விடப்பட்ட குழந்தை, நண்பனை, குடும்ப உறுப்பினர்களை இழக்கும் தருணங்கள், மனிதர்களின் அதிகாரத் திமிருக்குப் பலியான குதிரைகள், மாடுகள், நாய்கள் என படமெங்கும் ஒருநூறாண்டுக்கு முன் நிகழந்த நிகழ்வின் வலியை மனத்தில் கனமாக இறக்குகிறது '1917'.


படத்தின் ஒருக் காட்சியில் ஜெர்மானியர்களின் சுரங்க அறையை கண்டடையும் அந்த இரண்டு விரர்களும் அவர்களுடைய தொழிநுட்பத் திறனைக் கண்டு வியப்பதாகக் காட்டப்படுகிறது. அவர்கள் 'அடடே' எனக் கூறி முடிப்பதற்குள் கம்பிகளால் கட்டப்பட்ட ஒரு வெடிகுண்டையும் கண்டடைகிறார்கள். தவறுதலாக ஒரு எலி அந்தக் குண்டை செயல்படுத்திவிடுகிறது. அந்த ஒட்டுமொத்த சுரங்கமே நிலைகுலைந்துவிடுகிறது. அந்த நொடியில் எனக்குள் ஒருமுறை பளிச்சிட்டுச் சென்றது ஒரு மாதத்துக்கு முன்னால் நாம் கண்ட 'இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு'. ஜெர்மானியர்களின் மேம்பட்ட தொழில்நுட்பமாக இருக்கட்டும், அல்லது பிரித்தானியர்களின் பின்னடைந்த தொழில்நுட்பமாக இருக்கட்டும். இன்னமும் செயல்பாடத, செயல்படக் காத்துக்கொண்டிருக்கிற எத்தனை வெடிகுண்டுகளை இப்படி நிலத்துக்கு அடியில் பதித்துவைத்திருக்கிறார்கள் அவர்கள்?

உலக்கப்போர்களின் போது தோண்டப்பட்ட இத்தகைய சுரங்கங்களுக்கு மேல் இப்போது நகரங்கள் உருவாகியிருக்கலாம். அந்த நகரங்களிலும் எலிகள் இருக்கலாம். '1917' என்னுள் கடத்தியிருப்பது இந்த அச்சத்தைதான். ஒரு போர்த் திரைப்படம் ஏற்படுத்தவேண்டியது இத்தகைய உணர்வைத்தான் என நம்புகிறேன். அந்த வகையில் இந்தத் திரைப்படம் கதை சொல்லும் கலைவடிமாக இருக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். மூன்றாம் உலகப்போரை விவாதப் பொருளாக்கிவரும் சூழலில் ஆதிக்கச் சிந்தனையாளரகளுக்குத் தங்கள் சிந்தனைகளைத் தூக்கியெறிந்து வரலாற்றைத் திரும்பிப் பார்க்க '1917' ஒரு கடைசி வாய்ப்பு.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சனவரி 20, 2020

No comments:

Post a Comment