Tuesday, 8 October 2019

அசுரரைப் போற்று!

ஒரு கதை, இரு வேறு ஊடகங்களின் வாயிலாகவோ, இரு வேறு மொழிகளிலோ சொல்லப்பட்டால், இரண்டும் வெவ்வேறு படைப்புகளாகத்தான் கருதப்படவேண்டும். புதினமாக இருக்கும் ஒருக் கதை மேடை நாடகமாகலாம், அந்த நாடகம் பாவைக்கூத்தாகலாம், அந்தக் கூத்து திரைப்படமாகலாம். எல்லாவற்றிலும் கதை ஒன்றாக இருந்தாலும், எல்லாமே ஒரே படைப்பல்ல. நாவல்களைப் படித்துவிட்டு, அவற்றைப் படங்களாகப் பார்க்கும்போது, இது நாவலில் இல்லையே, என்ற கேள்வியோ கருத்தோ எழுந்தால், உங்களின் முன்முடிவுகளை நீங்கள் மறுபரிசீலனைக்கு அனுப்பவேண்டும்.

எழுத்து வழி கதை சொல்லல், திரைவழி கதைசொல்லல், என ஒன்றோடொன்று தொடர்பில்லாத இரண்டு கலை வடிவங்களை அவற்றின் தனித் தன்மைகளை உணர்ந்து நுகர்வதே அந்தக் கலைகளுக்குத் தரப்படும் முதல் அங்கீகாரம்.

அதேவேளையில், ஒருக் கதை என்பது, அதில் வரும் பல நிகழ்வுகளின் தொடரா என்பதையும் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது. அடிப்படையில் ஒருக் கதை சொல்லப்படுவதன் கராணம், அது சொல்லவரும் மூலக் கருத்தை அதன் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதுதான். சிலப்பதிகாரம், காப்பியமாகப் பாடப்பட்டபோதும் சரி, கதையாக சொல்லப்பட்டபோதும் சரி, திரைப்படங்களாக வெளியானபோதும் சரி, அதன் மையக் கருத்து ஒன்றாகத்தான் இருந்தது. இது கட்டுக்கதைகள், மதம் சார்ந்த கதைகள், ஊர்ப்புறக் கதைகள், என எல்லாக் கதைகளுக்கும் பொருந்தும். அவை எந்த வடிவில் வந்தாலும் அவற்றின் அடிப்படைக் கருத்து, முதன்மைச் செய்தி ஒன்றாகத்தான் இருக்கும்.

இதுவரை சொன்ன இரண்டு முடிவுகளும் இல்லாத மூன்றாவது ஒரு நிலை இருக்கிறது. பல்வேறு வடிவங்களில் வெளியாகும் ஒரே வகையான நிகழ்வுகளின் தொடர் வெவ்வேறு மூலக் கருத்தைக் கொண்டு கையாளப்பட்டால், அவை ஒரே கதை ஆகாது. ஒவ்வொன்றும் ஒருத் தனிக் கதை. ஒருக் கதைக்கு ஒரு மூலக் கருத்து மட்டுமே இருக்க முடியும். அந்தக் கருத்து மாறிவிட்டாலோ, பரிணாம வளர்ச்சி அடைந்தாலோ அது புதிய ஒருக் கதையாகத்தான் இருக்கும்.


அந்த வகையில், 'அசுரன்' திரைப்படம் சொல்லவரும் கருத்து, பூமணியின் 'வெக்கை' புதினத்தின் மூலக் கருத்திலிருந்து விலகியே உள்ளது. 'அசுரன்' திரைப்படம் குறித்த மதிப்புரைகளுக்கு முன் இந்தத் தெளிவைக்கொள்வது ஒரு பெரும் தேவை. 'லாக்கப்' புதினத்தைப் 'விசாரணை' எனப் படமாக்கியபோது அதன் மையக் கருத்தான மனித உரிமை மீறல், கேடு சூழ்ந்துள்ள காவல்துறையின் கட்டமைப்பு குறித்து வலுவான எதிர்க் கருத்தைப் பதிவு செய்திருந்தார் வெற்றிமாறன். அந்தப் படத்தின் இரண்டாம் பாதி, புதினத்தில் இல்லாத நிக்ழவுகளால் காட்சிப்படுத்தப்பட்டிருதாலும், கதையின் மையக்கருத்தை மாற்றாமல், அந்த நிகழ்வுகளின் நீட்சியாகத்தான் இருந்தது.

ஆனால், 'அசுரன்' மற்றும் 'வெக்கை' இடையே இந்தக் கருத்தொற்றுமையைக் காணமுடியாது. அடிப்படையில் 'அசுரன்' சாதிய வன்முறைகளை, ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் ஒருவனின் கதை. 'என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன்', 'கல்வி கற்று உன்னைப் போல ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்தால், நீ எனக்குச் செய்ததை நான் யாருக்கும் செய்யமாட்டேன்' என்பதே இந்தப் படத்தின் கருத்தியல். இதுதான் 'வெக்கை'யின் கருத்தியலா என்றால், இல்லைதான்.


அண்ணனைக் கொன்றவனைக் கொல்லும் ஒருத் தம்பியைக் காப்பாற்ற அவன் குடும்பமும், அவர்கள் சார்ந்துள்ள சமூகமும் எப்படி நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு இயங்கியலோடு செயல்பட்டு அவர்களின் அந்தச் சிக்கலில் துணை நிற்கின்றன என்பதே 'வெக்கை'. அம்மா, அய்யா, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, சமூகம் என எல்லோரும் சிதம்பரத்தை எப்படிப் பாதுக்காகிறார்கள் என்பதை ஒரு சிறிய பயணத்தின் வாயிலாக 'வெக்கை' சொல்லும்.

அடிப்படையில் இந்த இயங்கியல் கண்ணோட்டத்தில்தான் 'வெக்கை'யிடமிருந்து 'அசுரன்' வேறுபடுகிறது. இந்த வேறுபாடு அந்தப் புதினத்தின் சில கதாப்பாத்திரங்களைப் படத்தில் தவிர்த்ததில் தொடங்குகிறது. குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் சிதம்பரத்துக்கு இருந்த உணர்வுப் பரிமாற்றங்களையும் 'வெக்கை'யில் காணலாம். அந்த உணர்வுகளே அவன் சிக்கலைச் சந்திக்கும்போது அவனுக்கு அரணாகின்றன. அந்த உறவுமுறைகளைக் குறித்த அலசல் 'அசுரன்' படத்தில் குறைவே. ஒருவேளை அந்த உணர்வுப் போராட்டங்களை முதல் பாதியிலும், தன்னுடைய கருத்தைக் குறித்த நிகழ்வுகளை இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால், 'விசாரணை' போன்றில்லையென்றாலும் 'வெக்கை'யின் மையக் கருத்தின் நீட்சியாகவாவது 'அசுரன்' உருவாகியிருக்கும்.


அதேவேளையில், இதனால் 'அசுரன்' படத்தைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் அதன் திரைக்கதையில் இல்லை என்ற முடிவையும் எடுத்தவிடக்கூடாது. இந்தப் படத்தைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன. திரைக்கதையெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அதில் முதன்மையானது அந்தப் படம் பேசும் அரசியல், அதிலும் குறிப்பாக அது யாரை எதிர்த்துப் பேசுகிறது என்பதுதான்.

தமிழகத்தின் சாதிய அடக்குமுறைகளுக்கும், ஆதிக்க மனப்பான்மைக்கும் பொதுப்படையான அடையாளங்களாகக் காட்டப்படுபவை சில குறிப்பிட்ட சாதிகள். வட தமிழ்நாடு என்றால் வன்னியர்கள், மத்திய மற்றும் தென் தமிழ்நாடென்றால் முக்குலத்தோர், மேற்குத் தமிழகத்தில் கவுண்டர்கள். இவர்கள் மட்டுமன்றி, வெள்ளாளர்கள், நாடார்கள், முதலியார்கள் உள்ளிட்டோரின் ஆதிக்கத்திலும் சில நிலப்பரப்புகள் அடையாளம்காட்டப்படுகின்றன.

இப்படி ஒரு பகுதியை ஒரு சாதியின் ஆதிக்கப்பகுதியாக்கிய ஒரு மேலோட்டமான கருத்தைப் பரப்பிவைத்திருந்தாலும், இந்தச் சாதிகளையெல்லாம் விட மிகக் கொடிய சாதிய வன்முறைகளிலும் அடக்குமுறைகளிலும் ஈடுபட்டவர்கள், அதிலும் தமிழகம் முழுக்க எல்லா பகுதிகளிலும் வெவ்வேறு வடிவங்களில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் நாயுடுக்கள் மற்றும் நாயக்கர்கள். சமூகநீதி குறித்துப் பேசத் தொடங்கினால் அந்த வரலாற்றில் அதிகமாக மறைக்கப்பட்டதும் இவர்கள் செய்த அடக்குமுறை பற்றிய வரலாறுதான். "இப்போ இருக்குறது எங்களோட அரசாங்கம்தான்" என அசுரன் படத்திலேயே ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இதுவே அந்த வரலாறு மறைக்கப்பட்டதன் காரணம். நீண்டகாலமாகவே அவர்களின் ஆதிக்கம் தமிழக அரசாங்கத்தில் ஓங்கியே இருக்கிறது. காமராஜர், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இத்தனை ஆண்டுகால தமிழக அரசியலில் தமிழர்களின் தலைமை மிகச் சொற்பமாக இருப்பதன் காரணமும் இதுவே என்பது தமிழ்த் தேசியவாதிகளின் கருத்து.


நாயுடு மற்றும் நாயக்கர்களின் சாதிய மனப்பான்மை குறித்த பதிவுகள் இலக்கிய உலகிலேயே மிகக் குறைவுதான். அப்படியென்றால் திரைத்துறையில் சொல்லவேதேவையில்லை. அப்படியிருக்கையில், 'வெக்கை' போன்ற ஒரு கதையின் களத்தை எடுத்து திரைமொழிக்கு மாற்றியது முற்றிலும் பாராட்டுகுரியது. பாளையக்காரர்களாக இருந்த நாயுடுக்கள் மற்றும் நாயக்கர்கள் தென் மாவட்டங்களில் செய்த நிலப்பறிப்புகள் மட்டுமன்றி, வடமாவட்டங்களில் நிகழ்த்திய குடிசை எரிப்பு, படுகொலைகள், ஒடுக்கப்பட்டவர்கள் காலணிகள் அணிவதைத் தடுக்கும் அடக்குமுறை, நாயுடு நாயக்க முதலாளிகள் ஒடுக்கப்பட்ட சமூக தொழிலாளிகள் மீது செலுத்தும் அதிகாரம், பஞ்சமி நில ஆக்கிரமிப்பு என எல்லாவற்றையும் சேர்த்து காட்சிப்படுத்தியிருக்கிறது 'அசுரன்'.

குறிப்பாக கீழ்வெண்மணி படுகொலையை ஒத்த காட்சி இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பது தமிழ்த் திரை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வென்றே சொல்லலாம். அந்தப் படுகொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய கோபாலகிருஷ்ணன் நாயுடுவை வெட்டிக்கொன்ற அமல்ராஜின் கதையை சிதம்பரத்தின் அய்யா சிவசாமி மீது பொருத்தி அதை அவருடைய முன்கதையாக்கியிருப்பது இந்தப் படத்தின் நோக்கத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.


என்றாலும், இத்தனைச் சிறப்புகளுக்கு இடையிலும் ஒரு சில குறைகளையும் சேர்த்தே இந்தப் படம் உருவாகியிருக்கிறது என்பது என் வருத்தம். 'ஆண்ட சாதிகள்' என்றொரு சொல்லாடலைப் பயன்படுத்தி பொதுமைப்படுத்தியிருப்பது ஒரு விதத்தில் சரியென்றாலும், குற்றம்சாட்டப்படுபவர்களோடு எல்லோரையும் சேர்த்திருப்பது மீண்டும் அந்தப் பொதுக் கண்ணோட்டத்துக்கே படத்தைத் தள்ளுகிறது. குடிசைகள் கொளுத்தப்படும் காட்சியைவைத்து கீழ்வெண்மணி படுகொலை குறித்து விவாதங்கள் எழுவதற்குப் பதிலாக மீண்டும் வன்னியர்களைக் 'குடிசை கொளுத்திகள்' என்ற அடைமொழிக்கு ஆளாக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

படத்தில் காட்டப்படும் ஆதிக்க சாதி இன்னார்தான் என்பதை உறுதிசெய்ய எத்தனையோ குறியீடுகள் இருந்தாலும், கடைசி வசனமான 'ஒரே ஊருல இருக்கோம் ஒரே மொழி பேசுறோம்', மீண்டும் தவறான திசையில் இட்டுச் செல்வதை மறுக்கமுடியவில்லை. படத்தில் காட்டப்படும் ஆதிக்க சாதியினர் எல்லாக் காட்சிகளிலும் தமிழிலேயே பேசியிருப்பது இந்தத் திசைத் திருப்பலை மேலும் வலுவாக்குகிறது. குறைந்தது தங்கள் குடும்ப உறுப்பினர்களுடனாவது தெலுங்கில் பேசுவதுபோல் வசனமெழுதியிருக்கலாம். அதுதானே இயல்பு. இன்றளவும் அவர்கள் தத்தம் தாய்மொழியில்தானே தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.


எனினும் 'அசுரன்' படத்தை, இந்தக் குறைகளைக் காட்டி முழுவதும் சாடவும் முடியாது. சாதிய ஆதிக்கம் குறித்த பொதுப்படையான கருத்துக்கள் மீது இதுபோன்ற படைப்புகள் இன்று மிக அவசியமாகின்றன. 'வெக்கை' எழுதப்பட்ட காலக்கட்டத்தில் அதன் நோக்கம் 'ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமை' என்ற அளவிலேயே நின்றுவிட்டது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியை 'அசுரன்' கூறியிருக்கிறது. கல்விதான் உன்னை உயர்த்தும் என்பதை சத்தமாகச் சொல்லியிருக்கிறது.

'விருமாண்டி'யில் தேவர் சமூகத்தினருக்கிடையில் ஏற்படும் சிக்கலில் கமலைக் காப்பாற்றும் நாயக்கர், வரதராஜ முதலியாரின் வரலாற்றை வேலுநாயக்கர் கதையாக்கி 'நாயகன்' படம் எடுத்தது, என காலங்கலாமாக நாயக்கர்களுக்கும் நாயுடுக்களுக்கும் சபாஷ் போட்டுக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். அவர்களைப் போற்றுவதும் போற்றாமல் போவதும் அந்ததந்தப் படைப்பாளிகளின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், சாதிய வன்முறைகள் குறித்த படைப்புகளில் தேவர்களையும், வன்னியர்களையும் மட்டுமே சாதி வெறியர்களாகக் காட்டிவிட்டு, அதைவிடவும் கொடிய சாதிய வெறிச் சமூகங்களைப் போற்றுவதுதான் இங்கே நுண்ணுரையாடல் செய்யப்படவேண்டிய பொருள். அதனாலேயே அசுரனைப் போற்றவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது.


அந்த வழியில் இன்னும் பல பக்கங்களைப் புரட்டவேண்டியுமிருக்கிறது. நாயக்கப் படையெடுப்பின்போது தங்களுடன் சக்கிலியர்களை அழைத்துவந்து தமிழகத்தில் மனித மலத்தை மனிதர்களைக் கொண்டே அள்ளவைக்கும் வழக்கத்தை உருவாக்கியது, கொலு வைத்தல் போன்ற வழக்கங்களை அறிமுகப்படுத்தி தமிழ் வழிபாட்டு முறைகளைச் சிதைத்தது, ஆரியச் சிந்தனை, ஆதிக்கச் சிந்தனை எனப் பல பிரிவினைவாதச் சிந்தனைகளைத் தமிழ்ச் சமூகத்திடம் விதைத்தது என எல்லா வரலாற்றுப் பக்கங்களையும் தமிழ்த் திரையுலகம் பதிவு செய்யவேண்டும். அதற்கு 'அசுரன்' ஒருத் தொடக்கப்புள்ளியாகியிருக்கிறது. இது இன்னும் பல அசுரர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த அசுரரகள் எல்லோரும் வெளிவரவேண்டுமாயின் இந்த அசுரனைப் போற்றவேண்டியது மிக மிக அவசியம்.

- சந்தோஷ் மாதேவன்
சென்னை, அக்டோபர் 8, 2019.

1 comment:

  1. Casino near Harrah's New Orleans, LA - Mapyro
    A map showing 김제 출장안마 casinos 안산 출장안마 and other gaming facilities 논산 출장샵 located 충청북도 출장샵 near Harrah's New Orleans, LA. 성남 출장샵 Harrah's New Orleans Casino and Hotel.

    ReplyDelete