Monday, 17 December 2018

போற்றவில்லையென்றாலும் தூற்றாமல் இருப்போம்!

அண்மையில் தமிழ் மொழிக்கான தந்தி முறையை கண்டுபிடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த 'தமிழ்த்தந்தி' சிவலிங்கனார் காலமானார். அவரைப் பற்றியும் அவர் உருவாக்கிய முறையைப் பற்றியும் அவர் இறந்த பின்னரே நான் தெரிந்துகொண்டேன். இதில் நான் தலைகுனிந்து வெட்கப்படுவதற்கும் ஒரு காரணமிருக்கிறது. சிவலிங்கனாரின் இல்லம், நான் 2016ஆம் ஆண்டுவரை வாழ்ந்துவந்த திருச்சியின் அதே கே.கே நகரில்தான் இருந்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளனாக நான் திருச்சியில் பணியாற்றியபோது அவரைப் பற்றி அறியாதிருந்தது எனக்கு உறுத்தலாகவே இருக்கிறது. அவரை ஒரு முறையாவது பேட்டி கண்டிருக்கவேண்டும். குறைந்தது, தந்திச் சேவையை அரசு முடக்கியபோதாவது அவரின் கருத்துக்களைக் கேட்டிருக்கவேண்டும். நான் அதைச் செய்யத் தவறிவிட்டேன் என்பதைத் தாண்டி, அவரைப்பற்றிய செய்தி எங்கும் கிடைக்காதிருப்பது எனக்கு இன்னும் வருத்தத்தைத் தருகிறது. நேற்று பெய்த மழையில் முளைத்த காளாண்களுக்கெல்லாம் தனி பக்கம் இருக்கும் விக்கிப்பீடியாவில் கூட அவருக்காக ஒரு பக்கம் ஒதுக்க இங்குள்ள இணையதள ஆர்வலர்கள் விருப்பம்காட்டவில்லை என்பது கூடுதல் தகவல்.

சிவலிங்கனாரைத் தெரியவில்லை என்பது அவ்வளவு பெரும் குற்றமா என்றால், எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இதை நான் அவருக்காகவும் எழுதவில்லை. ஆனால், அவர் மறைவில் நான் கற்றுக்கொண்டதையும், உணர்ந்ததையும் வெளிப்படுத்தும் சரியான வழி இதுவே என நம்புகிறேன். ஏனென்றால், இது ஒரு சிவலிங்கனாரின் மறைவில் மட்டும் நான் உணர்ந்ததல்ல. இதுபோன்று அங்கீகரிக்கப்படாமல், வெளியில் தெரியாமல் வாழ்ந்து மறைந்த பல சிவலிங்கனார்கள் உள்ளனர்.

இது இப்படி இருக்கையில், சென்ற மாத இறுதியில் வெளியான 2.0 படம் ஒரு சிவலிங்கனாரை உலகுக்கு அடையாளம் காட்டியது. அல்லது, ஒரு பெரும் அடையாளத்தைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டது என்று கூறினால் இன்னும் சரியாகப் பொருந்தும்.

தன் பத்து வயதிலிருந்து பறவைகளை நேசித்து அப் புல்லினங்களுடனேயே வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்த சிவலிங்கனார்தான், 'இந்தியாவின் பறவை மனிதன்' சலீம் அலி. 2.0வில் அட்சைகுமார் ஏற்று நடித்த பட்சிராஜன் கதாப்பாத்திரம், சலீம் அலியின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது தான், இன்னும் சொல்லப்போனால், அட்சைகுமாருக்கான ஒப்பனையே சலீம் அலியைப்போலதான் செய்யப்பட்டிருக்கும்.


அத்திரைப்படம் வெளியானபின் சலீம் பற்றி பல செய்தித்தாட்களும், தொலைக்காட்சி பண்பலைகளும் சிறப்புச் செய்தித் தொகுப்புகளைப் படைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் காரணமான அத்திரைப்படம் அவர் கதாப்பாத்திரத்தை எப்படி படைத்துள்ளது என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது. உணவுச்சங்கிலியில் பறவைகளின் பங்கைப் பற்றி செல்லுமிடமெல்லாம் கூறும் ஒரு அறிவியல் அறிஞர் தான் பின் ஆவியாக/ஆராவாக வந்து அதே உணவுச்சங்கிலியிலிருக்கும் இன்னொரு உயிரான மனிதனை வேட்டையாடுகிறார். இந்த முரண்பாட்டிலேயே அத்திரைப்படத்தின் மொத்த கருவும் பொருளற்றுப் போய்விடுகிறது. இதற்கு அவர்கள் வசனங்கள் மூலம் அது 'நெகட்டிவ் ஆற்றல்' என்றெல்லாம் விளக்கம் கொடுக்க முயற்சித்தாலும், சலீம் அலி போன்று படைக்கப்பட்ட ஒரு பாத்திரம் இப்படி ஒரு பாதகனாகவும், கொலைகாரனாகவும் காட்டப்படும் திரைக்கதை முரண், இயக்குனர் சங்கர் மற்றும் எழுத்தாளர் செயமோகனின் கலை நேர்மையையும், தன்னேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இதில் இதைவிடப் பெரிய முரண் என்னவென்றால், தன் நிறுவனத்தின் கைப்பேசிக் கோபுரங்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன என்று அமைச்சரிடம் வந்து ஒரு பெருமுதலாளி காட்டமாகப் புகாரளிப்பதும், உடனே அறிவியல் அறிஞர்களெல்லோரையும் வரவழைத்து அவசரக் கூட்டம் நடத்தி, இதற்கு ஒரே வழி சிட்டியை மீட்டுருவாக்கம் செய்வதுதான் என்று, இறுதியில், முதலாளித்துவக் கைக்கூலிகளின் கைப்பாவையான ஒரு எந்திரத்தை நாயகனாக்கி, இயற்கையை மீட்டுருவாக்கப் போராடிய ஒருவனை பாதகானாக்கியதுதான்.

இப்படிப்பட்ட முரண்கள், சங்கருக்கு ஒன்றும் புதிதல்ல. ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைக்கவேண்டும் எனக் கூறும் சாக்கில் இடவொதுக்கீட்டை எதிர்ப்பது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய முதல் படமான 'ஜென்டில்மேன்' துவங்கி இன்று வரை சங்கரின் பல படங்களில் முரணுக்குப் பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும்.

ஊரெல்லாம் சட்டம் பேசும் அம்பி கடைசிவரை தலைக்கவசம் அணியாமல் தான் வண்டி ஓட்டுவான் என்று அந்நியன் படம் மீது வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் துவங்கி, அதில் அந்நியனால் கொல்லப்படும் அனைவரும் பார்ப்பனரல்லாதோர் என்பது வரை பல நுணுக்கமான கருத்துக்களும் அத்திரைப்படத்தின் மீது உள்ளது. இன்னும் உன்னிப்பாகப் பார்த்தால், அம்பியின் காதலியான ஐயங்காரு வீட்டு அழகி நந்தினியையும், கருநாடக இசைச் சபாவின் செயலாளரையும் மட்டும் தண்டிக்காமல் பாதியிலேயே விட்டுவிடுவான் அந்நியன். இதுதான் முரண்.

தனக்கு வரப்போகும் மனைவி தமிழ்க்கலாச்சரப்படி இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் சிவாஜி, அதே தமிழ்க் காலாச்சரப்படி வளர்க்கப்பட்ட அங்கவையையும் சங்கவையையும் கேலிப்பொருளாகப் பார்ப்பதும் ஒருவகை முரண்தானே. அதே தமிழ்க் கலாச்சாரத்தின் படி வாழும், சிவாஜி காதலித்து மணமுடிக்கும், தமிழ்ச்செல்வியை எப்படிச் சித்தரித்திருக்கிறார்கள் என்றும் பார்க்கவேண்டும். படத்தின் காட்சிகளில் தமிழுடைகளை அணிந்து மூடிமறைத்து வரும் தமிழ்ச்செல்விக்கு பாடல்களில் மட்டும் ஏனோ தமிழ்க்கலாச்சார உடை தரமுடியாத சூழல் வந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா? உடனே பாடல்கள் தானே, அவையெல்லாம் கனவுலகில் நடப்பவைதானே என்று கூறினால், தன் மெய்யான வாழ்வில் தமிழ்க்கலாச்சரம் என்று பிதற்றிவிட்டு, கனவை ஆபாசமாகக் காணும் சிவாஜி கதாப்பாத்திரமே ஒரு முரண்தானே?

இந்த முரண்கள் ஒருபுறமிருக்க, சங்கர் படங்களில் பொதுவாகக் காட்டப்படும் சில காட்சியமைப்புகளையும் நாம் பார்க்கவேண்டும். இந்த ஆண்டு வெளியான வட சென்னை படத்தைப்பார்த்து கொதித்த அந்தப் பகுதி மக்கள் உண்மையில் முதலில் சங்கர் படங்களுக்குத்தான் எதிர்ப்புத்தெரிவித்திருக்க வேண்டும். வட சென்னையிலாவது அங்குள்ள நல்லவனும் அந்த ஊர்க்காரந்தான், கெட்டவனும் அந்த ஊர்க்காரந்தான். அங்கே எழும் சிக்கல்களுக்கெல்லாம் காரணம் வெளியே இருந்து வந்த ஒரு அயல் முதலாளியும், அரசாங்கமும் தான். ஆனால் சங்கர் படத்திலோ, காசிக்குப்பத்து ஆண்களால் அவதிப்படும் கல்லூரி மாணவிகளைக் காக்க முதலமைச்சரே தெருவுக்கு இறங்கிவந்து 'எவ்வரிபடி' என வசனம் பேசிவிட்டு பேரூந்தைத் துரத்தியெல்லாம் சண்டையிடுவார். சங்கர் படத்தில் காசிமேடு ஆதி தான் வில்லானாக வருவார், மயிலாப்பூர் சிவாஜியோ, நங்கநல்லூர் பார்த்தசாரதியோ எப்போதும் கதையின் நாயகன் தான். அப்படியே ஒரு லீ (எ) லிங்கேசன் வண்ணாரப்பேட்டையிலிருந்து நாயகனாக வந்துவிட்டாலும் அவருடைய உடல் மொழியும், தமிழ் வளமும் படத்தின் ஒரு பகுதிக்கு மேல் வட சென்னை தமிழ் வழக்கிலிருந்து பொது வழக்குக்கு மாறிவிடும். அதாவது, அவர் பொருளாதாரம் உயர்ந்துவிட்டதாம்.

2.0வுக்குப் பின் சுஜாதா இல்லாத குறை தெரிகிறது, செயமோகன் இன்னும் உழைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கள் முளைக்கின்றன. ஆனால், சங்கரின் இந்த முரண்களெல்லாம் சங்கருடையதுதான். ஜெண்டில்மேன் எழுதிய பாலகுமாரனோ, எந்திரன் எழுதிய சுஜாதாவோ, நண்பன் எழுதிய மதன் கார்க்கியோ, அல்லது செயமோகனோ வெறும் கருவிகள்தான். இல்லையென்றால் ஜெண்டில்மேனில் திணித்த அதே பார்ப்பனியச் சிந்தனைக்கு ஒப்ப, 2.0விலும் கலியுகத்துக்குப்பின் காட்சியளிக்காத, சபிக்கபட்ட இரு முனிவர்கள் கழுகு அவதாரம் எடுத்த அதே திருக்கழுகுன்றத்தை பட்சிராஜனின் சொந்த ஊராக்க முடியுமா?

இது 2.0வில் மட்டுமல்ல. இதற்கு முந்தைய பாகமான எந்திரனிலும் இதேதான் நிலை. பல முயற்சிகள் மேற்கொண்டும் மனித உணர்வுகளைத் தரமுடியாதபோது, இறுதியில் சிட்டியை ரிக் வேதம் படிக்க வைப்பதும், அடுத்த காட்சியில் வானிலிருந்து ஒரு மின்னல் தாக்கியதும் உணர்வுகள் வந்துவிடுவதும் என திரைக்கதை எழுதப்பட்டிருக்கும். அதாவது, கடவுள் அந்த எந்திரனை மனிதனாக்கி விட்டார். ஆனால் அது ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் என்று கூறப்படும். அங்கேயே இக்கதைக்கான முரண் விதைக்கப்பட்டுவிட்டது.

இந்த முரண்களெல்லாம் நம் கண்களுக்கு அப்படங்கள் வெளிவரும்போது புலப்படாது. ஆனால், சமூகப் போராளி டிராபிக் ராமசாமி போன்ற, பலநாள் அறியப்படாமல் தீடீரென புகழப்படும் ஒரு சிவலிங்கனாரைப்பற்றி ஊரெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், 'அதான் பா நம்ம அந்நியன் படத்துல வர அம்பி மாதிரி' என்று வேறு ஒரு கோணத்தில் நம்மை நினைக்கவைக்கும். ஆனால், ராமசாமியிலிருந்துதான் அம்பி பிறந்தான் என்ற உண்மை நமக்குள்ளேயே ஒளிந்து ஒரு கட்டத்தில் அழிந்துவிடும்.

இதுபோன்று பல சிவலிங்கனார்களின் அடையாளம் அழிந்திருக்கின்றன. சிலரின் அடையாளம் இப்படிப்பட்ட கலை நேர்மையற்ற படைப்புகளால் வடிவம் மாறியும் இருக்கின்றன. அவர்களை அடையாளம் காட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை, குறைந்தது படைப்பளிகள் தன்னேர்மையுடன் நடந்துகொண்டாலாவது நல்லது.

இல்லையென்றால், பிற்காலத்தில் சலீம் அலிக்கும் இதுவே நிகழும். அதான்பா நம்ம பட்சிராஜன் மாதிரி பெரிய ஆளு.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, திசம்பர் 17, 2018.