அனைவரும் 96 படத்தின் மோகத்திலிருந்து விடுபட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். சிலர் வட சென்னை மீது காதல் வயப்பட்டும் இருப்பீர்கள். ஆதலால், இது 96ஐப் பற்றி மீண்டும் பேச வேண்டிய தருணம் என நினைக்கிறேன்.
அத்திரைப்படம் வந்த போது அதைக் கண்டு, இன்புற்று, காலம் கடந்து பின்னோக்கிச் சென்று, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருப்போம். அத்திரைப்படம் ஏற்படுத்திய மனக்கிளர்ச்சி அவ்வாறானது. ஆனால் சிலருக்கு அது வாய்க்கவில்லை என்பதும் சமூக வலைத்தளங்களில் அப்பட்டமாக தெரிந்தது. அவர்கள் கூறிய காரணங்கள் பலதரப்பட்டனவாக இருந்தன.
"நான் படித்தது ஆண்கள் மட்டும் (அல்லது) பெண்கள் மட்டும் இருந்த பள்ளி" என விளையாட்டாகக் கூறிய பலர் துவங்கி, "படத்தில் வரும் ராமச்சந்திரன் தனது பள்ளிக் காதலி ஜானகியின் நினைவிலேயே இறுதிவரை கன்னி கழியாமல் இருப்பதால், அவன் ஒரு மனநோயாளி," என காட்டமாகத் திறனாய்வு செய்தவர்களையும் நான் கடந்த அரை மாத காலத்தில் பார்த்துவிட்டேன்.
முதல் வகையைச் சார்ந்தவர்களில் பலர் அதை ஒரு கேலிக் காரணமாகத்தான் கூறியதாக நான் பார்க்கிறேன். ஒருவேளை உண்மையாக இருந்தால், அவர்களிடம் சொல்வதற்கேதுமில்லை, இத்திரைப்படத்தை எழுதி இயக்கிய பிரேம் குமார் கூட ஆண்கள் மேனிலைப் பள்ளியில் படித்தவர் தான், என்பதைத் தவிர.
இரண்டாம் வகையறாவைச் சார்ந்தவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரையைக் காணிக்கையாக்குகிறேன்.
முதலில் காதலுக்கு அடைமொழி இடும் பழக்கம் எப்போது துவங்கியது என்பதை நாம் அறியவேண்டும். அது என்ன பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், அலுவலகக் காதல்? அடிப்படையில் எல்லாமே காதல் தானே?
கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பார்ப்போம். இந்த பள்ளி என்ற சொல், சமண மற்றும் ஆசீவகச் சமயக் காலங்களுக்குப் பின் தான் பொதுப் பயன்பாட்டில் அதிகமாகக் காணக்கிடைக்கின்றது என்பது வரலாற்றாசிரியர்களின் கூற்று. ஆனால் காதலோ, கல் தோன்றி, மண் தோன்றா, தமிழ்த் தோன்றாக் காலத்தே உயிர்களிடத்தில் தோன்றியது.
அப்படியென்றால், காதலுக்கு எப்படி 'பள்ளி' எனும் அடைமொழியைத் தர முடியும். இவர்கள் மொழியில், அது காதல் கூட இல்லையாம். ஈர்ப்பாம். எதுவாக இருந்தாலும் சரி, எப்படிப்பார்த்தாலும் வரலாற்றுச் சான்றுகளின்படி இந்த காதல் தானே பள்ளிக்கு முந்தையது? வேடிக்கையான விளக்கமோ? அப்படித்தான் ராமை மனநோயாளி என்றழைப்பதும் வேடிக்கையாக இருக்கிறது.
சரி, நான் கூற வருவதை விளக்குகிறேன்.
ஏதோவொரு ஏப்ரல் மாதம் வரை 12ஆம் வகுப்பிலிருப்பவன் தான் ஒரு மாதம் விட்டு, ஜூனில் கல்லூரியில் இணைகிறான். அவன் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அது பள்ளிக்காலத்தில் வரும் 'ஈர்ப்பு'. ஆனால், மே மாதம் முழுக்க வானத்திடை இருந்து விழுந்த முதிர்ச்சியின் காரணமாக, கல்லூரியில், ஜூனில் அவனுக்கு வேறொரு பெண்ணின் மீதோ அல்லது அதே பெண்ணின் மீதோ வந்தாலும் கூட அது 'காதல்'. இதுவல்லவா, இப்படி காதலை, காலத்தோடோ, வயதோடோ ஒப்பிட்டு அளப்பதல்லவா வேடிக்கை?
பொதுப்படையாகப் பார்க்காமல், 96ல் வரும் ராமச்சந்திரனையே எடுத்துக்கொள்வோம். அவனுக்கு ஜானு ஒன்றும் பத்தாம் வகுப்பில் அறிமுகமான பெண்ணல்ல. சிறு வயது தோழி. அவள் தான் காதலியாக மாறுகிறாள். அந்த நட்பு காதலாகும் தருணம் கூட அவனால் உணரக்கூடிய அளவுக்கு முதிர்ச்சியுடன் உள்ளவன் தான் ராம்.
அதே போல் அவனை செல்லமாக 'அண்ணாத்தே' என அழைக்கும் சுபாவும் நட்பு வட்டத்தில் இருக்கிறாள். சுபாவை அவன் இறுதிவரை தங்கையாகவே நடத்துகிறான். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போதும் முதலில் அவள் கருவிலிருக்கும் சிசுவிடம் 'மருமகளே' என்றுதான் கொஞ்சுகிறான்.
இருபது ஆண்டுகளாக அவனிடம் காதல் மட்டும் அப்படியே நிலைத்திருக்கவில்லை, அவனுடைய மொத்த பண்பும் தான் என்பது இங்கே தெளிவாகிறது. அப்படியென்றால் அவனை எப்படி மனநோயாளி என்று அழைக்கமுடியும்?
என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு இருவரிக் கவிதையை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
காதல் எனும் உணர்வு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. சிங்கமோ, பூனையோ, காகமோ - எல்லா உயிரும் பிறந்து வளர்ந்து, ஒரு பருவ நிலையை அடையும்போது அவைகளுக்குள்ளேயே எதிர்ப் பாலின ஈர்ப்பு ஏற்பட்டு, பின் காமுற்று தத்தம் இனவிருத்திக்கு வழிவகுக்கும். இந்த ஈர்ப்பைத்தான் நாமும் ஏதோவொரு பருவத்தில் கொள்கிறோம். அதையே காதல் என்றும் சொல்கிறோம். ஆதலால் காதலை வைத்துதான் நாம் அந்த பருவத்துக்கு வந்துவிட்டோம் என கூற முடியுமே தவிர, இந்தப் பருவத்தில் தான் காதலிக்க வேண்டும் என விதி எழுதமுடியாது. அது முற்றிலும் இயற்கைக்கு விரோதமானது.
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, அக்டோபர் 28, 2018.

காதல் கழுதைக்கும் வரும்
ஆனால், கழுதைகள் தாஜ்மகால் கட்டுவதில்லை
- சிராப்பள்ளி மாதேவன்