Saturday, 6 October 2018

96: எனக்கு என்றுமே அக்‌ஷை தான் லேட் கம்மர்

காலத்தை நிறுத்திவைக்கும் வல்லமை கொண்ட ஒரே கலை நிழற்படக்கலை மட்டும் தான் என்பது ராமின் கருத்து. அவனும் ஒரு நிழற்படக் கலைஞன் தான். இன்னும் சொல்லப்போனால் தன் வாழ்க்கையையே நிழற்படக்கலையோடு ஒத்துப்போகும் வழியில் தான் வாழ்கிறான். ஆம், அவனுடைய காலமும் தன் ஜானுவை விட்டு வந்த 1994லேயே நின்றுவிட்டது. ஆனால், இன்றும் அவள் மீது அப்போதிருந்த காதல் துளியும் மாறவில்லை.

ஜானுவுக்கும் அப்படித்தான், காதல் மாறவில்லை. ஆனால், ராமைப்போலில்லாமல் காலம் அவளுக்கு உறையாமல் ஓடிக்கொண்டே இருந்துள்ளது. ஒருமுறை அவனிடம் கேட்கிறாள், "ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்?". ஆனால் அவனோ, "உன்ன எங்கவிட்டேனோ அங்கயேதான் நின்னுக்கிட்டு இருக்கேன் ஜானு," என்கிறான். காலம் அவன் வாழ்க்கையை நிழற்படமாக்கிவிட்டது. காதலும்தான்.

இப்படியாக பிரேம்குமாரின் '96' திரைப்படம், நமக்கு நம்முடைய காலம் உறைந்துபோன ஒவ்வொரு நொடியையும் தன் காட்சிகளால் நினைவுபடுத்திக்கொண்டே துவங்கி முடிகிறது.


என்னுடையை பள்ளிப்படிப்பை நான் முடித்தது 2011ஆம் ஆண்டில். அதற்குப்பின் ஏழு ஆண்டுகள் கடந்தும்விட்டன. இடையில் நான்காண்டுகள் பொறியியல், மூன்றாண்டுகள் ஊடகத்துறை என்று பல நண்பர்களை கண்டு உறவாடியாயிற்று. ஆனால் இன்று கூட 'late comer' என்ற சொல்லைக்கேட்டால் என் பள்ளி நண்பன் அக்‌ஷை தான் நினைவுக்கு வருவான். எனக்கு மட்டுமல்ல, என்னுடன் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த பெரும்பாலானோருக்கு அவன் மட்டும் தான் முத்திரை குத்தப்பட்ட லேட் கம்மர்.

இத்திரைப்படத்தில் வரும் அந்த வாட்சாப் குழு உரையாடல் காட்சியில் ராமை புதிதாக இணைக்கும்போது, ஒருவர் "வாடா லேட் கம்மர்" என்று வரவேற்பார். அப்போது அக்‌ஷைதான் என் கண்முன் வந்து சென்றான். அந்நொடியில் தான் உணர்ந்தேன், லேட் கம்மர் என்ற சொல்லுக்கான காலம் என் வாழ்வில் 2011லேயே நின்றுவிட்டதை.

ஆனால் அக்‌ஷைக்கு ராம் வாழ்வில் வந்ததைப்போல அந்த ஒரு நாளோ காரணமோ வரவில்லை, பள்ளிக்குச் சீக்கிரம் செல்ல. திடீரென அறிவிப்பின்றி இரண்டுநாட்கள் ஜானு விடுமுறை எடுத்ததும் துடித்துப்போகும் ராம், அந்த வார இறுதியின் இரண்டு நாட்களை ஆண்டுக்கணக்கில் கடத்தி, அடுத்த திங்கட்கிழமை வகுப்புக்கு முதல் ஆளாக வருகிறான். இதை நானே பல முறை செய்திருக்கிறேன். பல ஜானுக்களுக்காக.

என்னுடைய முதல் ஜானு என் பள்ளியைச் சேர்ந்தவளல்ல. ஆனால், அவளுக்காகவே பல நாட்கள் அரை மணிநேரம் முன்பே கிளம்பியிருக்கிறேன், அவள் பள்ளி திறக்கும் நேரத்துக்கு ஏற்ப.

திருச்சி ஐயப்பா நகருக்குள் நாங்கள் இணைந்து சுற்றாத தெருவே இல்லை எனும் அளவுக்கு எங்கள் மிதிவண்டிகளின் தடங்களில் காதல் கதையை வரைந்திருக்கிறோம். ராமும் ஜானுவும் கூட தங்கள் இறுதிச் சந்திப்பை இப்படித்தான் நிகழ்த்துகிறாகள்.

பொதுவாக ஒவ்வொரு காதல் திரைப்படம் வெளியாகும்போது, இப்படியொரு காதல் கதையை உலகத் திரைப்பட வரலாற்றில் எங்குமே பார்த்திருக்கமாட்டீர்கள் என்பார்கள். ஆனால், 96ல் இதுவரை நான் பார்த்த, வாழ்ந்த என் கதைகளையும் என் நண்பர்களின் காதல் கதைகளையும் தான் பார்க்கிறேன். இது என் கதை, எங்கள் கதை, நம்மனைவரின் கதை.

இக்காதல் கதைகளில் நமக்கு என்ன பாத்திரம் இருக்கிறதோ அதே முகாமைத்துவத்துடன் நம்முடைய நண்பர்களுக்கும் இருக்கும். அவளுடன் கடத்திய, உறவாடிய பொழுதையெல்லாம் பற்றி பகிர்ந்து கொள்வதற்காகவே என் வாழ்வில் இருந்தவன் தான் பரணி.

ஜானுவின் இன்மையில் "physically present" ஆக வகுப்பில் இருக்கும் ராமைப்போல நானும் என் நினைவையெல்லாம் வேறு பள்ளியில் இருந்த என் ஜானுவிடம் விட்டுவிட்டு, பரணியிடம் அவளைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பேன். அவனும் என் காதல் கதைகளையெல்லாம் பிசிக்காலி பிரசண்டாக இருந்துகொண்டு கேட்டுக்கொண்டிருப்பான். எங்கள் காலத்தில் பள்ளி நண்பனின் முதற்கடமை அதுவாகத்தான் இருந்தது - ஒரே காதல் கதையை ஏ.ஆர். ரகுமானின் பாடல்களுக்கு ஒப்ப மீண்டும் மீண்டும் கேட்பது.

ஒரு காட்சியில் ராம் தன் நண்பனிடம், "நான் ஜானுவ கல்யாணம் பன்னிக்கிட்டா அவ பேரு என்ன தெரியுமா? ஜானகி ராமச்சந்திரன்," என்பான். நானும் என் நண்பன் பரணியிடம் இதேபோல் கூறியதுண்டு. "என் ஆளோட இனிஷியல் 'S' தான்டா. கல்யாணத்துக்கு அப்புறமும் மாத்தவேண்டிய அவசியமில்ல" எனக்கூறி, திருமணத்துக்குப் பின் பெயர் மாற்றுவதெல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வடிவம் தான் என்பதைக்கூட அறியாது உளமாற மகிழ்ந்ததுண்டு.

பெண்ணியத்தின் கண்ணோட்டத்தில் எனக்கு இப்படி பிற்போக்குத்தனம் இருந்திருந்தாலும், நான் பல வகையில் பகுத்தறிவோடு இருந்திருக்கிறேன். பள்ளிப்பருவக் காதலர்கள் FLAMES மூலமாக தங்கள் காதலின் எதிர்காலத்தைக் கணக்கிடுவதில் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை. அதற்குப் பெரும் கருத்தியல் பின்னணியெல்லாம் இல்லை. எனக்கும் என் ஜானுவுக்கும் அதில் 'Enemy' வந்ததுதான் என் பகுத்தறிவு மேன்மைக்குக் காரணம். 96ல் ராமும் ஒரு கட்டத்தில் இந்த மேன்மையைத்தான் அடைகிறான்.

மனிதனுக்கு ஏற்படும் எந்த உறவு முறைக்கும் இல்லாத ஒரு பண்பு காதலுக்கு மட்டும் உள்ளது. மற்றவையெல்லாம் மனதளவுக்கு மட்டுமே தம்மைச் சுருக்கிக்கொள்ளும்போது, காதல் மனதையும் கடந்து கனவுகளிலும் கற்பனைகளிலும் பரந்து விரிந்துகிடக்கும். நாம் நடந்துகொண்டே இருக்கும்போது திடீரென நம்மை நிற்கச் செய்யும், திரும்பிப் பார்க்கச்சொல்லும். ஒருவேளை அவள் என்னைத் தொடர்ந்துவந்தால்? ஒருவேளை நான் அவளை மீண்டும் சந்தித்தால்? ஒருவேளை உடைந்த காதலை மீட்டெடுக்க வாய்ப்பிருந்தால்? என ஒவ்வொரு முடிந்துபோன காதல் கதையின் நீட்சியாக பல 'ஒருவேளைகள்' கற்பனைக்கு ஆயத்தமாக காத்துக்கிடக்கும்.

அந்த அத்தனை ஒருவேளைகளும் 96ஐப் பார்க்கும்போது  நமக்குள் எழும். இத்திரைப்படத்தை நான் முதல் முறை என் காதலியுடன் தான் பார்த்தேன். அதன் ஒவ்வொரு காட்சியையும் நான் ரசித்து உள்வாங்கிய அழகைக் கண்டு அவள் கொஞ்சம் கலங்கித்தான் போனாள். ஒருவேளை அவளை விட்டுவிடுவேனோ என அவளுக்குள்ளும் அந்த 'ஒருவேளை' எழுந்தது. மென்மையான மொழியில் "படத்த பாத்து ரசிச்சா மட்டும் போதும். உக்காந்து feel பன்னீட்டு இருக்காத" என்றாள். அக்கேள்வியில் தான் இத்திரைப்படம் எடுத்ததன் நோக்கம் நிறைவடைந்ததை உணர்ந்தேன்.

பரணி, அக்‌ஷை, ஜானுக்கள் என இதுவரை நான் குறிப்பிட்டதைப்போல 96க்கும் என் வாழ்வுக்குமான பல ஒற்றுமைகளை இன்னும் பெரிதாக என்னால் பட்டியலிட முடியும். இத்திரைப்படம் எற்படுத்திய தாக்கம் அவ்வாறானது. பிற காதல் திரைப்படங்களைக் காணும்போது அதன் நாயகன் அல்லது நாயகியின் இடத்தில் நம்மை நாம் பொருத்திப்பார்ப்போம். ஆனால், இதைக்காணும்போது, நம் வாழ்வுக்குள் ராமையும் ஜானுவையும் பொருத்திப் பார்ப்போம்.

அதேபோல் தான் 96இன் ராமில், என்னால் தர்மேஷையும், விக்னராஜையும், நவீனையும், எல்லாவற்றுக்கும் மேலாக சந்தோஷையும் தான் பார்க்க முடிகிறது. ஆனால், ராமை அல்ல. அதனால்தான் ராமும் ஜானுவும் சேரமுடியாமல் போகும்போது, அதை என் காதல் தோல்வியாகவே நான் நினைத்துக்கொண்டேன். அதுதான் இத்திரைப்படத்தின் நோக்கம், நினைவுகளைக் கிளறுவது.

அதனால் என் பட்டியலை இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன். ராமிலும் ஜானுவிலும் நீங்களே உங்களைத் தேடிக்கொள்ளுங்கள். உங்கள் காலமும் எங்கோ ஒரு இடத்தில் உறைந்திருக்கும் அதைக் கண்டெடுங்கள்.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, அக்டோபர் 6, 2018.