Sunday, 26 August 2018

மேற்குத் தொடர்ச்சி மலை - கல்லெறிந்து விரட்டப்பட்ட யானை

புவியியல் அமைப்புகளைச் சார்ந்த வாழ்வியலையும் மனிதர்களையும் விவரிக்கும் படங்கள் என்றோ ஒருநாள் பூக்கும் குறிஞ்சி மலரைப் போன்று தான் தமிழில் வெளிவருகின்றன. சீனு ராமசாமியின் 'தென்மேற்குப் பருவக்காற்று', ம. செந்தமிழனின் 'பாலை' என அக்குறிஞ்சி மலர்களை விரல்கள் கொண்டு எண்ணிவிடலாம்.

முல்லை நிலத்து இடையர் குல மக்களின் அன்றாடத்தை, களவை, காதலை, தாய்மையை இக்காலத்தின் கதைக்களத்தில் தென்மேற்குப் பருவக்காற்று ஓரளவுக்கு அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும். மறுமுனையில் பாலை, சில ஆயிரமாண்டுகளுக்கு முன் இருந்த தமிழர் வாழ்வியலை இலக்கிய, அகழ்வாய்வுச் சான்றுகள் கொண்டு மருதம் எப்படி பாலையாக மாறுகிறது என்ற சூழலியல் மற்றும் மாந்தரியல் செய்திகளைப் பதிவு செய்திருக்கும். அதன் உட்பொருளில் ஈழத்தமிழர் வாழ்வுரிமையையும் பற்றி பாலை விவரித்திருக்கும்.

இப்படி நிலம் சார்ந்த படங்களின் வரிசையில் பூத்த ஒரு குறிஞ்சி மலர் தான் லெனின் பாரதியின் 'மேற்குத் தொடர்ச்சி மலை'. இம்முறை குறிஞ்சி நிலத்திலேயே பூத்துள்ளது.


தன் கணவனின் பெயரைச் சொல்ல மறுக்கும் ஆனால் பச்சைக் குத்திக்கொண்டிருக்கும் பெண்களையும், இடம் வாங்குதல் போன்ற வாழ்க்கைக்கான அடுத்தக்கட்ட நகர்தல்களில் மனைவியிடம் கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுக்கும் ஆண்களையும் கொண்ட நிலப்பரப்பு அது. கணவனும் மனைவியும் இணைந்து பணிக்குச்செல்லக்கூடிய பெண்ணியத்துக்கான அவசியமற்ற ஒரு சமூகம் அது. அதைப் பற்றிதான் இப்படம் பேசுகிறது.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான திருமண வாய்ப்பை அந்த அடிவாரத்து பாக்கியம் தான் சுட்டிக்காட்டுகிறாள். ஒருவகையில் அந்த ஊரில் ஒருவருக்கொருவர் தெரியாதவர் என்று யாருமேயில்லை. விடியற்காலை அந்த இழவு வீட்டைக் கடந்து தொழிலுக்குச் செல்லும்போது ரங்கசாமி, 'யாருக்கவது தாக்கல் சொல்லணுமா?' என்று கேட்கிறான். அவர்கள் இவனுக்கு என்ன உறவென்று கூறப்படவில்லையென்றாலும், அடுத்த வீட்டுச் சாவில் கூட பங்கெடுக்காத அடுக்குமாடி கலாச்சாரம் அந்த ஊரிலில்லை என்பதை அந்தக் காட்சி நம்மிடையே சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்கிறது.


அந்த நிலத்துக் காதலும் நட்பும் உண்மையானவை. எனினும் நாகரீகத்து நகரத்து ஆட்களுக்கு அயலானவை. காப்பியின் சீனியளவைப் பற்றி விசாரிக்கும் சாக்கில் காதலின் அளவைக் காட்டிவிட்டுச் செல்கிறாள் ஈஸ்வரி. தன் வாழ்நாள் முழுக்க ஈட்டிய பணத்தில் வாங்கிய ஏலக்காய் மூட்டையை இழப்பதற்குக் காரணமாக இருக்கும் கேத்தரையை ஒரு முறை மட்டும் அடித்துவிட்டு மீண்டும் அவனுடனேயே பயணிக்கிறான் ரங்கசாமி. இந்த உறவு பிணைப்புகட்கு அவ்வளவு எளிதாக வெறும் சொற்களில் விளக்கம் கொடுத்துவிட முடியாது. அதை உணர மட்டுமே முடியும். லெனின் ஒருபடி மேலே போய் உணர்ந்ததைக் காட்சிப்படுத்திவிட்டார்.

நான் படம் பார்த்த திரையரங்கில், என்னருகே அமர்ந்திருந்த இரு நண்பர்கள் பேசிக்கொண்டது. "என்னடா இந்த ஊருல எல்லாவனும் நல்லவனாவே இருக்கான்," என்று ஒருவர் கூற, மற்றொருவர் "படத்துல வில்லனே இல்லயே," என்று வழிமொழிந்தார். இக்கதையில் பாதகன்(வில்லன்) இல்லை என்று கூறமுடியாதென்றாலும், முதல் நண்பர் கூறிய அந்தச் சொற்கள் தான் இந்தப் படத்தின் முதல் வெற்றி. அந்த ஊரில் அனைவரும் நல்லவர்கள் தான். ஆனால் அதன் உட்பொருள் என்னவென்றால், 'ஊரென்றால் அப்படித்தான் இருக்கும்.' அங்கே பொறாமை இருக்காது, பேராசை இருக்காது, சினம் இருக்காது.

இடத்தைப் பதிவு செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாகவே அதற்கான பணத்தை கொடுப்பதும், அதை விற்கும் சூழல் அப்போது இல்லை என்றதும் பணத்தைத் திருப்பித் தருவதும், நிகழ்காலத்தில் எந்த அளவுக்குச் சாத்தியமென்று தெரியவில்லை. ஆனால், நல்லவர்கள் மட்டுமே உள்ள தேவாரத்திலும், பண்ணைபுரத்திலும், வட்டப்பாறையிலும் அது நடக்கும்.


லெனின் கூறவரும் இந்த உறவுப்பிணைப்பானது மனிதர்களுக்குள் மட்டுமே நிலைத்திருக்கவில்லை. அந்த ஒவ்வொருவரின் வாழ்வியலுக்குள்ளும் இழையோடும் இக்கதையின் முதன்மைப் பாத்திரமான மேற்குத் தொடர்ச்சி மலையோடும் தான். படம் துவங்கி கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பின் தான் அம்மலைத் தொடரை முதன்முதலில் நாம் காண்கிறோம். இளையராஜாவும் அப்போதுதான் முதல் இசைக்கோர்வையையும் பின்னணியில் எழுப்புகிறார்.

ஒரு கனமழை அடித்துத் தீர்ந்த வைகறைப் பொழுதில் மலையேறத் துவங்கி புதிதாக உடன் ஏறுபவரிடம் அம்மலையின் பாரத்தைச் சட்டைப்பையில் சுமக்கச்சொல்வதில் துவங்குகிறது அந்த சுழலியலுக்கும் மக்களுக்குமான உறவு. பாரத்தைச் சுமப்பதற்கான விளக்கத்தை சாத்தன் முன்னமர்ந்து கொடுக்கும்போது, இயற்கை நேயத்தின் உச்சத்தை உணரமுடிகிறது.


அவர்களுக்கு மலை என்பது வெறும் ஒரு கற்குன்றல்ல. அந்த மொத்த சூழலியலும் தான். மொத்த மலைக்கான அடையாளமாக ஒரு மரமூட்டை வணங்குவது ஒரு புறமும், யானை வந்தால் கைகூப்பி கும்பிட்டுவிடுங்கள் அது திரும்பிவிடும் எனக்கூறி அந்த மலையின் பல்லுயிர்களுடன் இணைந்து வாழ்வது மறுபுறமும் என மலைக்கும் மனிதனுக்குமான உறவு தேவாரத்தில் இப்படியாக இருக்கிறது. அந்த மலைதான் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மூலமுதல். மழையை ஊருக்குள் அழைத்து வருவதில் துவங்கி, ஏலக்காய் விளைச்சலுக்கு ஒத்துழைப்பது, காற்றை அள்ளி வீசுவது என மேற்குத் தொடர்ச்சி மலைக்கான பொறுப்புகள் அதிகம்.

யானைகளையும் கல்லெறிந்து விரட்டத் துடிக்கும் கிறுக்குக் கிழவியையும், மலையேறும்போது மட்டும் அதன் பாரத்தைச் சுமப்பவர்களுக்கு நடுவே, தான் இறங்கும் போது சுமக்க வைத்த கிழவனையும் அந்த மலை இறுதியில் தன்னகத்தே எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகள் நம் பகுத்தறிவுக்கும் புலப்படாத சில உணர்ச்சிகளைக் கிளப்புகின்றன.


இப்படி இயல்பின் முகடுகளில் வாழ்ந்துவரும் ஒரு சமுதாயத்துக்கு எப்போது சிக்கல் நேர்கிறது என்பதையும் விளக்குகிறது இப்படம். முதலில் கூறியதுபோல் இங்கே பாதகன் இல்லயென்றெல்லாம் கூறிவிட முடியாது. சூழலோடு புணர்ந்து வாழும் எந்தச் சமூகத்துக்குள்ளும் ஊடுருவி அப்புணச்சியைச் சிதைக்கும் எதுவும், எவரும் அதற்குப் பாதகம் தான். இங்கே அது முதலாளித்துவம்.

கழுதைப்பாதை, மனிதப்பாதையென புல்தேய்ந்த வழிகளைக் காட்டிலும், தார்ச்சாலைகளை விரும்பும் முதலாளித்துவமும், காற்றைக்கூட சுதந்திரமாக சுற்றவிடாது அதைச் சிறைபிடித்து மின்னுற்பத்தி செய்யும் முதலாளிகளும், அவர்களை அண்டிப்பிழைக்கும் பொதுவுடைமைப் போர்வை மூடிய தனியுடைமைவாதிகளும் என மேற்குத் தொடர்ச்சி மலைக்கான பாதகங்கள் ஏராளம். வெளியூரிலிருந்து வந்த லோகுவை தொழிலதிபராக்கி உள்ளூர் நில உரிமையாளனும் உழவனுமான ரங்கசாமியை அவனுடைய நாட்கூலியாக்கும் வல்லமை பெற்றவை இந்தப் பாதகங்கள்.


போலிப் பொதுவுடைமைவாதியை ஒருபுறம் காட்டினாலும், நேர்மையான சாக்கோவையும் மறுபுறம் காட்டுகிறது இப்படம். இப்படி பொதுவுடமைக்குள்ளிருக்கும் மனிதர்களின் இரு வகைகளையும் காட்டுவதுபோல், பொதுவுடைமையின் இரு முனைகளையும் சேர்த்தே காட்டுகிறது. உரிமை மறுக்கப்படும்போது அதைப் போராடிப்பெறுவது, உரிமை பறிக்கப்படும்போது போரிட்டுப் பெறுவது என்ற முடிவுகளை முன்மொழிகிறது அது.

என்ன போரிட்டாலும், இறுதியில் முதலாளித்துவம் வெல்வதனால் மலை தன்னுடைய தன்மையை இழந்து, அதைச் சார்ந்த மக்களும் கூடவே தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தேனி ஈஸ்வர் இந்த அகண்ட மலைத்தொடரையும் அதன் மக்களையும் காட்டும்போதும் அக்காட்சி ஒரு கதை சொல்கிறது.


படத்தின் துவக்கத்தில் காற்றாட வீட்டு முற்றத்தில் உறங்கி எழுந்து மழை நீரில் முகம் கழுவி இயற்கையோடு சேர்ந்து வாழும் ரங்கசாமி, இறுதியில் அரசு வழங்கிய விலையில்லா மின் விசிறியும் தொலைக்காட்சியும் சூழ உறங்கிக்கொண்டிருப்பதில் லெனினும் தேனி ஈஸ்வரும் சேர்ந்து உணர்த்தும் அந்த வாழ்வியல் மாற்றம் தான் இப்படத்தின் கரு.

மொத்ததில், இந்த மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு அடர்மழைச் சாரலுக்குள் படிந்திருக்கும் அமைதியில் துவங்கி, தென்றல் எழுப்பும் இரைச்சலில் முடிகிறது.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, ஆகத்து 25, 2018.