ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அந்த பாதிப்பைவிட பெரும்வலியைத் தருவது, அதனைத் தொடர்ந்துவரும் ஊர்ப்பேச்சு. வைரமுத்துவின் வரிகள் படி பார்த்தால், 'ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு... உலகின் வாயில் ரெட்டை நாக்கு'.
ஒரு குற்றத்தின் பின்னணியில் பலகதைகள் இருக்கலாம். அதில் சில கதைகள் மெய்யாகவும் இருக்கலாம். ஆனால், அது பாலியல் குற்றத்துக்குப் பொருந்துமா என்றால், அந்த கேள்வியே குதர்க்கம். காம வன்மத்தைத் தவிர பாலியல் வன்கொடுமைக்கு வேறு என்ன காரணம் இருந்துவிடப்போகிறது. ஆனால் இந்த இரட்டை நாக்குக்கொண்ட ஊருக்கு எதுவும் விதிவிலக்கில்லை.
இன்று காலை அயனாவரத்தின் கட்டமைப்பு வளர்ச்சி அடைந்த பகுதியொன்றில் நாகரீக வளர்ச்சியடையாத மனிதர்கள் சிலரைச் சந்தித்தேன். இவர்கள் அனைவரும்தான் வைரமுத்து கூறிய அந்த இரண்டாவது நாக்கு.
கடந்த இரண்டு நாட்களாக செய்தித்தாட்களின் தலைப்புகளையும், தொலைக்காட்சிகளின் அண்மைச்செய்திக் கட்டங்களையும் நிரப்பிக்கொண்டிருக்கும் அந்த கொடுஞ்செயலைப் பற்றி அறிவீர்கள் என நம்புகிறேன். அயனாவரத்தில் கிட்டத்தட்ட 300 வீடுகள் இடம்பெறும் ஒரு அடுக்கக வளாகத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் 22 பேர் சேர்ந்து ஏழு மாதமாக அங்கே வசித்து வந்த 12 வயது செவித்திறன் குறைபாடுடைய சிறுமி ஒருத்தியை மாறி மாறி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய செய்தி அது.
பொதுவாக திரைப்படம் அல்லது கல்வி சார்ந்த செய்திகளைத்தான் அதிகமாக நான் எங்கள் செய்தித்தாளுக்குத் தருகிறேன். குற்றவியல் செய்திகளெல்லாம் தருவதற்கு தனியாக ஒரு நிருபர் பணிபுரிகிறார். இருந்தும் இந்தச் செய்தியைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்க நான் இன்று சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டேன். சாதாரணமாக, பாலியல் கொடுமைகளைப் பற்றி செய்தித்தாளில் வாசித்தாலே அது அன்று முழுக்க என்னை உறுத்திக்கொண்டே இருக்கும். இன்று என்னை இதற்கு நியமித்ததுமே எனக்குள் ஏனோ பதட்டம். இருந்தும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அயனாவரத்துக்கு விரைந்தேன்.
பொதுவாகவே செய்திச் சேகரிப்பின்பொது யாரிடமும் வாக்குவாதத்தில் இறங்கியதில்லை. சக செய்தியாளர்கள் பலர் வேலைக்கு இடையூறாக இருப்பவர்களிடம் கடிந்துகொண்டதுண்டு. நான் பெரும்பாலும் இச்சண்டைளைத் தவிர்த்தே இருக்கிறேன். ஆனால், இன்று என்னையும் மாற்றிவிட்டனர் அந்த இரட்டை நாக்குடையோர்.
நான் உட்பட, சில செய்தியாளார்கள் அந்த அடுக்கக வளாகத்தின் நுழைவு வாயிலை அடைந்தபோது, அந்த கட்டடக் காட்டுக்குள்ளிருந்து சில பரிணாம வளர்ச்சியடையாத, பார்ப்பதற்கு மனிதர்களைப்போலவே இருந்த சிலர் வெளியே வந்தனர். "அந்த பொண்ணு மெண்டலி இல்லுங்க," என்றபடி ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வெளியே வந்தார். அது உண்மையா பொய்யா என்ற விவாததுக்குள் செல்வதற்கு முன், எனக்கெழுந்த கேள்வி, "மனவளர்ச்சி இல்லனா என்ன? செஞ்சிருக்கிறது பாலியல் பலாத்காரம்," என்றேன்.
நாங்கள் அங்கே எதற்கு கூடியிருக்கிறோம் என்பதைக்கூட தெளிவாக அறிந்துகொள்ளாமல், அவர் எங்களை நோக்கி, "உள்ள எல்லாம் வரக்கூடாது," என்று ஆதிக்கத்தொனியில் கூறினார். முதலில், பாலியல் குற்றம் குறித்த செய்தியைப்பற்றி எழுதும்போது, பாதிக்கப்பட்டவர் தொடர்பாக ஒரு தகவலையும் தரக்கூடாது. அவர் பெயர், பெற்றோர் பெயர், பள்ளி/கல்லூரி பெயர், புகைப்படம் என எதுவும் வெளியிடக்கூடாது. அதிகபட்சம், சம்பவ இடத்தையோ, ஊரையோ மட்டும் குறிப்பிடலாம். இப்படியிருக்கையில், ஒருவேளை அவர்களே எங்களை அனுமதித்திருந்தாலும் நாங்கள் உள்ளே செல்வதால் எங்களுக்கு ஒரு பயனுமில்லை.
நான் அங்கே சென்றது, அந்த அடுக்கக வளாகத்தின் அமைப்பு, அதில் வசிக்கும் பிற மக்களின் கருத்து, அந்த பகுதி மக்களின் எதிர்வினை, என, பலதரப்பட்ட தகவல்களைச் சேமிக்கத்தான். அது தொடர்பாக, அந்த வளாகத்தின் வாயிலுக்கு அருகில் சென்று அங்கிருந்த ஒரு பணியாளர் ஒருவரிடம் பேசியபோதுதான் இவர் வெளியே வந்தார்.
அப்போது, நான் அவரிடம், "நாங்க உள்ள எல்லாம் வரல. இப்போ என்ன நிலவரம்னு கேக்கதான் வந்தோம் என்றேன்."
உடனே அவர், "அதெல்லம் உங்களுக்கு எதுக்கு. இவ்வளோ நாள் இந்தப்பக்கம் வந்ததே இல்ல. இன்னிக்கு ஒரு பிரச்சனைனதும் வந்துட்டீங்களா?" என்றார்.
ஒரு நொடி எனக்கொன்றும் புரியவில்லை.
"அம்மா அது தான் எங்க வேல. நீங்க யாரு இதெல்லம் கேக்குறதுக்கு?" என்றபடி கதவருகே சென்றேன்.
அதற்கு, "நான் அட்வக்கேட். இங்க தான் என் வீடு. இப்படியெல்லாம் வந்து நீங்க தொல்ல பண்ணாக் கூடாது. இது எங்க ப்ரிமைசெஸ்."
எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. "ஏன்மா, 7 மாசமா இங்க தப்பு நடந்திருக்கே அப்போலாம் இது உங்க ப்ரிமைசெஸா தெரியலையா?" என்று அதே கோபத்துடன் கேட்டேன்.
உடனே என்னருகில், கதவுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு பெண், "அதான, 7 மாசமா இருக்குற அயோக்கியனயெல்லாம் உள்ள அனுமதிச்சிட்டு, இப்போ கதவ மூடி என்ன ஆகபோகுது," என்றார்.
அதற்கு அந்த வழக்கறிஞர், "நீங்க உள்ள வந்தா பொண்ணு பேரு, போட்டோலாம் போட்டுருவிங்க. அது போக்சோ ஆக்ட் (POCSO Act) படி விதிமீறல் தெரியுமா?," என்றார்.
உடனே என்னுடன் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணி, "நீங்க சொல்ற போக்சோ சட்டத்த போராடிக்கொண்டு வந்ததே நாங்கதான். எங்ககிட்டலாம் ஒன்னும் சட்டம் பேசிட்டு இருக்காதிங்க," என்று கனத்த குரலில் பதில் கூறினார்.
அப்போதுதான், அவர் அகில இந்திய மாதர் சங்க உறுப்பினர் என்றே நான் உட்பட, அங்கிருந்த பலருக்குத் தெரிந்தது.
எங்களிடம், வாதிடமுடியாது கொஞ்சம் கொஞ்சமாக அந்த வழக்கறிஞர் உள்ளே சென்று வேறு ஒரு ஆணிடம் எங்களைக் கைகாட்டி அனுப்பிவைத்தார். அவர் வேகமாக எங்களை நோக்கி வந்து, "ஏங்க உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதாங்க?," என்றார்.
"என்ன புரியணும்?" என்றேன்.
"இங்க அந்த ஒரு பொண்ணு இல்லாம, இன்னும் நூத்துக்கணக்கான பொண்ணுங்க இருக்காங்க. அவ்வள்ளோபேரு லைப்பும் இருக்குல? உங்க பிளாட்டுக்குள்ள இப்படி வெளியாள விடுவீங்களா?," என கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
அப்போதுதான் அது எனக்கே புரிந்தது. இந்த போக்சோவுக்கெல்லாம் மேலாக ஒரு சட்டம் இருக்கிறதே. அந்தச் சட்டம்தான் அவர்களுக்கு முதல் தலைவலி. தன்னலச்சட்டம். எங்கே, இந்த செய்தி வெளிவந்து, தன் பெண்ணின் பெயர் கெட்டுவிடுமோ என்ற தன்னலம். அது இருப்பது தவறில்லை. ஆனால், அவர் அதன்பின் கூறியவைதான், அந்த தன்னலத்துக்கெல்லாம் உச்சம்.
"நாங்க உள்ள வரதூக்காக கேக்கல. ஒரு ரெண்டு நிமிசம் நீங்க வெளிய வந்து அந்த சம்பவத்தப் பத்தி சொல்லுங்க," என்றதும், அவர் வெளியே வந்தார்.
"அந்த பொண்ணு டிரக் அடிக்ட் சார். போதையிலதான் கூட போயிருப்பா. இவ்வளவு நாள் சொல்லாம மறச்சவதான," என்றார்.
அதற்குமேல் அவரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவர் பெயர் என்னவென்று கேட்டதற்கு, "அதெல்லாம் எதுக்கு. அதான் நீங்க கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டேன்ல," என்றபடி உள்ளே சென்றுவிட்டார், கதவுக்குள் இருந்தவரை ஒரு நாக்கும், வெளிய வந்தவுடன் வேறு நாக்கும் கொண்ட அந்த மாமனிதர்.
குழப்பத்தில், அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலரிடம் சென்று இதைக் கூறியபோது, "அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். அந்த பொண்ணு வீட்டுல தனியா இருக்கும்போது இங்க வேல பாத்துட்டு இருந்தவனுங்க தான் ஒவ்வொருத்தனா போயிருக்கானுங்க. அவனுங்கதான் அந்த பொண்ணுக்கு போத மருந்த குடுத்து மயக்கமாக்கி அடிக்கடி கற்பழிச்சிருக்காங்க. இதெல்லாம் வீடியோ எடுத்து மிரட்டினதுனால அவ வீட்டுல சொல்ல பயந்து ரொம்பநாள் மறச்சிருக்கா. இப்போ அவ அக்கா டெல்லியில இருந்து இங்க வந்தப்போ அவங்ககிட்ட பொறுக்கமுடியாம சொல்லி அழுததுனாலதான் இந்த விசயம் வெளிய வந்துச்சு," என்று அந்த பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலத்தில் கூறியதைச் சுருக்கி விளக்கினார்.
தன்னை இருபதுக்கும் மேற்பட்டோர் ஏழுமாதமாக பாலியல் கொடுமை செய்துவந்துள்ளனர் என்பதை அவள் வெளியே கூற, பல்லாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து அவள் அக்கா வருவதற்காக காத்துக்கொண்டிருந்திருக்கிறாள் என்றால், இங்கே பழி யார்மீது சுமத்தப்பட வேண்டும்?
சென்னை போன்ற நகரமயமாக்கலின் முகடுகளில் இருக்கும் ஊர்களில் இது போன்ற குற்றங்கள் பெருகிக்கொண்டே வரும் ஒரு கால நிலையில் நாமிருக்கிறோம். தன் பெற்றோரிடம் கூட ஒரு பெண் தனக்கு நேரும் வன்முறையை பகிர்வதற்கு அஞ்சும் கால நிலையிது.
அடுக்ககங்கள் உறவு முறைகளை மாற்றியமைத்திருக்கும் இதுபோன்ற பல நிகழ்வுகளை நாம் நாள்தோறும் கடந்துபோகிறோம் என்ற தெளிவாவது நமக்குத் தேவைப்படுகிறது.
இதுபோன்ற அடுக்ககங்களில் பல பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களின் ஓலங்கள், நான்கு சுவற்றுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றன. அந்த வழக்கறிஞராகட்டும், பின் வந்த அந்த ஆணாகட்டும், அவர்கள் எல்லாம், எங்கும் நிரம்பியிருப்பவர்கள்தான். உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே எட்டிப்பார்த்தாலே அவர்கள் நடமாட்டம் உங்கள் கண்களுக்குப் புலப்படும். அவர்கள் அனைவருமே தன் வீட்டின் சுவற்றுக்குள் இதுபோன்ற சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்களே தவிர உங்கள் வீட்டு துன்பத்தில் பங்கெடுக்க முன்வரமாட்டார்.
முன்னூற்றுக்கும் மேல் வீடுகள் ஒட்டி அடுக்கப்பட்ட அந்தக் கட்டடக் காட்டுக்குள் ஒருவரேனும், இந்தப்பெண்ணுக்கு நேர்ந்த வன்முறையை அன்றே அறிந்திருந்தால் இன்று பிடிபட்ட அந்த 24 காட்டுமிராண்டிகளும், என்றோ சிறைபட்டிருப்பார்கள். ஒருவேளை அந்தப் பெண் கதறி இவர்களை அழைத்திருக்கலாம். அவள் வாய்த்திறந்து கதறியபோது, இவர்கள் கதவுகளெல்லாம் முடியிருந்தனவோ என்னவோ? உண்மையில், அந்த நான்கு சுவற்றுக்குள் அவள் அனுபவித்த துயரத்தின்போது இவர்களனைவரும் ஐந்தாவது சுவராகத்தான் இருந்திருக்கின்றனர். அப்படியானால் முதல் குற்றவாளிகள் இந்தச் சுவர்களே.
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூலை 17, 2018.

![]() |
Representational image only |