Monday, 2 July 2018

நா. முத்துக்குமார் ஒரு சொற்சிற்பி!

நா. முத்துச்சரம் - முகவுரை

அது தமிழ்த் திரையிசைக்கு ஒரு இக்கட்டான காலக்கட்டம்.

இளையராஜா ஏ.ஆர். ரகுமான் போன்றவர்களின் மெட்டுக்களில் மட்டும் வசப்பட்டுக்கிடந்த மொழி, பெரும் பாடலாசிரியர்கள் முதல் தமிழறியா புதுப் பாடலாசிரியர்கள் வரை அனைவரின் இச்சையினால் வணிகத்துக்கு வளைந்து கொடுக்கத்துவங்கிய காலக்கட்டம்.

கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் துவங்கி டி ராஜேந்தர் வரை பலரால் கட்டிக்காக்கப்பட்ட மொழிநடை திரையிசையின் அலறல்களுக்கும் கூச்சல்களுக்கும் இடையே சிறைப்பட்டு சிக்கித்தவித்த காலக்கட்டம்.

அறிவுமதி, பழனிபாரதியைப் போன்ற சில எஞ்சியிருந்த தமிழ்ப் பாவலர்கள் பல இன்னல்களுக்கிடையே ஊசலாடிக்கொண்டிருந்த மொழியின் உயிரை, தம் எழுதுகோல் முனையினால் இழுத்துப்பிடித்து, உயிர்ப்பித்துக்கொண்டிருந்த காலக்கட்டம்.

சிதைந்துகொண்டிருந்த மொழியைக் காக்க யாரேனும் வருவார்களா என்று திரையிசையில் இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருந்த பலர் புலம்பித்தீர்த்த காலக்கட்டம்.

அப்போது கேட்டது அப்பாடல். காதல் தோல்வியால் தான் ஆடு தாடி வளர்க்கிறதா என்ற கேள்வி முதல் கை வீசாமல் நடக்கும் காற்றுவரை உவமைகளையும் உவமேயங்களையும் மட்டுமே அடுக்கி இயற்றப்பட்ட பாடல். முத்து முத்தா என்று துவங்கும் நூற்றாண்டுப் பாவலன் நா முத்துக்குமார் எழுதிய பாடல்.


கடந்த நூற்றாண்டின் விளிம்பில் திரையிசைக்கு அறிமுகமாகி அடுத்த நூற்றாண்டின் பெரும் பகுதியை தன் வசப்படுத்தப்போகிறோம் என்பதைக் கூட முத்துக்குமார் அறியாதபோதுதான் 'வீரநடை' படத்தின் அப்பாடல் வெளியானது.

தொடர்ச்சியாக சில படங்களில் தன் பிள்ளைத்தமிழைத் தவழவிட்ட முத்துக்குமார், அக்குழந்தையை வஞ்சியாக வடித்த பாடல் தான் ஜூலி கணபதி படத்தின் 'எனக்குப் பிடித்த பாடல்'. அன்றுதொட்டு தமிழ்த் திரையில் வெளிவந்த, தான் மறைந்த பிறகும் வெளிவந்து கொண்டிருந்த, வெளிவராமல் தவித்துக்கொண்டிருந்த அனேகப் பாடல்களைப் பலராலும் எனக்குப் பிடித்தப் பாடல் எனக் கூற வைத்தார் முத்துக்குமார்.

வானொலி ஓசைகள் பொதுநலத்தோடு காற்றில் சுற்றித்திரிந்த காலத்தில் அறிமுகமாகி, கைபேசியின் ஓசைகளைச் சுயநலமாய் காதோடு ஒத்திவைத்துக் கேட்கும் காலம் வரை தன் மொழியால் தடம் பதித்த நா. முத்துக்குமாரை நீண்டகாலம் அதைத் தொடரவிடாமல் இயற்கைச் செய்தது பேரிழப்பென்று நான் சொல்லி யாரும் அறியவேண்டியதில்லை.

ஆனால், ஒரு ஆண்டுக்கு குறைந்ததது 100 படங்களிலாவது தன் மொழியைப் படரவிட முத்துக்குமாரால் மட்டும் எப்படி முடிந்தது என்ற கேள்விதான் இன்று எனக்குள் உதித்தது. அதுவும் அவர் அறிமுகமாவதற்கு முன்பு இத்துறையில் கொடி கட்டிப் பறந்த பேரரசர்கள் முதல் தன் இறுதிக்காலக்கட்டத்தில் இருந்த சமகால சிற்றரசர்கள் வரை பலரால் இயலாதது.

காரணம், முத்துக்குமார் ஒரு சொற்சிற்பி. பிற பாடலாசிரியர்களைப் போல அவர் எழுதுகோலும் வணிகத்துக்காக வளைந்தது தான். ஆனால், இறுதிவரை அவர் மொழி வளையவில்லை, அவர் வளைக்கவும் விரும்பவில்லை.

வாங்கிய பணத்துக்காக பெண்களை கொச்சைப் பொருளாக்கிப் பாடிய பாவலர்களுக்கு இடையில், மெல்லினம் மார்பில் கண்டேன், வல்லினம் விழியில் கண்டேன் என்று காதலியை மொழிக்கு நிகராக்கியவர் நா முத்துக்குமார். ஏனென்றால் அவர் சொற்சிற்பி.

'நா. முத்துக்குமாரின் பாடல்களைக் கேட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் தாலாட்டு தாய்மையில் சேராததென்று'  என ஒப்புகொள்ளச்செய்தவர் அவர். அதனால் தான் அவர் சொற்சிற்பி.

ஆங்கிலக் கலப்பு, பிறமொழிக் கலப்பினால் கல்லாக இருக்கும் மொழியை அடுக்கி அடுக்கி பிற பாடலாசிரியர்கள் சொற்பொறியாளர்களாக இருந்த, இருக்கும் நிலையிலும், அக்கல்லில் சிலைவடித்த நா. முத்துக்குமார் ஒரு சொற்சிற்பி!

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூலை 2, 2018.

அச்சிற்பி வடித்த சில சிற்பங்களின் நயங்களை அடுத்த சில நாட்களுக்கு, நா. முத்துச்சரம் என்ற தலைப்பில் தொடராக எழுதவிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அதைப்படித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.