Monday, 23 July 2018

நா. முத்துச்சரம் #2: அன்பால் படிகளைக் கட்டுவோம்

எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம்தான் மனிதனின் ஆற்றல்கலனாக இருக்கிறது. தன்னை எத்தனைப் பெருந்துன்பம் சூழ்ந்திருந்தாலும் அதிலிருக்கும் நன்மையைக் கண்டறிவது மனிதனுக்கு இயற்கையிலேயே இருக்குமொரு இயல்பு. துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க வேண்டும் என்பதை, 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று வள்ளுவர் வழியில் பல பாடலாசிரியர்கள் பதிவுசெய்துவிட்டனர்.

ஆனால், இன்று நம் உறவு, சமூகச் சிக்கல்களுக்குள்ளும், முதாலிளித்துவதை ஒத்த வாழ்வியலுக்குள்ளும் நேரும் ஒரு சிறு இடையூறுகூட நமக்கு பெருந்துன்பமாகத் தெரிகிறது. காலையில் பணி அவசரத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பல வண்டிகளுக்கிடையே சாலையைக் கடக்கும் எளிய மனிதர்கள் முதல், மாத இறுதியில் அதே சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு தன்னைக் கடந்து செல்லும் அதே வண்டிகளை நிறுத்தி ஆவணங்கள் சரி பார்த்து, அபராதம் விதித்து, மாதத்துக்கான வழக்கு இலக்கை அடைய முற்படும் வலியவர்களான காவல்துறை அதிகாரிகள் வரை, அனைவருமே அதில் அடக்கம்.

நாம் நெருங்கக் கூட இயலாத யாரோ ஒருவருக்காகவோ, அல்லது அவர் வடிவமைத்த ஒரு முறைக்குள்ளோ சிறைப்பட்டுத்தான் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களுடைய கவலைகளையும் சேர்த்து நாம் சுமந்துகொண்டிருக்கிறோம். நமக்கு வரும் துன்பங்களில் பல, அவர்களுக்காக நாம் நம்மையும் அறியாமல் ஏற்றுக்கொள்வது. அதனால், துன்பங்களின் எண்ணிக்கை நமக்கு அதிகரித்து அதற்குப் பழகி நாம் சிரிக்கவும் மறந்துவிட்டோம்.

அப்படி இடுக்கண் வருங்கால் நகைக்க மறந்த இந்தச் சமூகத்திடம்தான், "இரவைப் பார்த்து மிரளாதே, இதயம் வேர்த்து துவளாதே, இரவுகள் மட்டும் இல்லையென்றால் நிலவின் அழகு தெரியாதே" என்ற கருத்தை இந்தப்பாடலின் மூலம் கொண்டு சேர்க்கிறார் நா முத்துக்குமார்.

ஒரு மனிதனுக்கு துன்பம் எப்படிவேண்டுமானாலும் நேரலாம். ஆனால், இவ்வரிகளை யாரும் எளிதில் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதாலோ என்னவோ, முத்துக்குமார் இப்படிப்பட்ட ஓரு கதைக்களத்துகாக காத்துக்கொண்டிருந்திருப்பார் போலும். வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கலையும் எளிமையாகக் கையாளும் ஒரு கதாநாயனுக்காகவே வடிமைக்கப்பட்ட பாடல் தான் "வா வா நிலவ பிடிச்சுத் தரவா".


தன் தோழியின் திருமணம் முடியவிருக்கும் சூழலில், புதிய வீட்டு உறவுகளால் அவள் எதிர்கொள்ளும் முதல் துயரம் அவளுக்குத் தரும் மன உளைச்சலைப் போக்கவே எல்லாம் நன்மைக்கே என்றுணர்த்தும் இப்பாடலை நாயகன் பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும். துன்பத்தை எதிர்கொள்ள ஒரே வழி அன்பு என்பதையும், அன்பினால் எதையும் எளிதில் நிகழ்த்திவிட முடியும் என்பதையும் மீண்டும் மீண்டும் உணர்த்தவே "வா வா கட்டலாம் அன்பால் படிகட்டு" என்ற வரி பாடல் முழுவதும் பல முறை இடம்பெறுகிறது.

இந்தப் பாடலின் வரிகளுடைய சிறப்பே அதன் எளிமைதான். பொதுவாகவே முத்துக்குமார், எளிய மக்களின் பாடலாசிரியராகத்தான் இருந்திருக்கிறார். அதிலும், இதுபோன்ற ஆழமான உளவியல் சார்ந்த கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டிய பாடல்கள் அனைத்திலும் அவர் கூறும் அறிவுரைகள் முதிர்ச்சியை வெளிக்காட்டியிருந்தாலும், சொல்லாடல்களில் எளிய மொழியையே கையாண்டுள்ளார்.

வாழ்க்கைக்கு விளக்கமாக இரு வரிகள் இப்பாடலில் இடம்பெறும். எனக்கு தனிப்பட்டமுறையில் இந்தப்பாடலில் மிகவும் பிடித்த வரிகளும் அவைதான். "ஒரு வட்டம் போலே வாழ்வாகும்... வாசல்களில்லா கனவாகும்... அதில் முதலுமில்லை முடிவுமில்லை புரிந்தால் துயரமில்லை". இன்ப துன்பங்கள் மாறி மாறி வருவது  வாழ்வின் அடிப்படை இயங்கியல். அதனால் தான் அதை ஒரு வட்டத்துடன் பல வேளைகளில் நாம் ஒப்பிடுகிறோம். "வாழ்க்கை ஒரு வட்டம்" என்ற சொல்லாடல் நமக்கு புதிதுமல்ல. ஆனால், அதைத் தொடர்ந்து வரும் வரிகள் தான் அந்த இயங்கியலின் உண்மையான ஆழத்தையும் விவரிக்கிறது. வாழ்க்கை என்பது வாசல்களில்லாத ஒரு கனவு என்கிறார். முதலில் 'கனவுக்கெதற்கு வாசல்?' என்பதே கேள்வியாகிறது.

அதற்கு கனவின் இயல்பையும் அறிய வேண்டியிருக்கிறது. எத்தனைப் பெரும் இன்பமோ அல்லது எவ்வளவு வலி தரும் துன்பமோ, அதை நாம் கனவில் காண்கிறோம் என்றால், அது ஒரு புள்ளியில் கலைந்துவிடும். அது தான் கனவின் இயங்கியல். இதையும் இதற்கு அடுத்த சரணத்தில், "கனவில் நீயும் வாழாதே... கலையும்போது வருந்தாதே... கனவினில் பூக்கும் பூக்களையெல்லாம் கைகளில் பறித்திட முடியாதே" என்ற வரிகளில் சொல்வதற்கு முன்பே வாழ்க்கையின் விளக்கத்தை முன்வைக்கிறார் முத்துக்குமார்.

வாழ்க்கையானது, வாசல்களில்லா ஒரு கனவு என்பது பாடல் கூறும் கருத்து. நாம் உறக்கத்திலோ, வகுப்பறையிலோ, அலுவலக நாற்காலியிலோ காணும் அத்தனைக் கனவுகளுக்கும் ஒரு துவக்கப்புள்ளியும் முடிவும் கண்டிப்பாக இருக்கும். ஆனால், ஒரு துன்பம் நேர்ந்து, அது கலைந்து, அதன் பின் ஒரு இன்பம் நேர்ந்து, அது கலைந்து, மீண்டும் ஒரு இன்பமோ துன்பமோ என மாறி மாறி விளைகிற வாழ்க்கையெனும் கனவுக்கு துவக்கமும் இல்லை, அத்தமும் இல்லை. அதனால் அதற்கு வாசலில்லை என்பது  இங்கே உவமையாகிறது. இதைப் புரிந்துகொண்டால் துயரமில்லை என்ற கருத்துடன் இச்சரணம் முடிவுபெறுகிறது.

ஒருவகையில் இவையனைத்தும், துன்பம் வந்து பின் மறைந்துவிடும், பிறகு இன்பம் வரும், என்ற எதிர்காலத்துக்கான கருத்துதான். ஆனால், துன்பம் வரும் அந்த நிகழ்காலச் சூழலில் நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையும் நமக்குத் தேவைப்படுகிறதல்லவா?

அதில் தான் மனித இயல்பான 'எல்லாம் நன்மைக்கே' என்ற எண்ணம் நமக்கு தன்னம்பிக்கைக் கொடுக்கும் என்கிறார் முத்துக்குமார். "கவலை நம்மை சில நேரம் கூறுபோட்டுத் துண்டாக்கும்" என்று துன்பத்தின் ஒரு சாரத்தைக் கூறிவிட்டு, "தீயினைத் தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்" என்ற உவமையையும் தொடர்ச்சியாக சொல்கிறார். விளக்கில் இருக்கும் தீயைத்தான் நாம் வெளிச்சம் என பொதுமையில் நம்புகிறோம். ஆனால், தீ இந்த இடத்தில் வெளிச்சத்துக்கான மூலம் மட்டுந்தான். தீயே இல்லாமல் மின் விளக்குகள் வெளிச்சத்தைப் பரப்பும் திறன் கொண்டுள்ளதே அதற்கு நம் கண் முன் இருக்கும் சான்று. அப்படியானால், அந்தத்தீயின் வெப்பமான துன்பத்தைத் தாங்கிக் கொண்டுதான் விளக்கு வெளிச்சமெனும் இன்பத்தைக் கொடுக்கிறது. இதற்கு ஒத்த வரிகள்தான் முதலில் கூறிய "இரவைப் பார்த்து மிரளாதே, இதயம் வேர்த்து துவளாதே, இரவுகள் மட்டும் இல்லையென்றால் நிலவின் அழகு தெரியாதே." இரவானது இருள் என்ற துன்பத்தை அளிக்கும் அதே வேளையில்தான் நிலா என்ற அழகான இன்பத்தையும் தருகிறது.

இதனினும் சிறந்த ஒரு உவமையைக் கூறி தன் எழுத்தைத் தானே விஞ்சுகிறார் முத்துக்குமார். "கடலைச் சேரும் நதியாவும் தன்னைத் தொலைத்து உப்பாகும். ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்," என்ற வரிகளில் அறிவியலைச் சற்று எளிமையாக சீண்டுகிறார். ஆற்றுத் நீர் கடலில் சேரும்போது தன் இனிமையை இழந்துவிடுவது இயற்கை. நம் பள்ளிக்கூட நீர்ச்சுழற்சிப் பாடத்தின் படி இக்கடல் நீர் ஆவியாக பறந்து, காற்று மண்டலத்தில் கலந்து, மேகமாக மாறி மீண்டும் ஆற்றுக்கே வந்து இழந்த இனிமையை மீட்டெடுக்கிறது.

ஒருவேளை இதையே உவமைத் தொடராக எழுதியிருந்தாலும் இப்பாடலின் கருத்து கண்டிப்பாக் சிதைந்திருக்காது. ஆனால், மேகத்திலிருந்து பொழியும் மழைத்துளி மீண்டும் கடற்பரப்பையே அடைந்து சிப்பிக்குள் அகப்பட்டு நீர் என்ற நிலையைத்தாண்டி முத்தாக மாறுகிறது என்ற அறிவியலின் மற்றுமொரு வியப்பை உவமையாக்கியிருப்பது, இக்கருத்தை மேலும் உயர்த்திப்பிடிக்கிறது. உன் துன்பம் இப்போது இருக்கும் நிலையைவிட பின் வரப்போகும் இன்பம் மேலும் அழகாக இருக்கப்போகிறது என்பதே இதன் உட்பொருள். அதனால் துன்பத்தைக்கண்டு துவண்டுவிடாதே என்று துன்பத்துகான நிகழ்கால எதிர்வினையையும் இங்கே விளக்குகிறார்.


இறுதியாக, இந்த இன்ப துன்பங்களுக்கிடையில் நம்மைக் கடந்து செல்லும், அல்லது நம்மோடு சேர்ந்து பயணிக்கும் உறவுகளைப் பற்றி "அந்த வானம் போலே உறவாகும்... மேகங்கள் தினமும் வரும் போகும்... அட வந்ததுபோனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்" என்ற வரிகளுடன் பாடலுக்கு முற்று வைக்கிறார். நமக்கு நேரும் இன்பங்கள் துன்பங்கள் பலவற்றுக்கு நம் உறவுகளே காரணமாக இருக்கிறார்கள். அதனால், அந்த இன்ப துன்பதுக்கு என்ன இயல்பும் அறிவியலும் இருந்ததோ அதே தான் அதைத் தரும் உறவுகளுக்கும் பொருந்துகிறது என்பது முத்துக்குமாரின் கருத்து. வானத்துள் இருக்கும் மேகம்போல உறவுகளும் வந்த வண்ணமும் போன வண்ணமுமாகத்தான் இருப்பர்கள் என்கிறார்.

எனக்கு இதில் வேறொரு பொருளும் புரிகிறது. சில உறவுகள் வானம் போன்று இருக்கிறார்கள். பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், காதலி, மனைவி என்று அடுக்கிக் கொண்டேபோகலாம். இவர்கள் நமக்கு என்றும் தீங்கு விளைவிக்கப்போவதில்லை. அதனால், இந்த வானம் போன்ற உறவுகளெல்லாம் நிரந்தரமானவர்கள். ஆனால், சில உறவுகள் நமக்குத் துன்பம் தருவதற்காகவே பழகுபவர்கள். அவர்களெல்லாம் மேகம் போன்றவர்கள். அவர்களும் சரி, அவர்களால் நேரும் துயரமும் சரி, நீண்டகாலம் நம்முடன் இருக்கப்போவதில்லை. அதனால், அம்மேகங்களைப் பற்றி கவலைக்கொள்ளாதீர்கள், என்பதும் கூட இவ்வரிகள் கூறவரும் கருத்தாக இருக்கலாம்.

நம் வாழ்க்கைச் சூழலானது, இன்று பிறரைச் சார்ந்ததாகிவிட்டது. இச்சர்ப்பு வாழ்க்கையில் இப்பாடலின்  கருத்தை  இன்றைய சிக்கல்களுக்கு ஏற்றார்போல் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது. உறவுகளாக இருக்கட்டும், அல்லது யாராகவும் இருக்கட்டும் நமக்கு அவர்கள் அளிக்கும் எந்த துயரத்துக்கும் ஒரு நிரந்தர நிலை இருக்கப்போவதில்லை. அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பொருந்தும் கருத்தை இப்பாடலில் முத்துக்குமார் மிகச் சாதாரணமாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். வெளியாதிக்கம் தரும் வலிகளனைத்துக்கும் உள்ளிருந்து நாம் அன்பால் படிகளைக்கட்டிகொண்டே இருப்போம். அன்பு என்றேனும் நிச்சயம் வெல்லும்.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூலை 23, 2018.

படம்: நான் மகான் அல்ல
இயக்கம்: சுசீந்திரன்
இசை: யுவன் சங்கர் ராஜா