"யாரு உனக்கு இத சொல்லிக்குடுத்தது?" என்று ஆசிரியை கேட்டபோது "என் அப்பா மிஸ்" என்று குழந்தைப் பருவத்தில் பெருமிதத்தோடும் திமிரோடும் பள்ளியில் பல கேள்விகளுக்கு பதில் கூறியிருப்போம். அப்பாக்கள் கற்பித்த கருத்துக்களுடன் அப்படிப்பட்ட பெருமிதம் பெரும்பாலும் இலவச இணைப்பாகவே வந்துவிடும்.
அப்பாவிடம் பெற்ற அறிவு சில முறை அறிவியல் கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டனவாகக் கூட இருந்திருக்கலாம். ஆனாலும் ஆசிரியர் கற்பிக்கும் கருத்து அப்பா கற்பித்த கருத்துடன் முரண்பட்டபோதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ள நாம் முயற்சிகள்கூட செய்திருக்கமாட்டோம். அதனால்தான் 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற, நாம் பல நூற்றாண்டுகளுக்கும் மேல் கேட்டுப் பழகிய, பழமொழியை முத்துக்குமார் இந்தப்பாடலில் சரியான இடத்தில் இடம்பெறச் செய்தார்.
அப்படிப்பட்ட அப்பா, திடீரென நமக்குத் தொலைவாகவும் தொல்லையாகவும் மாறிவிடும் நிலை வருகிறது. இந்நிலைக்கு இளமைப்பருவம் என்று வேறுபெயரும் உள்ளது. தன்னுடைய இளமைப்பருவம் முழுதும் அப்பாவிடமிருந்து தள்ளியிருந்த பலரை நான் கடந்து வந்திருக்கிறேன். குழந்தையாக இருந்தபோது பார்த்து வியந்த அதே அப்பாவை, நம் வளரிளம் பருவத்தில் வெறுத்திருக்கிறோம். ஆனால், அது தற்காலிக வெறுப்பாகவே இருக்கும். ஏனென்றால் மீண்டும் ஒரு புள்ளியில் அவருடைய முகாமைத்துவத்தை உணர்வோம். அதன்பின் அப்பாவை நம் வாழ்நாளில் ஒருமுறை கூட மீண்டும் ஒதுக்கமாட்டோம். அந்த உணர்தலுக்கு அத்தனை வலிமை உள்ளது.
அப்படியொரு உணர்தல் கதாநாயகர்களுக்குள் நேரும்போதுதான் "தெய்வங்களெல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே," என்ற இப்பாடலின் முதல் வரி திரையில் ஒலிக்கும்.
ஆம், தந்தையின் அன்புக்கு முன் தெய்வங்கள் கூட தோற்றுவிடும் என்று வலுவாக எடுத்துரைக்கிறார் முத்துக்குமார். இதனினும் ஒரு வரிகொண்டு தந்தை அன்பின் உச்சத்தை உணர்த்தமுடியாது என்று நாம் எண்ணி முடிப்பதற்குள் "தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே" என்ற சொற்கள் தொடர்ந்து வரும்.
காலங்காலமாக தாய்க்குப்பின்தான் தந்தை எனவும், இவர்கள் இருவருக்கும் பின்தான் ஆசிரியரும் தெய்வமும் எனவும் நம்மிடையே வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இப்பாடலில் அவ்வரிசையை திருத்தி எழுதிவிட்டார் முத்துக்குமார்.
ஏனென்றால், தாயின் அன்பானது கண்ணால் காணக்கிடைப்பது, நாம் தொலைதூரப் பயணம், தொழில்நிமித்த ஊர் மாற்றம், போன்ற சூழ்நிலைகளில் கண்ணீரைச் சிந்தி நம் கண்முன் அன்பைப்பொழிவது அது. "சாப்பிடதான் இல்ல. இந்த பாலையாவது குடிச்சுட்டு தூங்கு," என்று செவிகளில் கேட்டுப்பழகியது தாயன்பு. ஊரிலிருந்து வீடு திரும்பியபின் நம்மை ஆரத்தழுவி அணைப்பதன்கண், நம்மால் தொட்டு உணரமுடிவது அம்மாவின் அன்பு.
ஆனால் தந்தை காட்டும் அன்பை நாம் பார்க்கவோ, கேட்கவோ, தொடவோ இயலாது. அதனால் தான் முத்துக்குமாரும் "தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை" என்று இங்கே கூறுகிறார். என்றாவது நாம் கேட்ட ஒன்றை நமக்கு வாங்கித்தர இயலவில்லை என்று நம் தந்தை நம்மிடம் வருந்திக்கூறியிருப்பார். நாம்கூட அதற்கு அவரிடம் கடிந்து கொண்டிருந்திருப்போமே, நினைவிருக்கிறதா? அந்த இரவு அவர் தலையணையை நாம் தொட்டுப் பார்த்திருந்தால், முத்துக்குமாரின் கூற்று பொய்யாகியிருக்கும். அன்று கண்டிப்பாக நாம் கோபித்துக்கொண்டதால் அவர் அழுத்திருக்கமாட்டார். நாம் விரும்பியதை நம்மிடம் சேர்க்க முடியவில்லை என்பதே அவர் கண்ணீர்த்துளிகளில் படிந்திருத்த காரணமாக இருந்திருக்கும். அதுதான் தந்தையன்பு. அதை உணரமட்டுமே முடியும்.
இவ்வாறு, தாய், ஆசிரியர், தெய்வம் என அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு பாடலின் பல்லவியிலேயே முதன்மைபெறுகிறார் தந்தை.

இதே பாடலின் பிற்பகுதியில், தந்தைக்கும் நமக்கும் கருத்து முரண் ஏற்படும் இளமைப் பருவத்தை "வளர்ந்ததுமே யாவரும் தீவாய்ப் போகிறோம்" என்ற ஒரு உவமைக்கொண்டு விவரித்துவிட்டு அதில், "தந்தையவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்?" என்ற கேள்வியையும் நம்மிடையே எழுப்புகிறார்.
நாமும் தந்தையின் பாசத்தை ஏதோ ஒரு நொடியில் உணர்ந்திருப்போம். காரணம், எப்படியிருந்தாலும், இறுதியில் அவர் நம் தந்தை. இந்த வரிகளுக்கான விளக்கத்தைதான் அவர் பாடலின் துவக்கத்திலேயே, "என் உயிரணுவில் வரம் உன்னுயிர் அல்லவா... மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா..." என்ற வரிகளில் குறியீடாக்கியிருக்கிறார்.
நம் தந்தை நம்முள்தான் இருக்கிறார். என்றோ ஒருநாள் நம்மை அவர் வசைபாடியிருந்திருப்பார். அந்த நொடியில் நாம் அதை உள்வாங்காமல் போயிருப்போம். பின் என்றோ ஒருநாள் அச்சொற்களின் நோக்கமும் ஆழமும் விளங்கும்.
அதை நாம் விளங்கும் சூழலில் வாழ்க்கை நமக்கு அதுவரை தராத ஒரு வலியைத் தந்திருக்கும். அத்தருணத்தில் அன்று நாம் சரியாக உள்வாங்காத தந்தையின் சொற்கள் நம்முள்ளிருந்து வெளியேவந்து நம் காதுகளுக்கு மட்டும் ஒலிக்கத்துவங்கும். ஏனென்றால், நம் தந்தை நம்முள் இருக்கிறார்.
நாம் தான் நம் தந்தையின் நகல். நாம் அவருடைய நகலாக இருப்பதால் தான், நாம் வளர்ந்து தீவாய்ப்போன பின்பும், நம் வலியிலிருந்து அவர் மீண்டும் வெளிப்படுகிறார். அதைத்தான், தொடர்ந்து வரும் வரியில் "காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்," என்கிறார் முத்துக்குமார்.
மாற்றம் என்பது மனிதனின் இயல்பு. எப்படி நம் வளர்ச்சிச் சுழற்சியில் தந்தையைக் விரும்பி, வெறுத்து, மீண்டும் விரும்புகிறோமோ, அதே தான் அவருக்கும் பொருந்தும். ஆனால் தந்தை நம்மை வெறுப்பதில்லை, மாறாக விருப்பத்தை மறைக்கிறார்.
ஆனால் ஒளிந்திருக்கும் இந்த அன்புகூட வெளிப்படும் சிறுபொழுதுகளும் உண்டு. நம்மிடம் கண்டிப்புடன் நடந்துகொண்ட அப்பாவை, நமக்கு உடல்நிலை சரியில்லாதபோது கண்டிருப்போம், துடித்துவிடுவார். கண்டிப்பில் கூட அந்த உச்சத்தை தொட்டிராதவர் அவர். அதுதான் அப்பா. "கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்... காய்ச்சல் வந்து படுக்கயில் துடிப்பதும் உன் முகம்," என்ற வரிகள்தான், நாம் பார்த்திராத அப்பாவின் பாசத்தைக்கூட நாம் கண்ட நொடிகளைப் பற்றி பதிவு செய்கின்றன. ஏனென்றால், மாற்றம் மனிதயியல்பு. அப்பாவுக்கும் தான்.
"அம்பாரியாய் ஏற்றிக்கொண்டு அன்றுசென்ற ஊர்வலம்... தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்" என்ற வரிகள்தான் கடைசியாக நம் தந்தை நம்மிடம் கண்டு, கேட்டு, தொட்டு உணர்ந்த அன்பைப் பொழிந்த நாட்களை நினைவுபடுத்துகின்றன. தோளில் ஏற்றி கோவிலில் சாமியைக் காட்டியது முதல், காய்ச்சல் வந்து நாம் உறங்கியபோது மணிக்கொருமுறை எழுந்து உடல் வெப்பத்தை அளவிட்ட இரவுகள் வரை அனைத்துமே நாம் நம் தந்தையின் அணைப்பில் கண்ட சுகங்கள் தான்.
அவர்தான் இன்று காலை நாம் காலம் கடந்து உறங்கியதற்காக கடிந்து கொண்டார். நேற்று இருசக்கர வாகனத்தை வேகமாக செலுத்தியதற்காக அடித்தார். இவையெல்லாம் இன்று அவர் நம்மிடம் வெறுப்பைக் காட்டுகிறார் என்று பொருளுணர்த்தக் கூடியவையல்ல. மாறாக நம் மீது அன்பு வைத்திருக்கிறார் என்று கூற வருபவை. அது நாம் பார்க்கக்கூடியதல்ல, உணரக்கூடியது. ஊருக்கு வழியனுப்பும் தாய்க்கு மட்டும் கண்ணீர் வருவதில்லை. தந்தைக்கும் கண்ணில் நீர் சுரக்கும். ஆனால், நா. முத்துக்குமார் கூறுவது என்னவென்றால், அது நாம் யாரும் கண்டிராத கண்ணீர்!
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூலை 12, 2018.
படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா
இயக்கம்: பாண்டிராஜ்
இசை: யுவன் சங்கர் ராஜா