Tuesday, 12 June 2018

பாதுகாக்கப்படவேண்டிய பட்டாம்பூச்சி

கியாஸ் கோட்பாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். தெரியாதவர்களுக்கு - 'உலகின் ஒரு முனையிலிருக்கும்  ஒரு பட்டாம்பூச்சியின் சிறகுவிரிப்புக்கும் மறுமுனையில் நிகழும் ஒரு நிலநடுக்கத்துக்கும் தொடர்புள்ளது' என்பதை விளக்கும் அறிவியல் கோட்பாடு அது. இதனாலேயே இந்தக் கோட்பாட்டுக்கு பட்டாம்பூச்சிக் கோட்பாடு என்றும் பெயருள்ளது.

ஒருவேளை இந்த பட்டாம்பூச்சிக் கோட்பாட்டின் ஒருமுனையில் நீங்கள் நிலநடுக்கத்துக்குப்  பதிலாக, நம் நாட்டில் போராட்டத்துக்குப் பெயர்போன 'தமிழன்டா' என்ற முழக்கத்தைப் பொருத்தினால், மறுமுனையில் இருக்கும் பட்டாம்பூச்சி என்னவாக இருக்கும் என்று அறிவீர்களா?

வேடிக்கையான கேள்வியாகத் தெரிகிறதா? ஒரு சிறு விரிவுரை தருகிறேன்.

நான் உங்களிடம் சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி, உதயகுமார் போன்றவர்களின் பெயர்களைக் கூறினால், உங்களில் பலர் முகம்சுளிப்பீர்கள், கோபம் கொள்வீர்கள். சிலருக்கு இந்தப் பெயர்கள் எல்லாம் புரட்சியை நினைவுக்கு கொண்டுவரலாம். சிலருக்கு இவர்களில் யாரேனும் ஒருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் பார்வையையும், போராட்ட எண்ணங்களையும் புகட்டி இருக்கலாம்.

முகம்சுளிப்பவர்களுக்கும் கோபம்கொள்பவர்களுக்கும் பல காரணங்கள் இருக்கலாம். நான் கூறியவர்களின் அரசியல் நிலைப்பாடு அதில் சிலருக்குப் புரியாமலிருப்பதால் முகம் சுளிக்கலாம். அல்லது அவர்கள் செய்யும் அரசியலே அவர்களுக்கு எதிரானதாக இருப்பதால் கோபம்கொள்ளலாம்.

அவர்கள் அனைவரும் தமிழ்த்தேசிய வழியில் வெவ்வேறு நிலையில் நின்று போராடுகிறவர்கள் - சில முரண்பாடுகளுடன். அவர்கள் இயங்கும் களம் பலதரப்பட்டனவாக இருந்தாலும், அந்த அனைத்து இயக்கங்களுக்கும் நடுவில் இழையோடுவது தமிழ்த்தேசியம்தான் என்பதில் எனக்கு ஐயமில்லை.

காரணம், தமிழ்த்தேசியம் என்பது, பிற அரசியல் சார்ப்புகளைப்போல ஒரு நிலைப்பாடல்ல. கருத்தியலும் அல்ல. அது கோட்பாடு. அதையும் தாண்டி அது ஓர் பேருணர்வு! அதனால் தான் அதற்கு இத்தனை வடிவங்கள். நான்கூறிய தலைவர்கள் அனைவருக்கும் இலக்கு வெவ்வேறாக இருந்தாலும், இப்பேருணர்வு ஒன்றாகத்தான் இருக்கிறது. அதுதான், அவர்களுக்குள் பல முரண்கள் இருப்பினும் பல தளங்களில் இணைந்து செயல்படவைக்கிறது.

ஒரு கருத்தியலானது உருவாக்கப்படுவது. அதனாலேயே ஒரு கருத்தியலால் ஒரே வடிவத்தில் பலகாலம் நிலைத்து நிற்கமுடியாது. காலம் மட்டுமின்றி, அது நிலம், இனம் என வெவ்வேறு காரணிகளால் பல பரிமாணங்களில் உருவெடுக்கிறது. அதுதான் பொதுவுடமைக் கட்சி ஆட்சி செய்யும் கேரளவைக்கூட இன்னும் கடவுளின் சொந்த நாடு என்று கூறவைக்கிறது. பகுத்தறிவு புகட்டிய கட்சியின் தொண்டர்களையும் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யுமுன் அர்ச்சனை செய்யவைக்கிறது.

ஆனால் உணர்வென்பது தானாக உருவாவது. சில நேரங்களில் அது கருத்தியலாக வெளிக்காட்டிக்கொள்ளும் அளவுக்கு திறன்வாய்ந்தது. ஆனால் இறுதியில் அது உணர்வாகவேதான் நிலைத்து நிற்கும். அதிலும் தேசிய உணர்வானது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. 

ஒரு புலிக்கூட்டத்தின் எல்லைக்குள் வேறொரு புலிக்கூட்டம் ஊடுருவுவதை அந்த நிலத்துக்குச் சொந்தக்கார புலிகள் விரும்புவதில்லை. அதுதான் அனைத்து உயிரிடமும் உள்ள இயல்பு. மனிதனிடம் பகுத்தறிவு சற்று அதிகமாக இருக்கிறது என்று அறிவியல் நம்புவதால், அந்த தேசிய உணர்வில் சமூக நீதியும் இணைந்துகொள்கிறது. நிலத்துக்கு நான் சொந்தக்காரனாக இருந்தாலும், இங்கே அனைவருக்கும் புழங்க அனுமதி உண்டு என்ற நீதி.

அப்படி நீதி வாய்ந்ததுதான் தமிழ்த்தேசியமும் கூட. அதனால்தான் சீமானும் வேல்முருகனும் ஒரே உணர்வில் நின்றுகொண்டு, வெவ்வேறு சொற்களில் அதை உணர்த்துகிறார்கள். ஆனால், இப்படி பல சார்புக் கருத்தியல்களுக்கு வழிவகை செய்த தமிழ்த்தேசியத்தை யார்தான் முதலில் உணர்ந்தது?

அது நீண்ட நெடும் வரலாறு. ஒரு கம்பளிப்புழுவாக தோன்றி வளர்ந்து, கூட்டுக்குள் அடைபட்டு வலுப்பெற்று, பட்டாம்பூச்சியாய் சிறகுமுளைத்து கூட்டை உடைத்து வெளியே வந்தது.

இந்த வரலாற்றில் பலருக்கு பங்கிருக்கிறது. பாவாணர், பெருஞ்சித்திரனார், வஉசி, மபொசி, கிஆபெ, ஆதித்தனார் துவங்கி பலரிடம் கம்பளிப்புழுவாக பிறந்து ஊர்ந்து பல  ஈகிகளால், உயிர் நீத்து காக்கப்பட்டு இறுதியில் உருபெற்றது. அந்த உணர்வுக்கு வரையறை செய்து ஒரு பட்டாம்பூச்சியாய் உருவம் கொடுத்தவர்களுள் ஒருவர் தான் ஐயா பெ மணியரசன். அந்தப்  பட்டாம்பூச்சி சிறகு விரித்ததால்தான், 'தமிழன்டா' என்ற நிலநடுக்கம் நிகழ்ந்தது.



நம்மில் பலர் அவரை இத்தனை நாட்கள் அறிந்திருக்கவே இல்லை. இன்றைய அளவில் தமிழ்த் தேசிய அரசியலில் முழு முதிர்ச்சியுடனும், தெளிவுடனும் செயல்படும் ஒரே களங்கமில்லா தலைவர் பெ மணியரசன் என்றே சொல்லலாம். இன்னும் ஆழமாகப் பார்த்தால், இங்கு இருக்கும் எந்தக் கருத்தியல் அடிப்படையில் செயல்படும் எந்த தலைவரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். தாங்கள் கொண்டுள்ள கருத்தியலில் முழுப் பற்றுடனும், அதன் உண்மையான நோக்கத்துடனும், எந்த அரசியல் எதிர்ப்பார்ப்புமின்றி செயல்படுபவர் என்று அவர்கள் அனைவரயும் பட்டியலிட்டு வரிசைபடுத்தினால் அதில் மணியரசனைத் தான் முதலிடத்தில் வைக்கமுடியும்.

கடந்த ஞாயிற்றுகிழமை(சூன் 10) தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் மணியரசன் மீதும், உடன் வந்த சீனு என்பவர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திச் சென்றுள்ளார்கள்.

கடந்த சில நாட்களாக இங்கே போராடிவரும் பல தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இடதுசாரி போராளிகளுக்கும் தரப்படும் அழுத்தங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.  பலருக்கு நெருக்கடிகொடுகப்படுவதையும், மிரட்டல்விடபடுவதையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். தேர்தல் அரசியலில் இருக்கும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு ஒரு வகையிலும், களப்போராளிகளுக்கு ஒரு வகையிலும் அச்சுறுத்தல் தரும் அது, மணியரசனையும் விடவில்லை. வழக்கு, கடத்தல், மிரட்டல் என பிறருக்கு ஒரு வகை அச்சுறுத்தல் என்றால், இவையாவற்றுக்கும் அஞ்சாத மணியரசனுக்கு வன்முறை தான் பரிசளிக்கப்பட்டது.

தற்பொழுது தஞ்சை வினோதன் மருத்துவமனையில் மணியரசன் சிகிச்சை பெற்று வருகிறார். கால் மற்றும் கை விரல்களில் சிராய்ப்பு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பேருந்து நிலையத்திலிருந்து பின் தொடர்ந்து வந்து திடீரென தாக்கியதாக உடன் வந்த சீனு குறிப்பிட்டுள்ளார். யார் என்ன என்பது குறித்து தகவல் இல்லை.

இது உடனே தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் மட்டுமன்றி, இடதுசாரி இயக்கங்கள் முதல் திராவிட இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என, டி டி வி தினகரன் வரை பலரால் கண்டனத்துக்குரியதாக்கப்பட்டது. இந்த கண்டன அலைகளைத் தாங்க முடியாத அரசு, இதை சட்டமன்றத்தில் மேற்கோளிடவேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.  பின்தொடர்ந்து வந்தவர்கள் வண்டி மோதியதில் மணியரசன் தடுமாறி கீழே விழுந்தார் என முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார். சிலர், இதை வழிப்பறி எனவும் கூறினார்.



ஆனால், வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட மணியரசனோ, ''வழிப்பறிக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்றால் நான் அடிபட்டு நிலை தடுமாறி நீண்ட நேரம் கீழே கிடந்தேன். அப்போது என் பேக்கை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் அப்படி செய்யவில்லை. என்னை நிலைதடுமாற வைத்து தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். என் மீது நடத்தபட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தபட்டதாகவே நான் கருதுகிறேன்,'' என்றார்.

கடந்த மூன்று பத்திகளும் உங்களுக்கு ஒரு செய்தித்தாள் வாசிக்கும் அனுபவத்தைக் கொடுத்திருக்கலாம். அலங்காரமாக துவங்கிய இக்கட்டுரை திடீரென மரபுவழிக்கு மாறியதை உணர்ந்திருப்பீர்கள். எல்லாம் காரணமாகத்தான்.

ஒருவேளை நீங்கள் உண்மையிலேயே அவரைப்பற்றி கவலை கொண்டிருந்திருந்தால், குறைந்ததது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தால் நான் இப்படி ஒரு அலங்காரக் கட்டுரை எழுதி மணியரசனின் நிலை பற்றிய செய்தியை உங்களிடம் பகிரவேண்டி இருந்திருக்காது. அதனால் தான் நிலநடுக்கம் போன்ற இந்த செய்தியை உங்களிடம் சேர்க்க பட்டாம்பூச்சி போன்ற ஒரு கட்டுரை எழுத நேர்ந்தது. ஆனால், அவருக்காக வருத்தப்படவும், கோபப்படவும் "முதலில் அவர் யாரென்று தெரியவேண்டுமல்லவா?" என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம்.

நம் தலைமுறைக்கு, 'போராட்டம் என்றால் கூட்டமாக நின்றுகொண்டு கவனத்தை ஈர்த்து, உரிமையை மீட்பது' என்பதை அறிந்துகொள்ள, இந்த அரசுக்கு ஜல்லிக்கட்டு போன்ற ஒரு கலாச்சார அடையாளத்தை தடை செய்து நம் உணர்வுகளை உறுத்தி, உணரவைக்க வேண்டிய பெரும் பொறுப்பிருந்தது. ஆனால், மணியரசனுக்கோ போராட்டம் என்பது அன்றாடத்தின் ஒரு அங்கம். அவரும் இன்று வரை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருப்பது ஜல்லிக்கட்டு போன்ற இன்னும் பல அடையாளங்களை மட்டுமல்ல, மொத்த இனத்துக்கான விடுதலையும் தான். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக. அவரை அறியாமல் இருந்தது யார் தவறு?

காவிரி உரிமை மீட்புக்குழுவைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்கும்.  கடந்த பல ஆண்டுகளாக காவிரி நீருக்காக போராட்டங்களை ஒருங்கிணைத்து மக்களின் ஆதரவு பெரிதும் கிடைக்காமல், காவிரி ஆற்றின் உரிமையையும் மீட்க முடியாமல், வேறு வழியின்றின் மக்களின் கவனத்தை ஈர்க்கவும், பெரு முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கவும், ஐ பி எல் போட்டியை இந்த ஆண்டு சென்னையில் நடத்தவிடாமல் செய்ததே ஒரு இயக்கம், அதுதான் காவிரி உரிமை மீட்புக்குழு. யாருக்காகவோ போராடுகிறார்கள் என நினைத்து, ஒரு நாள் ஐ பி எலுக்காக நீங்கள் எதிர்த்தீர்களே, அதே இயக்கம் தான். அதை உங்கள் ஆதரவு இல்லாமல் பல ஆண்டுகளாகத் துவண்டுவிடாமல் ஒருங்கிணைத்து அவரை எதிர்த்த, எதிர்க்கின்ற உங்களுக்காகவே இன்னும் போராடிக்கொண்டிருக்கிறாரே, அவர் தான் மணியரசன். அவரை அறியாமல் இருந்தது யார் தவறு?

ஐ பி எல் போராட்டம் உங்களுக்கு கியாஸ் கோட்பாட்டின் நிலநடுக்கமாகத்தான் தெரிந்தது. ஆனால், அதற்குப்பின் மணியரசன் என்ற ஒரு பட்டாம்பூச்சியின் பல ஆண்டுக்கணக்கான சிறகடிப்புக்கள் மறைந்திருக்கின்றன. இந்த 2018ல் தமிழர் உரிமைக்காக போராட இத்தனை இயக்கங்கள் அவர் பின் நிற்கிறதென்றால், அது அவருடைய 30 ஆண்டுகால தன்னலமற்ற தமிழ்த்தேசிய உணர்வுக்குக் கிடைத்த வெற்றி.

இன்று திமுக, அதிமுக ஆதிக்கத்துக்குள், பாமக, விசிக போன்ற பெரும் தொண்டர் பலம்வாய்ந்த கட்சிகளுக்குக்கூட சாதிய அடையாளம் பூசப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சி போன்ற ஒரு தமிழ்த்தேசிய அடிப்படை கொண்ட இயக்கம் எந்த சாதி மத அடையாளமுமின்றி தனித்து நிற்கிறதென்றால், காரணம் அது மணியரசன் போன்ற பட்டாம்பூச்சிகள் என்றோ விதைத்த விதைகளாகத்தான் இருக்கும். ஏனென்றால், அவர்கள் புகட்டி வளர்த்த தமிழ்த்தேசிய உணர்வு அந்த வல்லமை பெற்றது.

ஜல்லிக்கட்டுப் புரட்சியை இத்தலைமுறை நிகழ்த்திக்காட்டியதும் ஒரு நிலநடுக்கம் தான். ஆனால் அதற்குப்பின், இத்தனை ஆண்டுகள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பிம்பத்தில் நம்மை ஒத்திசைக்க வைத்த இந்தியத்திடமிருந்து தமிழரின் தனித்தன்மையை மீட்டுவந்த மணியரசனைப்போன்ற பல தமிழ்த்தேசியப்  பட்டாம்பூச்சிகளின் போராட்டங்கள், தமிழன்டா என்ற சொல்லுக்குள் சுவடுகளாக அடங்கியிருக்கின்றன.

அப்பட்டாம்பூச்சிகள் இல்லையென்றால் இந்நிலநடுக்கங்கள் இல்லை. நிலநடுக்கத்தை மட்டுமே நம்பி பட்டாம்பூச்சிகளை மறந்து விடாதீர்கள். அவைகளைப் பாதுகாக்க விரையுங்கள்!

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூன் 12, 2018.

தோழர் மணியரசன் மீது தொடுக்கப்பட்ட வன்முறை பற்றிய செய்திக்குறிப்புகளும் படமும், தோழர் குபேரன் பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டவை.