Friday, 23 February 2018

என்றும் என் வாதம் எதிர்வாதம்

தொடர்ச்சியாக அரசியல் சார்ந்த பதிவுகளை எழுதிவருவதால், பலர் கேட்கும் கேள்வி. "உன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன?"

எனக்கென்று ஒரு குறிப்பிட்ட நிலைப்பாடு இருக்கிறதா எனக் கூறத்தெரியவில்லை. என்னுடன் பேசுபவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்துப் பேசுவதையே வாடிக்கையாக்கி பழகிவிட்டேன். இன்று நிலவும் பல அரசியல் கருத்தியல்களின் மீது விவாதம், எதிர்வாதம் போன்றவைகளில் ஈடுபடுவதில் எனக்கென்னவோ அத்தனை ஆசை. ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை என் தொழில் அப்படியென்பதாலோ என்னவோ.


அடிப்படையில் எல்லோரைப்போல நானும் தேசியவாதிதான். ஆனால் என் தேசம் எது என்பது வேறு.  அதனால் நீ தமிழ்த்தேசியனா என்றால், இன்னும் அதற்கான வரையரைச் சிக்கல் என்னை 'ஆம்' எனும் பதிலைச் சொல்லவிடாது தடுக்கிறது. தோழர் மணியரசனின் வரையரையா, அல்லது தூய்மைவாதிகளின் வரையரையா என்பதிலேயே பெருங்குழப்பம். ஆதலால், அந்த விவாதத்துக்குள் பிறகு செல்வோம்.

ஆனால், நான் கூறும் அந்த தேசத்துக்குள் என் அரசியல் நிலைப்பாடு எதிரில் இருப்பவருக்கு ஏற்றார்ப்போல் வேறுபடுகிறது.

நீங்கள் பெரியாரியம் பேசினால், நான் பெரியாரை விமர்சித்து அவர் இழைத்த பெருங்குற்றங்களைப்பற்றி உங்களுடன் வாதம் நடத்தவே ஆசைப்படுகிறேன். நீங்கள் பெரியாரை எதிர்த்தால், என் வாதம் பெரியாரிய ஆதரவில்தான் இருக்கும்.

நீங்கள் சீமானை கேலி செய்யும்போது, என் குரல் தமிழ்நாட்டை, தமிழன்தான் ஆளவேண்டும் என்றே கூற விரும்புகிறது. அதேவேளையில், நீங்கள் சீமானுக்கு சொம்பு தூக்கும்போது, உங்களுடைய, இந்தியச் சுவர்மீது சிறுநீர் கழிக்கும், அரைவேக்காட்டுத் தமிழ்த்தேசியத்தை, கேலிசெய்யத் தோன்றுகிறது. 

திருமுருகன் காந்தியை நீங்கள் புகழும்போது அவர் கருத்தியலிலுள்ள அடிப்படைச் சிக்கல்களை எடுத்துச்சொல்வேன். ஆனால் அவரைச் சிறையிலடைத்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் ஆள் நானாக்கத்தான் இருப்பேன்.

வைரமுத்து தமிழைக் காசுக்காக திரைப்படத்தில் கலப்படத்தோடு விற்றபோது கோபம்கொண்ட நான்தான், மதவாதம் அவரை இழிவு படுத்தியபோது எதிர்வாதமும் செய்தேன். 

நீங்கள் வைகோவை ஆதரித்தால் எதிர்ப்பேன், எதிர்த்தால் ஆதரிப்பேன். டிடிவி தினகரனின் ஆளுமை மீது எனக்கென்னவோ அப்படியொரு ஈர்ப்பு. அதற்காக தலைவன் என்ற இடத்தில் வைத்துப்பார்க்கும் அளவுக்கு அவரிடம் அரசியல் அறம் துளியும் இல்லை என்பதையும் உரக்கச்சொல்வேன். காங்கிரசுக்கும், திமுகவுக்கும் கூட ஒரு சில இடத்தில் இது பொருந்தும். என்னதான் நிகழ்காலத்து இனத்துரோகிகளாக இருந்தாலும், கடந்தகாலத்து காமராசரையும் அண்ணாவையும் தவிர்த்துவிட முடியாதல்லவா.

இறுதியாக, ஒருவேளை நீங்கள் பாசிச பாஜகவையும் இந்துத்வத்தையும் எதிர்த்தால், கவலை கொள்ளாதீர்கள், கண்ணை மூடிக்கொண்டு உங்களுடன் சேர்ந்து நானும் கலாய்ப்பேன்.

பி.கு. இந்த கமல், ரஜினி, பழனிச்சாமி, பன்னீர்செல்வம், அனைவரும் அந்த பாஜகவுக்குள்ளேயே அடக்கம்.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, பிப்ரவரி 23, 2018.

No comments:

Post a Comment