எண்ணாது துணிந்த கருமம் | Tamil Short Story

அதுவொரு பரபரப்பான பன்னாட்டு நிறுவனம். பல்லாயிரம் பணியாளர்களைக் கொண்டதும்கூட. அந்த ஊழியர்களெல்லாம் சிறப்பாக பணியாற்றி அந்நிறுவனத்தின் முதலீடுகளை இரட்டித்துக்கொண்டிருந்தனர். பிற நிறுவனங்களெல்லாம் அதிக வரவு ஈட்ட தங்கள் தயாரிப்புகளில் கலப்படம் செய்தபோதுகூட இந்த நிறுவனம் மட்டும் நேர்மையான முறையில் வணிகம் செய்து வந்தது. அதன் பணியாளர்களை அந்த நிறுவனம் சரியான முறையில் நடத்தியும் வந்தது. நான் உனக்கு மேலதிகாரி, நீ எனக்கு கீழ் வேலை பார்ப்பவன் என்ற எண்ணம் இல்லாமல் அனைவரும் நிறுவனத்தின் ஊழியர்கள் என்ற நிலையிலேயே பணிபுரிந்தனர்.


அப்போது, அந்நிறுவனம் புதிதாக ஒரு மனிதவளமேம்பாட்டு துறை மேலாளரை நியமித்தது. அந்நிறுவனத்தின் பிற ஊழியர்களைப்போலில்லாமல் அந்த புதிய மேலாளர் தன்னலம் கொண்டு பல நயவஞ்சக வேலைகளில் ஈடுபடத் துவங்கினான். ஊழியர்கள் அனைவரும் தனக்கெதிராக செயல்படக் கூடாதென்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களை அவரவர் பொறுப்பிற்கேற்றவாறு பிரிக்கத் துவங்கினான். முதன்மை அலுவலர்களை ஒரு நிலையிலும், மேலாளர்களை ஒரு நிலையிலும், துணை மேலாளர்களை அடுத்த நிலையிலும் என, அங்கிருந்த கடை நிலை ஊழியர் வரை அனைவரையும் பிரித்து அந்நிறுவனத்தில் ஒரு ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை விதைத்தான்.

அத்தனை நாட்கள் இருந்திராத அப்புதிய ஆதிக்கச் சிந்தனை திடீரென தங்களுக்குள் பரவியதும், அது அந்நிறுவனத்தின் உயர்நிலை ஊழியர்களுக்கு ஒரு புதிய சுகத்தைக் கொடுக்கத்துவங்கியது. அச்சுகம், கடைநிலை ஊழியர்களின் மீது ஆணை வடிவில் கடத்தப்பட்டு, செயல் வடிவில் திரும்பப்பெறப்பட்டது. அதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கவும் துவங்கியது.

தங்களுடன் சகபணியாளர்களாய் நின்று பணிபுரிந்தவர்களெல்லாம் தங்கள் தலைமீது ஏறி, அமர்ந்து, வேலைவாங்குவது அவர்களுக்கு வியப்பாகவே இருந்தது. நாட்கள் உருண்டோட, பணிச்சுமை மேலும் அதிகரிக்க, அந்த வியப்பு கோபமாக பரிணாமவளர்ச்சி அடைந்தது. கோபத்தில், நல்லவுள்ளம் படைத்த உயர் அதிகாரிகள் சிலர் கடைநிலை ஊழியர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கவும் துவங்கினர். ஆதரவுக்குரல் எழுப்பியவர்களை அந்த மனிதவள மேலாளர் இருவகையில் எதிர்கொண்டான். ஒன்று குரல் கொடுப்பவனின் குரலுக்குத் தேன் ஊற்றி தன் வசப்படுத்தும் முயற்சி. அதில் வசப்படாதவர்களின் குரல்வளையை நசுக்கி ஒடுக்குவது அடுத்த வகை.

காலங்கள் நகர நகர, அந்த நயவஞ்சக மேலாளர், தனக்கு ஒத்திசைத்த, தன்னைப்போலவே நச்சுக்கருத்துகளைக் கொண்ட ஊழியர்களையெல்லாம் உயர்ப்பொறுப்பில் அமர்த்தியும், பல கடை நிலை ஊழியர்களை மேலும் மேலும் அடிமை படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான். கடைநிலை ஊழியர்கள் பிரிவில் ஒரு குறுகிய உட்பிரிவை உருவாக்கினான். இந்த உட்பிரிவில் இருப்பவர்கள் பெரும்பாலும் உயர்நிலை ஊழியர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே அந்நிறுவனத்தில் சேர்க்கப்பட்டனர். கிட்டத்தட்ட அடிமைகளாக நடத்தப்பட்டனர். ஆனால், அவர்கள் அடிமைகள் என்பதை உணராத வண்ணம் அந்த உட்பிரிவுக்கு அலங்காரமாய் ஒரு பெயரையும் சூட்டினான். அதனாலேயே பலர் அப்பிரிவில் சேரவும் செய்தனர்.

அப்படிச் சேர்ந்த ஒரு அலங்கார அடிமை, அந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவருக்கு பணிவிடை செய்யும் பொறுப்பைப்பெற்றான். பொறுப்பிலிருந்தவன், அவன் சேவை செய்து வந்த அவ்வுயர் அதிகாரியின் ஆளுமையைக் கண்டு வியந்து அவரைப்போன்றே ஒருநாள் மாறவேண்டும் என விரும்பினான். அதனால், அவருடனேயே நாள் முழுதும் காலம்கடத்தி, அவருக்கு தேவையானதையெல்லாம் செய்துகொடுத்தான். பிற அலங்கார அடிமைகளைவிட இவனிடம் இருக்கும் ஆர்வத்தைக்கண்டு, அந்த அதிகாரி, ஒரு கட்டத்தில் அவனையும் உயர் அதிகாரியாக்க பதவியுயர்வு வழங்கினார்.

சில காலம் கழித்து, உயர்நிலையிலிருந்த யாரோ ஒரு நல்ல ஊழியர் அந்த அலங்கார உட்பிரிவின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து, அப்பிரிவை, அந்நிறுவனத்திலிருந்து போராடி நீக்கினார். இதுவரை இருந்தவர் இருக்கட்டும், இனி அப்பிரிவில் யாரும்  பணியில் அமர்த்தப்பட மாட்டனர் என்று முடிவெடுக்கப்பட்டது. அடிமைத்தனத்தை ஒழிக்க முற்பட்ட அவரை எதிர்கொள்ளமுடியாது அந்த மனிதவள மேலாளர் திணறினான்.

இன்னும் சில காலங்கள் கழிய, அந்த மனிதவள மேலாளர், அந்நிறுவனத்தில் உயர் பொறுப்புக்கு பதவியேற்றப்பட்டான். அந்நிறுவனத்தின் பணியாளர்களோ, அடிமையாக இருக்கிறோம் என்பதையறியாது அதற்குப் பழகிப்போய்விட்டனர்.

அப்போது ஒரு நாள், அவன் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் வஞ்சம் கொண்டம் உயர் அதிகாரக் கூட்டம், மனிதவள மேம்பாட்டுத் துறையிலிருந்த ஒரு கடை நிலை ஊழியனை அழைத்து, அந்நிறுவனத்தின் துவக்கம் முதல் அன்று வரை பணியில் இருந்த, இருக்கின்ற அத்தனை ஊழியர்களைப்பற்றியும் ஒரு முழு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கட்டளையிட்டனர். அவனும் இரவுபகல் பாராது தன் மொத்த திறனையும் கொண்டு ஒரு அறிக்கையை வரைந்தான். அந்த அறிக்கையில், முன்னொரு நாள் உயரதிகாரியாய் பொறுப்பேற்ற அலங்கார அடிமை பற்றியும் குறிப்பிட்டிருந்தான்.

அங்கு துவங்கியது சிக்கல். உயரதிகாரியாக இருந்த ஒருவரை எப்படி ஒரு கடைநிலை ஊழியன் அடிமை என்று குறிப்பிடலாம் என்று அந்நிறுவனத்தின் அந்த வஞ்சகக் கூட்டம் கேள்விகளைக் கேட்கத்துவங்கியது. தான் குறிப்பிட்டது உண்மைதானென அந்த கடைநிலை ஊழியன் அவன் அறிக்கையில் பிழையேதுமில்லையென உறுதியாக இருந்தான். தன் நிறுவனத்தின் பழைய ஆவணங்களின் அடிப்படையிலேயே அவன் அவ்வறிக்கையை வரைந்ததாக மேற்கோள் காட்டவும் செய்தான். தான் உண்மையாகவே முதலில் அடிமையாக இருந்து பிறகு உயர் அதிகாரியாய் மாற்றபட்ட விவரம் கூற அவரும் உயிருடன் இல்லாதது இவனுக்கு மேலும் பின்னடைவைத் தந்தது.

இதனைத் தொடர்ந்து, அவன் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டன. எதிர்ப்பலைகள் நிறுவனத்தின் கடைநிலை வரை வீசத்துவங்கியது. அன்றாட அடிமைகள் முதல் எஞ்சியிருந்த ஒரு சில அலங்கர அடிமைகள் வரை, பலர் தாங்கள் அடிமையென்பதை உணராது, அவர்களின் நிலைப் பற்றிதான் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது கூட அறியாது அவனுக்கு எதிராக கூக்குரல்களை எழுப்பினர்.

அவனோ, அவர்களுடைய அறியாமையின் அவல நிலைக்கண்டு ஒரு புறம் வருந்தியும், அவனைச் சுற்றி எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டு நகைத்தும், அதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என்று முடிவெடுத்தான். தன் அறிக்கையில் ஒருவேளை உண்மையிலேயே பிழையிருந்தால் அதற்கு அவன் வருந்துவதாகக் கூறி தன் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டான். இவர்களின் அறியாமை நீங்க சில காலம் பிடிக்கும், அதுவரை அமைதி காப்போம் என்று மனதில் நினைத்துக் கொண்டு விடைபெற்றான்.

அவன் நினைத்தது போன்றே எதிர்கால நிகழ்வுகளும் நடந்தேறியது. அவன் விடைபெற்றதும், அந்த அறிக்கை பற்றிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மோனத்தையெட்டியது.

இயல்பு நிலைக்குத் திரும்பிய மறுநொடி, மீண்டுமொரு சிக்கல் உதித்தது. அதே போன்று வேறு துறையிலிருந்த வேறு கடைநிலை ஊழியனுக்கு இப்புதிய சிக்கல். மீண்டும் எதிர்ப்பு, போராட்டம், மன்னிப்பு என இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச் சங்கிலியாக நிகழ்ந்து கொண்டேயிருந்தன.

இத்தொடர் நிகழ்கவுகளால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தம் சகிப்புத்தன்மையை இழக்கத்துவங்கினர். ஒரு புள்ளியில் அது உச்சத்தை எட்டியது.

அப்போது, பணியாளர்கள் அனைவரும் இணைந்து இதை தங்கள் நிறுவனத்தின் முதலாளியிடம் முறையிடுவோம் என முடிவெடுத்தனர். அந்நொடியில் தான் ஒன்றை உணர்ந்தனர். தங்கள் நிறுவனத்தின் முதலாளி யார் என்று யாருக்குமே தெரியவில்லை. குழம்பிய படியே முதலாளி பற்றிய விவரத்தைச் சேமிக்கத் துவங்கினர். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி.

அந்நிறுவனத்துக்கென ஒரு தனி முதலாளி இல்லை என்பதும், அங்கிருக்கும் ஒவ்வொரு பணியாளனுக்கும் அந்நிறுவனம் சொந்தம் என்றும் கண்டறிந்தனர். இதையடுத்து, அச்சிக்கல்களுக்கான வேரைத் தேட முற்பட்டபோதுதான் தாங்களெல்லாம் அத்தனை நாட்கள் அடிமையாய் இருந்ததும் அவர்களுக்குத் தெரியவந்தது.

அதற்கான காரணத்தை ஆராயும் போது தான் அந்த வஞ்சக உயரதிகாரியும், அவனைச் சார்ந்த கூட்டமும் செய்து வந்த சூழ்ச்சி அவர்களுக்குப் புலப்பட்டது. அத்தனை நாட்கள் அவர்கள் அடிமையென்பதை உணராத அடிமைகளாகவும், பணியுயர்வு கொடுக்கப்பட்டவர்கள் அடிமையென்பதை உணராத அதிகாரிகளாகவும் நடத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். அவர்கள் அடிமைகளாய் இருப்பதை உணராமல் இருப்பதற்காகவே மீண்டும் மீண்டும் அவர்களுக்குச் சிக்கல்கள் செயற்கையாக எற்படுத்தப்பட்டன என்பதை அறிந்தனர்.

இச்சிக்கல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஓரேவழி அந்த நயவஞ்சகக் கூட்டத்தை இங்கிருந்து விரட்டுவதுதான் என்று அவர்கள் இவ்வளவு காலத்துக்குப்பின் உணர்ந்தனர். என்றோ ஒருநாள் சரி தவறு என்று வேறுபாடு அறியாது, அக்கூட்டத்தின் நயவஞ்சகத்தைப் பற்றி உணராது, அவர்களை உள்ளே சேர்த்துக் கொண்டதுதான் அனைத்துக்கும் காரணம் என்பதை இறுதியாக உணர்ந்தனர். நீண்ட காலமாக இங்கே அனைவரும் உயர்வு தாழ்வின்றிதான் இருந்தோம், அவர்கள் தான் அதை கலைக்கவும் செய்தனர் என்றும் ஒரு வழியாக உணர்ந்தனர். மேலும் அவர்களை விரட்டவும் முனைந்தனர்.

ஆனால் அதற்குக் காலம் கைக்கொடுக்கவில்லை. காரணம் அங்கிருந்த எந்த ஊழியருக்கும் உண்மையில் யாரெல்லாம் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், அதிலும் சில நல்லவர்கள் இருக்கிறார்களே, இதில் யாரை வைத்திருப்பது, யாரை விரட்டுவது போன்ற குழப்பங்கள் உருவெடுத்தன.

அந்நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரைப் பற்றிய அத்தனை உண்மைமைகளும் அறிந்த ஒருவனையும் எதிர்புத் தெரிவித்து, போராடி விரட்டிவிட்டோம், இப்போது அவனிருந்திருந்தால் இக்குழப்பங்களெல்லாம் நேர்திருக்காதே என குற்றவுணர்வுடன் அவர்கள் விளைவறியாது இழைத்த தவற்றினை எண்ணி, நொந்து,  மீண்டும் அடிமையாகவே காலத்தை கடத்தினர்.

ஆனால், விரட்டியடிக்கப்பட்ட அவனோ, இவர்கள் நிலையைக்கண்டு எங்கோ ஒரு மூலையிலிருந்து அயர்ந்து, அமர்ந்து, ரசித்து, எள்ளி நகையாடிக் கொண்டிருந்தான்.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சனவரி 23, 2018.