Monday, 13 November 2017

லட்சுமி, குறும்படத்துக்கு என்ன குறை?

அண்மையில் லட்சுமி குறும்படத்தை சில நண்பர்களின் அறிவுறுத்தலுக்குப்பின் கண்டேன். அறிவுறுத்தியவர்கள், என்னை, அப்படத்தைத் திறனாய்வு செய்யவும்கோரினர். முடிந்தவரையில் படத்தின் அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்துள்ளேன். இதோ உங்கள் பார்வைக்கு.குக்கர் விசில் அடிக்க, துவங்குகிறது திரைப்படம்.  அந்த நொடியில் அதிலிருந்து கிளம்பும் நீராவியும் தொடர்ந்துவரும் நுரையும் முதல் காட்சியிலேயே கண்களுக்கு விருந்தாகின்றன. ஆனால், அந்த குக்கர் விசிலின் கொண்டை கறுப்பு நிறத்தில் இருப்பது, ஏதோ அபசகுணத்தைக் குறிப்பதுபோலவே உள்ளது. இது, இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் பெரியாரியச் சிந்தனையாளர் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுபோலவும் உள்ளது. படத்தின் நிறம்கூட 'கறுப்பு' வெள்ளையிலேயே உள்ளது, பெரியாரியத்தை மேலும் அழுத்தமாக உணர்த்துகிறது.

தொடர்ந்து, லட்சுமி, தனது கணவனுக்கு அவள் சமைத்த உணவை டப்பாவில் அடைத்துக்கொடுக்கிறாள். நெகிழிப்பையில் டப்பாவை வைத்துள்ளதால் அதன் நிறம் தெரியவில்லை. கண்டிப்பாக அது கறுப்பாகத்தான் இருக்கவேண்டும். மேலும் நெகிழிப்பையை பயன்படுத்துவது சுற்றுசூழலுக்கு எதிரானது என்றும் இயக்குனர் இங்கே உணரவைக்கிறார்.

மேலும் படத்தின் கதாநாயகிக்கும் படத்துக்கும் 'லட்சுமி' (பாரத தேசத்தின் தேசிய மொழியில் 'லக்‌ஷ்மி') என்று பெயர்வைத்துள்ளதால் ஒருவேளை இயக்குனர் இந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் அவர் கண்டிப்பாக தமிழ்த்தேசியவாதி இல்லை என்பதுமட்டும் உறுதி. காரணம், இக்குறும்படத்தை வெளியிட்டுள்ள 'ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் உரிமையாளர், கெளதம் வாசுதேவ் 'மேனன்', ஒரு மலையாள வந்தேறி ஆவார். மேலும், லட்சுமி வேலைக்குப் போகும் தொடர்வண்டியை மறித்து ஏதோ காவிரிப் பிரச்சினைக்காக போராட்டம் நடப்பத்தால், அவள் வேலைக்குச் செல்வது தடைபடுகிறது. இதன்மூலம், தொடர்வண்டிமறிக்கும் தமிழ்த்தேசியப் போராளிகளால் பெண்கள் வேலைக்குச் செல்லமுடிவதில்லை என்கிற சமூக அவலத்தையும் கண்முன்னே கொண்டுவருகிறார் இயக்குனர்.

அதேவேளையில், படத்தில் வரும் கதிர் என்ற காதாப்பத்திரம் அரிவாள் போன்று கூர்மையாக இருக்கும் கத்தியை வைத்து ஒரு காட்சியில் காய்கறி நறுக்குகிறார். இதன் மூலம் 'அரிவாளை' வைத்திருக்கும் 'கதிர்' ஒரு மார்க்சீய சிந்தனையாளர் என்றும் இயக்குனர் மறைமுகமாகக் கூறுகிறார்.

எனக்கு அரசியல் பிடிக்காது, அதனால் இதற்குமேல் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆகவே, தொடர்ந்து படத்தைப் பற்றி.

கணவனையும் மகனையும் வேலைக்கு/பள்ளிக்கு அனுப்பிவிட்டு, லட்சுமி அவளுடைய அலுவலகத்துக்கு கிளம்புகிறாள். புடவை அணிந்து வேலைக்குச் செல்கிறாள். படம் கறுப்பு வெள்ளையில் உள்ளதால் லட்சுமியின் புடவை நிறம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் லட்சுமியின் பக்கத்து வீட்டுக்கார அம்மா, அந்த  புடவையின் விலையையும் கேட்டிருப்பாள். நல்லவேளை.

அவள், அலுவலகத்துக்கு தொடர்வண்டியில் அமர்ந்து செல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலை பீக்ஹவரில் எந்த மின் தொடர்வண்டியில் அவ்வளவு இடம் உள்ளது என்று தெரியவில்லை. இயக்குனர் அதை விவரித்திருக்கலாம். இதுவே இந்த இயக்குனர் படத்தில் தவறவிட்ட ஒரே விவரம். மற்றபடி லேத்தில் வேலை செய்யும் ஆணுக்குத் தோழிகள் இருப்பதில்லை, ஆம்லேட் போடும்போது மஞ்சள் கரு உடைந்து, வெள்ளைக்கருவோடு கலந்து, பரவுவது போன்ற இடங்களில் உள்ள நுணுக்கமான விவரங்கள் அனைத்தும் மிகச்சிறப்பு.

படத்தில் வரும் பாடல்களைப்பொறுத்தவரையில், புதுமுக பாடலாசிரியர் பாரதி எழுதியுள்ள

'அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ'

என்ற வரிகள் கொஞ்சம் பரவாயில்லைரகம் தான். எனினும், புரட்சிப் பாவலர்கள் மதன் கார்க்கி, விவேகா, சிநேகன், சிலம்பரசன் மற்றும் தனுஷிடம் பாடம் படித்துவிட்டு வந்திருந்தால் பாடல் வரிகள் கேட்கும்படியாக இருந்திருக்கும்.

பாடலாசிரியர் பாரதியின் வரிகள் சரியான பொருள் தரத்தவறும் நிலையிலும், இயக்குனர், அவ்வரிகளுக்கு புதிய பொருளைக்கொடுத்திருப்பது அவருடைய அறிவுக்கூர்மையைக் காட்டுகிறது. குறிப்பாக, 'கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளு...' என்கிற வரிகளுக்கு ஏற்றார்போல, லட்சுமியின் காதலன் கதிருக்குக் கலைவடிவம் கொடுத்திருப்பது மேலும் சிறப்பு.

படத்தில் வரும் ஒரு காட்சியில் லட்சுமி, தன் கணவன் சேகருக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பை அவன் சொல்லையும் மீறி அனுமதியின்றி எடுத்துப்பேசுகிறள். இந்த இடத்தில் லட்சுமி கதாப்பத்திரத்தின் வீரத்தைப் பதிவு செய்திருப்பது உச்ச கட்டம். அதேபோல், தனக்கு கணவன் இருந்தும், கதிருடன் ஏற்படும் காதலுக்கு நீதி சேர்க்க இயக்குனர் கூறவரும் காரணங்களும் அழகு. அதாவது, லட்சுமியின் கணவன் பெயர் 'சேகர்'. ஒரு காலத்தில், சிட்டி, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, மதுரை, தேனி என்று, உலகமுழுக்க, உள்ள நகரங்களை அச்சுறுத்திய நாய் 'சேகர்' என்ற பெரும் ரவுடியின் பெயரை வைத்து, அவனை ஒரு வன்முறையின் அடையாளமாகவும், அதேவேளையில், இதயம், காதலர் தினம், காதல் தேசம் மற்றும் காதல் வைரஸ் போன்ற காதல் காவியங்களை இயக்கிய இயக்குனர் கதிரின் பெயரை வைத்து தன் படத்தின் கதிர் கதாப்பாத்திரத்தை, காதலுக்கான அடையாளமாகவும் சித்தரித்திருப்பது இயக்குனரின் தந்திரம்.

இப்படிப்பட்ட பல நுணுக்கமான குறியீடுகளையும், உள்கதையையும் வைத்திருக்கும் லட்சுமி குறும்படத்துக்கு என்ன குறை?

இதற்கிடையே, இந்தக் குறும்படத்தை, இப்போது ஏன் வெளியிட வேண்டும் என்கிற ஐயமும் பலருக்கு வரலாம். எனக்குத் தெரிந்த வரையில், இதன் இயக்குனர் சர்ஜுன் இயக்கி விரைவில் இன்னொரு திரைப்படம் வெளிவரக்காத்திருக்கிறது. நடிகர் சத்யராஜ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் (மீண்டும் ஒரு லட்சுமி) நடித்திருக்கும் அத்திரைப்படம், 'எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்திரைப்படம் வரும்வேளையில், 'லட்சுமி இயக்குனரின் அடுத்த படைப்பு' என்று கூறி விளம்பரம் செய்யத்தான் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான் நம்பவில்லை. எதற்கு அப்படி விளம்பரம் செய்யவேண்டும்? ஒருவேளை உண்மையிலேயே விளம்பரப்படுத்த வேண்டுமென்றால், இப்படி கூட கூறலாம்.

'எச்சரிக்கை! இது இயக்குனர் சர்ஜுனின் திரைப்படம்'

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, நவம்பர் 13, 2017.

No comments:

Post a comment