Tuesday, 29 August 2017

ஓர் கடமை நினைவூட்டல்

இன்று காலை வேலைக்குச் செல்லும் வழியில் (வடபழநி) எங்கள் தெருமுனையில் ஒரு 5 நிமிட நிகழ்வு.

Representational image only
இரண்டு துப்புரவுப் பணியாளர்களை (பெண்கள்) யாரோ ஒருவர் கடிந்து கொண்டிருந்தார். அவர் உடையும், உடல் மொழியும், அவரை உயர் அதிகாரி என்று காட்டிக்கொடுத்தது. முதலில் அவர்களைக் கடந்து சென்றபோது அந்த உயர் அதிகாரி என்ன கூறிக் கொண்டிருந்தார் என தெளிவாகக் கேட்கவில்லை.
சிறிது தூரம் கடந்து சென்றிருப்பேன். ஏதோ தோன்றியது எனக்குள். எதற்காகக் கடிந்து கொண்டிருக்கிறார் என்று அறிந்து கொள்வதற்காகவாவது போய் பார்ப்போம் என்று திரும்பினேன்.

அவர்களை நெருங்க நெருங்க அந்த உயர் அதிகாரியின் வசை கேட்கத்துவங்கியது. "அந்த வீட்டுக்காரரு அன்னிக்கு திட்டுறாரு. வீட்டு வாசல் முழுக்க குப்பை அப்படியே விட்டுட்டீங்கனு. இன்னிக்கு இந்தப் பக்கம் உள்ளவங்கலாம் திட்டுறாங்க. என்னம்மா இப்படி அரைகுறை வேலை பண்ணுறீங்க". இதைக் கூறிக்கொண்டே தொடர்ந்தார், "நாலஞ்சு தலைமுறையா இந்த வேல பண்ணுறீங்கனுதான உங்கள நம்பி இந்த வேலையக் குடுக்குறோம். இப்படி இருக்கீங்களே".

எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. அவர்களுக்கு அருகில் வண்டியை நிறுத்தி "என்ன உங்க இஷ்டத்துக்குப் பேசிகிட்டு இருக்கீங்க?" என்று சிறிது மிரட்டலாகவே குரலை உயர்த்திக் கேட்டேன். முதலில், 'நீ யார் என்னைக் கேள்வி கேட்க' என்றுணர்த்தும் பார்வையை என் மீது வீசியபடியே என் வண்டியின் முன் புறத்தைப் பார்த்தார். அப்படியே பார்வையில் ஒரு மாற்றம்.
சற்று பணிந்த குரலில் "இல்ல சார் வேலைய ஒழுங்கா பாக்க மாட்டேங்குறாங்க வீட்டுக்காரங்கல்லாம் என்னப் புடிச்சு திட்டுறாங்க".

"அதுக்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவீங்களா?"

"அது இல்ல சார்".

"என்ன இல்ல. நீங்க என்ன பல தலைமுறையா உயர் அதிகாரியாவே இருக்கீங்களா. இல்லைனா இங்க இருக்குறவங்கலாம் அவங்க குடும்பத் தொழில் தான் பண்ணுறாங்களா? விவசாயம், நெசவு, தச்சுவேலை, இதெல்லாம் பண்ணுன எல்லாரும் இப்ப என்ன அந்த வேலையே பாத்துட்டு இருக்காங்களா. இதுக்குலாம் மேல இங்க நாடோடியா காட்டுமிராண்டியா வந்த ஒரு கூட்டம் இப்போ நம்ம தலை மேல ஏறி உக்காந்திருக்கல? அப்பறம் இவங்கள மட்டும் ஏன் இப்படி ஒதுக்கி வச்சிருக்கீங்க?"

இதைக் கூறி முடித்தபோது எனக்கே ஏதோ சங்கர் பட வசனம் பேசியது போல் செயற்கையாகத் தான் தோன்றியது.

இருந்தாலும் உண்மையைத் தான் கூறினேன் என்பதால் கோபம் தணியாமல் தொடர்ந்தேன். "இவங்க வேலைய இவ்வளோ குறை சொல்லுறீங்களே, நீங்க உங்க வேலைய ஒழுங்கா செய்யுறீங்களா?"

அவர்கள் கைகளைச் சுட்டி "இவங்களுக்கு கையுறை குடுத்தீங்களா... முகத்துக்கு உறை குடுத்தீங்களா... சுத்தம் செய்யுறதுக்குத் தேவையான எல்லா எக்கியுப்மெண்டும் குடுத்தீங்களா... இவங்களுக்கு ஒப்பந்தம் பண்ணும்போது பேசிய அதே ஊதியம்தான் குடுக்குறீங்களா?"

நான் கேள்விகளை அடுக்க அடுக்க அந்த அதிகாரி கொஞ்சம் திணறிப்போனார். அதே திணறலுடன் சற்று உரத்த குரலில் "சம்பளம்லாம் ஒழுங்காதான் குடுக்குறோம் சார்" என்றார்.

அவர் கூறி முடித்த நொடியில் அந்த இரு பணியாளர்களிடம் திரும்பி "அப்படியாமா?" என்றேன்.

யார்தான் உயர் அதிகாரி முன் உண்மையைக் கூறுவார்? அந்த இரு பெண்களும் எதுவும் பேசாமல் என்ன கூறுவதென்று அறியாமல் அமைதி காத்தனர்.

நான் மீண்டும் அந்த அதிகாரியைப் பார்த்து, "நான் இந்த ஏரியா தான். தினமும் இந்த பக்கம் தான் வேலைக்கு போவேன். இன்னும் ரெண்டு நாள்ல இவங்களுக்கு தேவையான கையுறை, கருவியெல்லாம் வந்திருக்கணும். இல்லனா அவ்வளோதான்" என்று கட்டளையிட்டு கிளம்பினேன்.
நான் செய்தது சரியா என்றுத் தெரியவில்லை. அந்த அதிகாரிக்கு மேல் உள்ளவர்கள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இருந்தும் எனக்குத் தோன்றியதைச் செய்துவிட்டேன். இந்தப் பதிவை என் சாதனைப் பரப்புரையாக நான் எண்ணவில்லை. இது சாதனையுமல்ல. கடமை. நம் அனைவருக்குமானது.

நாம் அனைவரும் தினமும் இதை எங்கோ ஒரு இடத்தில் கடந்தே வருகிறோம். அப்போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் நம் அதிகாரத்துக்குட்பட்டு அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டலாம். ஆதலால், இந்தப் பதிவை ஓர் கடமை நினைவூட்டல் பரப்புரையாகவே நான் கருதுகிறேன்.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, ஆகஸ்டு 29, 2017.

No comments:

Post a Comment