Thursday, 24 August 2017

கழிவினில் கரைந்த கடவுள்

நண்பர்களுடன் நடந்து சென்ற பாதையில் காவல் துறை நிமிர்ந்து நிற்க...
காதலர்கள் இணை இணையாய் காலம் கடத்திய தெரு விளக்குக்கம்பத்தடியும் வேலியின் வசப்பட...
இரவலர்களின் இரவுறக்கத்துக்குத் துணை நின்ற மதிற்சுவரோ மேடையிரண்டைத் தாங்கிப் பிடிக்க...
நடுத்தர வர்க்கத்தின் அந்தி நேரச் சுற்றுலாத் தளத்திலோ ஆயிரம் மாற்றங்கள்...


நிலை தவறிய மருதமோ பாலையாகுமென்பார்...
மலையிடைத் தோன்றி மருதம் காத்த பொன்னியவளைத் தடுத்து...
கலை தோன்று நாட்டின் குடியவர் வீட்டினில்...
உலை தோன்ற உதவமறுத்ததால்...
வங்கத்தின் கரை சேர்வாள்
ரங்கத்தைத் தொடுமுன்பே பாலையானாள்...

அப்பொன்னியின் கரைகளைக் கோர்த்து மாலைப் பொழுதை அலங்கரித்த பாலமிதில்
காவலரும் ஊர்வலரும் மட்டுமே காட்சி தர...
கோட்டைநகரின் கழிவு நீரோடும்
எற்பாட்டில் மின்னியவள் பொன்னியவள் மேனியினில்..

தேங்கி நின்ற கழிவதனில்
வாங்கி வந்த சிலைகளினை
ஓங்கி ஓங்கி அடித்துடைத்து
நீங்கியவர் இறையடியாரோ?

பின்னே வந்தார் காவியுடையார்
முன்னே செய்த செய்கையெல்லாம் பழிக்க வந்தார்
என்னே இது கழிவிலே கடவுளா என்றார்
பன்னீரிலே உரைத்து விட்டு தண்ணீரிலே கரைத்துவிடச் சொன்னார்...

காவியோடு வந்தவர் கடவுளாதலின் கழிவைக் கண்டார்...
ஆவி மட்டுமெஞ்சிய உழவனுக்குக் தேவையதை மறந்தார்..
கூவியவர் போகட்டும் ஆனால்
பாவியிதில் தமிழனன்றோ?

- சந்தோஷ் மாதேவன்
திருச்சி, செப்டம்பர் 8, 2016.
நிழற்படம்: அசோக் குமார்

கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சியில் நீரில்லாத காவிரியின் ஓரத்தில் ஓடிய கழிவுநீரில் விநாயகர் சிலைகளைக் கரைத்த செய்தியின் பின்னணியில் நான் இயற்றிய பா.

No comments:

Post a Comment