Friday, 21 July 2017

எடப்பாடி பழனிச்சாமியும் சடகோபன் ரமேஷும்

"ஆறு மாதங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிச்சாமியை யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை எப்படி முதல்வராக ஏற்றுக் கொள்வது."- இன்று பலரிடம் எழும் கேள்வி இது.

நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மேலும் நெடுஞ்சாலைத் துறைக்கும் சிறு துறைமுகங்கள் துறைக்கும் அமைச்சராகவும் இருந்த ஒருவரை அறியாமல் இருந்தது அவர் தவறு என நீங்கள் கூறுவதை ஏற்கமுடியவில்லை.

ஒருவேளை நீங்களும் ஜெயலலிதாவை மட்டுமே அதிமுக என்று நம்பிவிட்டீர்களோ என்னவோ? அப்படியானல் அதிமுக தொண்டர்களுக்கும் உங்களுக்குமிடையே எந்தவித வேறுபாடுகளையும் என்னால் காணமுடியவில்லை. அவர்களாவது கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பிம்பத்தில் ஜெயலலிதாவை வணங்கினர். ஆனால் நீங்களோ கண்மூடித்தனமாக ஜெயலலிதாவை மட்டுமே அதிமுக வின் ஒற்றைக் கொள்கை என நம்பியிருக்கிறீர்கள். அடிப்படையில் அந்தக் கட்சிக்கு உண்மையிலேயே கொள்கை என்று எதுவும் உள்ளதா இல்லையா என்பது வேறு.

இப்படியிருக்கும் நிலையில், பொதுவுடமை, சமூக நீதி, இன உரிமை, தேசியம் போன்ற நுட்பம் வாய்ந்த கருத்தியல்கள் இல்லை, இந்துத்துவா போன்ற அடிப்படையற்ற கருத்தியலைக் கூட உங்களுக்கு புகட்ட முடியாது. காரணம் நீங்களெல்லாம் நுகர்வுக் கலாச்சாரக் குட்டையில் முங்கிக் குளித்தவர்கள் அல்லது முக்கி எடுக்கப்பட்டவர்கள்.

இந்த இடத்தில் நுகர்வுத்தன்மை எப்படி குற்றவாளியாகிறது என்றக் கேள்வி எழலாம். உதாரணத்துடன் விவரிக்கிறேன். நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒரு பன்னாட்டு சாக்கலேட் பானம். என் சிறுவயதில் அதன் விளம்பரத்திற்கு சச்சின் தூதர், பின்பு சேவாக், தோனியைத் தொடர்ந்து இப்போது விராட் கோலி. வேடிக்கை என்னவென்றால் இந்த மூன்று தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குமே ஒரே வசனம் "Is the secret of my energy".

இப்போது அந்த பானத்துக்கு பதிலாக முதல்வர் இருக்கையையும் சச்சினுக்குப் பதிலாக கருணாநிதியையும் பொருத்திப்பாருங்கள். ஒருவேளை அந்த சாக்கலேட் பான விளம்பரத்தில் சச்சினுக்குப் பதிலாக சடகோபன் ரமேஷ் நடித்திருந்தால்? இப்போது நீங்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை சடகோபன் ரமேஷாகத்தான் பார்க்கிறீர்கள். இவ்வளவுதான் நுகர்வுக் கலாச்சாரம்.

Representational image only
இன்றைய அரசியல், "face value"வை மையப்படுத்தி இயங்குகிறது. ஆனால், அந்த face value என்ன என்பதைத்தான் நாம் மறந்துவிட்டோம். இங்கேதான் இந்த நுகர்வுக் கலாச்சார நோய் நம் அரசியலையும் தொற்றிக்கொண்டது. இன்றைய அரசியல் சூழலில் face value என்பது ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் கொள்கைப்பிடிப்பு என்பது போய், தனி மனித பிம்பத்தை வணங்குவது என்றாயிற்று. கருணாநிதி, எம்ஜிஆரிடம் துவங்கி இன்று விஜயகாந்த் ரஜினிகாந்த் வரை கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கப்படுகிறது. அவர்களுடைய ஆட்சி வருகைக்காகவோ அல்லது ஒருபடி மேலே போய் அவர்களுடைய அரசியல் வருகைக்காகவோ காத்திருப்பது என்ற சூழல் உருவாகிவிட்டது. அவர்களுடைய அரசியல் கொள்கை என்ன என்பதைப் பற்றி எவரும் சிந்தித்ததாகத் தோன்றவில்லை. அதனால் தான் அவர்களும் கொள்கையை மையப்படுத்தி அரசியல் செய்வதில்லை என்பதையும் நாம் புரியவேண்டியிருக்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதா என்றே 30 ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்னமும் தலைவர்களைச் சார்ந்து நாம் நகர்ந்தோமானால் இப்போது இருப்பதைவிட இன்னும் பெரும் சிக்கலுக்குள்ளாவோம். தலைவர்களைவிடுத்து கொள்கை மற்றும் கருத்தியலை நோக்கிப் பயணிப்போம் வாருங்கள்.

ஏனென்றால் அரசியல் ஒன்றும் சாதாரண சாக்கலேட் பானம் இல்லையே.

- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூலை 21, 2017.

No comments:

Post a Comment