Wednesday, 8 March 2017

பெண்களைக் கொண்டாடுங்கள்... தினங்களை விடுங்கள்

பெண்ணே
உன்னைக் கொண்டாட ஒரு தினம் போதுமா
களைப்பே உன் உழைப்பின் மீதமா

பெண் பிறப்பைச் சாபமென்றான் சாத்திரம் பேசியவன்
தன் பிறப்பின் மூலமே பெண்ணென்று மறந்தான்
உன் உறுப்பை மட்டுமே தேவையென்றறிந்தான்
பெண் சிறப்பு என்னென்று அறியாமல் திரிந்தான்

பெண்ணே
உன்னைக் கொண்டாட ஒரு தினம் போதுமா
களைப்பே உன் உழைப்பின் மீதமா

ஆதிக்கம் சூழ்ந்திருக்க பல தடைகள் உனக்கு
சாதிக்கும் பெண்ணுக்கு பயமிங்கு எதற்கு
நீதிக்கு காலமில்லை பெண்ணே நீ வெளியே வா
சோதிக்கும் ஆளையெல்லாம் அழித்து உன் வழியே வா

பெண்ணே
உன்னைக் கொண்டாட ஒரு தினம் போதுமா
களைப்பே உன் உழைப்பின் மீதமா

கற்பென்பார் இழப்பென்பார் காவல் செய்ய மறந்தார்
அற்ப மனிதர் அவர் புறம் பேசவே பிறந்தார்
சொற்ப காலமே வாழ வந்தாய் நீ வெளியே வா
கற்க நினைப்பதெல்லாம் கற்க உன் வழியே வா

பெண்ணே
உன்னைக் கொண்டாட ஒரு தினம் போதுமா
களைப்பே உன் உழைப்பின் மீதமா

மழலையாய்ப் பிறந்து வஞ்சியாய் வளர்ந்து இல்லக்கிழத்தியாய் இறுதிவரை வாழும் உனை
தினந்தினம் கொண்டாட வேண்டாவா
பெண்ணே
உன்னைக் கொண்டாட ஒரு தினம் போதுமா
களைப்பே உன் உழைப்பின் மீதமா
தினங்களை விடுவோம் பெண்களைக் கொண்டாடுவோம்

- சந்தோஷ் மாதேவன்,
திருச்சி, மார்ச் 8, 2017.

No comments:

Post a Comment