Thursday, 10 November 2016

சோழநாடு சோறுடைத்து - ஒரு அனுபவம்

இன்று மதிய உணவுக்காக நகரத்தின் பல உணவகங்களைத் தேடி எந்த உணவக்காரருக்கும் பணத்தாளை நீட்டி சிரமத்தை கொடுக்கக்கூடாதென்ற நோக்கில் இறுதியாக தில்லைநகரில் உள்ள ரசிகாஸ் உணவகத்தை வந்தடைந்தேன். பணத்தாள் இல்லாவிடினும் அங்கே பற்றட்டை (Debit Card) தேய்த்தேனும் கட்டணம் செலுத்தலாம் என்றறிந்தே சென்றேன்.


நான் சென்றபோது உணவகம் ஆளரவமற்று காணப்பட்டது. அதன் தொழிலாளர்கள் மட்டுமே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்ததன் விளைவு அந்த உணவகத்தையும் விட்டு வைக்கவில்லை. நான் அங்கே அமர்ந்து எனக்கான உணவை வாங்கி உண்டு கொண்டிருந்தபோது தான் ஒரு சிலர் வரத்துவங்கினர்.

முதலில் இரு இளைஞர்கள் வந்து சற்று தயக்கத்துடன் 'அண்ணா ஐந்நூறு ரூபாய் வாங்கிக்குவிங்களா... எங்களுக்கு பார்சல் வேணும்' என்று கேட்டனர். கடை கல்லாவிலிருந்த கணக்கர் சிறிதும் யோசிக்காமல் 'அதெல்லாம் வாங்கிக்கலாம் பா... உங்களுக்கு என்ன வேணும்' என்றார் புன்னகைத்தவாறு. அவர்களைத் தொடர்ந்து சிலர் வந்து உணவை வாங்கியும் அங்கேயே உண்டும் சென்றனர். வந்த அனைவரிடமும் 500, 1000 ருபாய்த்தாட்களை அவர் வாங்கத் தயங்கவில்லை என்பது எனக்குப் பெரும் வியப்பாகவே இருந்தது.

காரணம் இன்று நகரின் அனேகப் பகுதிகளிலிருக்கும் உணவகங்களும் முன்னறிவிப்பில்லா கடையடைப்பை நடத்தியிருந்தனர். கடையைத் திறந்திருந்த சிலரோ 500, 1000 பணத்தாள் பெறப்பட மாட்டாதென்று பதாகைகளை ஒட்டியிருந்தனர். இதற்கு மத்தியில் இப்படியொரு உணவகம் என்பதே வியப்புக்கான காரணம்.

பசி, வெயிலின் தாக்கம், பிற கடைகளில் கிட்டிய ஏமாற்றமென்று பலவற்றைத் தாண்டி உணவுக்கான எதிர்பார்ப்பில் வருபவர்களிடம் இல்லை என்று சொல்லத் தோன்றாத மனநிலையே அங்கே முழுமையாக வெளிபட்டது. என் உணவுக்கான கட்டணத்தை பற்றட்டை மூலம் அடைத்து விட்டு அலுவலகம் திரும்பினேன்.

வழியில் உணர்ந்தது ஒன்றுதான். எளிதில் வந்த புகழாரமில்லை 'சோழநாடு சோறுடைத்து' என்பது. காலங்கடந்து நிற்கும் பண்பு அது.

Santhosh Mathevan
திருச்சி, Nov 9, 2016.

No comments:

Post a Comment