Sunday, 14 June 2015

எங்கே தொலைந்தது நம் போராட்டக் குணம்?

இன்றைய இளைஞர்கள் அல்லேலூயா பாடுவதற்கும், பாரத மாதாகி ஜே கூறுவதர்க்கும்,  அல்லாஹு அக்பர் முழங்குவதர்க்கும் முன் வருவதில் ஈடுபாடு காட்டும் அளவிற்கு இன விடுதலைக்கும் தமிழ்த் தேசியம் பேசுவதற்கும் முன்வருவதில்லை என பல தமிழ்த் தேசியவாதிகள் கருதுகிறார்கள்.


இதற்கான அடிப்படை காரணமென்று நான் கருதுவது, இன்றைய இளைய சமுகத்திடமுள்ள போராட்டக் குணத்தின் அளவுப் பற்றக்குறையே. உதாரணத்துக்கு என் வாழ்க்கை நிகழ்வு ஒன்றை நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மேற்படிப்புக்கான சேர்க்கைக்காக நான் மும்முரமாக யோசித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் என் குடும்பத்தினரின் கட்டாயத்தின்பெரில் பொறியியல் பட்டப் படிப்பைத் தேர்வு செய்யவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டேன். என் ஆர்வமனைத்தும் தமிழிலக்கியத்தில் இருந்தபோதும் அதனைத் தேர்வு செய்ய என் குடும்பத்தினரால் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை என்னிடம் ஒரு போராட்டக் குணம் அன்றய காலக்கட்டத்தில் இருந்திருக்குமானால் நான் இந்தப் பதிவை இதைவிட சிறந்த நடையில் இயற்றியிருந்திருப்பேன்.

சிலருக்கு இந்த உதாரணம் மிக அற்பமானதாகத் தெரியலாம். இன விடுதலைப் போராட்டத்துக்கும் இதற்கும் இடையில் ஒரு தொடர்பு எற்படுத்தி ஒப்பிட்டுப் பார்ப்பது சிக்கலாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு மனிதனின் அடிப்படை குணநலன்கள் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுவது வீட்டில்தான் என்பது ஒர் உளவியல் உண்மை. நம் பெற்றோர் தலைமுறைக்கு முந்தய தலைமுறை சுதந்திரப் போராட்டத்தின் உச்ச காலக்கட்டத்தில் பிறந்தவர்கள், வளர்ந்தவர்கள். அதனால் அந்த குணம் அடுத்தத் தலைமுறைக்கு கடத்தப்படுவதில் பெரிய கடினத்தன்மை இல்லை. அதனால்தான் அவர்கள் இந்தி எதிர்ப்பு, ஈழ விடுதலைப் போன்ற போராட்டங்களில் எளிதாகக் களமிறங்கினர். எனினும், இவ்விரு போராட்டங்களும் முழுமையான வெற்றியை ஈட்டத் தவறின என்பது வரலாறு. அதனால் சென்ற தலைமுறையினர் போராட்டங்களின் உண்மையான வெற்றியை அனுபவிக்காத காரணத்தினால் அதற்கடுத்தத் தலைமுறையான இன்றைய இளைய தலைமுறைக்குக் அக்குணம் கடத்தப்படவில்லை.

இதுவொரு நீண்ட நெடுங்கால வரலாற்றுச் சிக்கல். நம் தலைமுறை இச்சிக்கலைக் கடந்துவருவதற்கு இந்த இன அடிமைத்தனத்தின் தீவிரம் அவர்களால் உணரப்படவேண்டும்.

No comments:

Post a Comment